search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்- திருநாவுக்கரசர்
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்- திருநாவுக்கரசர்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #18MLAs
    கோவை:

    ஊட்டியில் அரசு பஸ் பள்ளத்தில் உருண்டு 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் அரசு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம், போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    அதே போல் ஊட்டி பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    ஊட்டி மலை பாதை அதிக வளைவு, நெளிவுகளை கொண்டது. எனவே அங்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டியில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு மல்டி ஸ்பெ‌ஷல் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

    தற்போது அங்கு மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையில் மல்டி ஸ்பெ‌ஷல் மருத்துவமனை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஊட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    ஜனாதிபதி நிராகரித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. கோர்ட்டு மூலம் தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இது ஏற்புடைய கருத்து அல்ல.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியில் உள்ளார்களா? இல்லையா? என்பதில் பிரச்சனை உள்ளது.

    நீதி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது. தற்போது 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டு உள்ளது. காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே 8 மாதம் ஆகி விட்டது. இப்பிரச்சனை 18 எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மக்கள் பிரச்சனை.

    ஒரு தொகுதிக்கு சுமார் 2 லட்சம் மக்கள் இருந்தாலும் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 45 லட்சம் மக்களின் பிரச்சனை ஆகும். மேலும் அரசுக்கு ஸ்திரதன்மை உள்ளதா? என்பது இந்த தீர்ப்பில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், நிர்வாகிகள் உமாபதி, சவுந்திர குமார், கணபதி சிவகுமார், துளசி ராஜ், கேபிள் வினோத், காமராஜ்துல்லா, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Congress #Thirunavukkarasar #18MLAs
    Next Story
    ×