search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ராகுல்காந்தியை இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்தித்த காட்சி.
    X
    டெல்லியில் ராகுல்காந்தியை இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்தித்த காட்சி.

    தமிழக காங்கிரசுக்கு எழுச்சியூட்டும் தலைமை வேண்டும்- ராகுல்காந்தியிடம் இளங்கோவன் ஆதரவாளர்கள் மனு

    தமிழக காங்கிரசுக்கு எழுச்சியூட்டும் தலைமை வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் இளங்கோவன் ஆதரவாளர்கள் மனு அளித்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் இடையேயான கோஷ்டிபூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், வசுந்தராஜ் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் செயல்பாடு பற்றி 3 பக்க புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் தோல்விகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் தொண்டர்கள் உற்சாகம் இழக்காமல் இருந்தார்கள். ஆனால் இப்போது சோர்வுடனும், விரக்தியுடனும் இருக்கிறார்கள்.

    ஜி.கே.வாசன் பிரிந்து சென்றபோது காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் கட்சி எவ்வித சேதாரமும் இல்லாமல் இருந்ததை திருச்சி மாவட்டத்தில் கொட்டும் மழையில் நினைந்தபடி நீங்களே பார்த்து பாராட்டினீர்கள்.

    2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக காங்கிரசே காரணமாக இருந்தது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்ததும் மாநில தலைவராக இருந்த இளங்கோவன் சென்று பேசினார். 2 முறை மத்தியில் காங்கிரஸ் அரசு மலர்ந்தது. ஆனால் இப்போது தோழமை கட்சிகளை எரிச்சலூட்டும் நிகழ்வுகள்தான் நடக்கிறது.

    மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி தலைமை அறிவிக்கும் போராட்டங்களை தொண்டர்கள் எழுச்சியுடன் நடத்தினார்கள்.

    தற்போது தமிழ்நாட்டில் குழப்பமான, தெளிவற்ற நிலையில் அரசியல் உள்ளது. அ.தி.மு.க. உடைந்து பா.ஜனதாவின் எடுபிடி கட்சியாக இருக்கிறது.

    நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். இதனால் அரசியலில் தாக்கம் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

    இந்த நேரத்தில் வேகமாக செயல்பட்டால்தான் காங்கிரசை பலப்படுத்த முடியும். ராஜீவ்காந்தி இருந்தபோது 22 சதவீத செல்வாக்குடன் இருந்த கட்சியின் செல்வாக்கு தற்போது 5 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

    தொண்டர்களும், நிர்வாகிகளும் முடங்கி கிடக்கிறார்கள். காரணம் தினந்தோறும் நிகழும் அரசியல் மாற்றங்களை சந்திக்காதது தான். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி கட்சியான தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் தலைவர் மட்டுமே கலந்து கொள்கிறார்.

    அன்றாடம் பா.ஜனதா அ.தி.மு.க. எழுப்பும் குரல்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் முடங்கி கிடக்கிறது. செயல்படாத அரசை கண்டித்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

    சத்தியமூர்த்தி பவனை விட்டு காங்கிரஸ் வெளியே சென்று கவுரவ பிரச்சனையை மறந்து செயலாற்ற வேண்டும். அதற்கு செல்வாக்குள்ள எழுச்சியூட்டும் தலைமை தேவைப்படுகிறது.

    ஜெயலலிதாவை கூட எதிர்த்து களம் கண்டது காங்கிரஸ் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேலை செய்ய தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராக இருக்கிறோம். இதை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை தேவை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    டெல்லியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நேரில் புகார் செய்து இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #RahulGandhi
    Next Story
    ×