search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanga tamil selvan"

    20 தொகுதி இடைத்தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவழிக்க அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஆண்டிப்பட்டி தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான திப்பரேவு அணைத் திட்டம் செயல்படுத்தவில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த பிரச்சினையை முன் வைத்து 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.

    இதில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அ.தி.மு.க. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

     


    அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடி, கூடுதல் செலவுக்கு ரூ.1000 கோடி என மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை இனி தினகரனால் மட்டுமே தரமுடியும். ஆட்சி மாற்றம் வரும் என்பதால் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துகின்றனர். பொதுவாக தேர்தல் என்றாலே ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு மரண பயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

    மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை எடப்பாடி அரசு இதுவரை எதிர்க்கவில்லை. அ.ம.மு.க. வில் துணை பொதுச்செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தற்போதும் ஒன்றாகவே உள்ளோம்.

    இவ்வாறு பேசினார். #ADMK #TTVDhinakaran #ThangaTamilSelvan

    தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுத்தால் சுப்ரீம்கோர்ட்டில் தடை உத்தரவு பெறுவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #ADMK

    சென்னை:

    தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கோர்ட்டு உறுதி செய்ததைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவர்களது அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

    இதையடுத்து தங்க தமிழ்ச் செல்வன் தனது அறையில் இருந்த கோப்புகள், ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை. சிறிது அவகாசம் கொடுத்து இருக்கலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளில்இருந்து வாடகை பாக்கி செலுத்தச் சொல்லி உள்ளனர்.

    தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்தால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இருப்பினும் மேல் முறையீடு செய்வதில்லை, தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். வரும் 9-ந்தேதி பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்துவோம்.


    18 பேரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவோம். நாங்கள் போட்டியிடுவதற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரி மூலம் கலெக்டர்கள் தடை விதிக்க கூடும் என்பதால் நாங்கள் முன் கூட்டியே இடைத்தேர்தலில் போட்டியிட தடைஇல்லை என சுப்ரீம்கோர்ட்டில் உத்தரவு பெறுவோம்.

    18 தொகுதிகள் மட்டுமல்லாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். தோல்வி பயத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நடத்த விருப்பம் இல்லை. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்துதான் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலில் எங்களது பிரதான எதிரி தி.மு.க. அடுத்த எதிரி அ.தி.மு.க.

    பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்த டி.டி.வி.தினகரன் சென்றபோது 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கூடினர். அப்போது மக்கள்தான் அ.தி.மு.க. பேனரை கிழித்தனர். எங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை. ஆட்சியின் மீதுள்ள வெறுப்பில் மக்கள் இவ்வாறு செய்துள்ளனர். #ThangaTamilSelvan #ADMK

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #Thangatamilselvan #Byelection
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டத்தை தவறாக பயன்படுத்தி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    பலப்பரீட்சை நடந்தபோது நாங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டு போடவில்லை. ஆதரித்து தான் ஓட்டு போட்டோம்.



    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். இது நாடறிந்த உண்மை.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்கள் 18 பேர் மீது மட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ. பதவியை பறித்துள்ளார்.

    இதை எதிர்த்து தான் நாங்கள் ஐகோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறோம். அங்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    துணைப் பொதுச் செயலாளர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

    ஆனாலும் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பதை வெளிப்படுத்தவே கோர்ட்டுக்கு செல்கிறோம்.

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அந்த சமயத்தில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan  #Byelection


    தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட வந்திருப்பதாக தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    குற்றாலம்:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அநேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி குற்றாலம் வந்து தங்கியிருக்கின்றனர்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றும் நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வு எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.



    மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அமமுகவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அமமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததுபோன்று இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    தினகரனை ரகசியமாக சந்தித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    சென்னை:

    டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டி.டி. வி.தினகரனை பார்த்ததில் தவறு கிடையாது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் வந்து பார்த்ததுதான் தவறு என்கிறோம்.

    ஏனென்றால் டி.டி.வி. தினகரன் எங்களோடு கலந்து பேசிய பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தன்னோடு இருந்த கே.பி. முனுசாமி, மைத்ரேயன், பி.எச். பாண்டியன் ஆகியோரிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

    அதுமட்டுமல்ல இந்த விசயத்தை இதுவரையிலும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இது தெரியாமல் கே.பி.முனுசாமி நேற்று மதியம் வரை தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். அது கட்டுக்கதை என்று அப்பாவித்தனமாக கூறி வந்தார். அவரது முகத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் கரியை பூசி விட்டார்.


    ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    அவரை நம்பிய மத்திய மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இனிமேல் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கமாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தோடு தர்மயுத்தம் நடத்துவதாக வெளியில் பேசிக் கொண்டு உள்ளுக்குள் ரகசியமாக வந்து சந்தித்து பேசுவதால் அவரது இரட்டை வேடத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே டி.டி.வி.தினகரன் இந்த விசயத்தை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

    ஜெயலலிதா மரணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தங்கதமிழ்செல்வன் மற்றும் புகழேந்தி கூட்டாக தெரிவித்தனர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமி‌ஷன் தமிழக துணை முதல்வரை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது . ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை கமி‌ஷன் இதுவரை அதற்கான ஆதாரத்தை ஏன் கேட்கவில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்களை விசாரணைக் கமி‌ஷன் ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை. இவர்களை உடனடியாக விசாரிக்கா விட்டால் ஆறுமுகசாமி கமி‌ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்.



    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #ThangaTamilSelvan #Pugalenthi #OPS

    வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதால் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க தயாராக உள்ளோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ வரும் என நினைக்கவில்லை. உண்மையின் பக்கமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.



    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றிருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவான செயலாகும்.

    ரெயில் விபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்வது வழக்கம்.

    அதே போல் ரூ. 40 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தன் மீதான வழக்கை சட்டப்படியாக சந்தித்து கோர்ட்டில் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அவர் அமைச்சர் பதவி ஏற்கலாம். இது தான் நடைமுறை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Vijayabaskar #CBIRaid

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். #thangatamilselvan
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

    இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

    இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

    இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

    தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
    சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவையில்லை, மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தினால் அரசு தாங்காது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
    தேனி:

    தேனி பழனிசெட்டிபட்டியில் அ.ம.மு.க.வின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தங்கதமிழ்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, 6 மாத அவகாசம் கொடுத்தது. மத்திய அரசு அதை செய்யவில்லையே, அது அவமதிப்பு இல்லையா? தமிழக அரசு கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டுமென மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை சொல்லி இருக்கின்றன. ஆனால் தேர்தல் நடத்தவில்லை, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டியது தானே. ஏன் கொடுக்கவில்லை?

    உள்ளாட்சி தேர்தலும் நடத்தவில்லை. எல்லாவற்றிலும் கோர்ட்டை அவமதிக்கிறார்கள். நான் எனது தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் கருத்து தெரிவித்தேன். அதற்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்து உள்ளார்கள். அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். வழக்கு போட்டு என்னை மிரட்டிப்பார்க்கிறார்கள். என்னை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை இப்போதைக்கு தேவையில்லை என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுத வேண்டும். மக்களின் கருத்தை கேட்டு நாங்கள் சொன்னபிறகு சாலை போடலாம் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமியை நான் பாராட்டுவேன். அதை விட்டுவிட்டு பிடிவாதமாக செய்தால் மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்துவார்கள். இந்த அரசு தாங்காது. மக்களை கண்ணீர் வடிக்க வைத்து, விவசாயிகளை வேதனைப்படுத்தும் இந்த திட்டமே தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் அ.ம.மு.க.வில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு தெரிந்து அப்படி ஒரு தகவல் இல்லை. ஊடகங்களில், பத்திரிகைகளில் தான் இதுகுறித்த படத்தை பார்த்தேன். அது தவறான செய்தி’ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
    நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பேன் என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.
    சென்னை:

    நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் நான் அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தேன். அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது உலகத்துக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மாத்தி ஓட்டு போட்டார்கள்.

    இவர்கள் செய்தது தவறு என்று நீதிமன்றம் கூறி இருந்தால் தீர்ப்பை வரவேற்று இருப்பேன். அதை சொல்லாமல் தீர்ப்பு கூறுகிறார்கள்.

    உண்மையை சொன்னால் கோர்ட்டு அவமதிப்பு என்று எனக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். நான் அதற்கு பயப்படவில்லை. விளக்கம் அளிப்பேன். நான் அரசு வக்கீலை பார்த்து கேட்கிறேன்.

    சட்டம் அனைவருக்கும் சமம். பொதுமக்கள் இறுதியாக நம்பும் இடம் நீதிமன்றம்தான். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் 11 பேர் அரசாங்கத்தை கவிழ்க்க, எதிர்த்து வாக்களித்தார்கள்.

    அவர்கள் செய்தது சரியா? தவறா? என்று நீதிமன்றம் ஏன் கூறவில்லை. அதை சொல்லாமல் தீர்ப்பு கூறினால் எப்படி?

    நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்கிறார்கள். அப்படியானால் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 4 பேர் கருத்து தெரிவித்தார்களே? அவர்களுக்கு ஏன் நோட்டீசு அனுப்பவில்லை. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் என்பதால் பயமா?

    நான் சாதாரண குடிமகன் என்பதால் எனக்கு நோட்டீசா? என்னை மிரட்டி பார்க்கிறார்களா? சட்டம் எல்லோருக்கும் சமம்.

    எனக்கு நோட்டீசு வந்தால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக தங்க தமிழ்செல்வனுக்கு அரசு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ThangaTamilSelvan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்த தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு சட்டசபையில் இருந்து அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் தனபால் சபை விதிகளைக் குறிப்பிட்டு, விளக்கம் கேட்ட பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அந்த 18 பேரும் தங்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரது பெஞ்சில் இரு தரப்பு விசாரணைக்கு பிறகு கடந்த 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.



    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், “18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர், “சபாநாயகர் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்த காரணத்தால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியிடம் (நீதிபதி சத்தியநாராயணன்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்ச்செல்வன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர், “மத்திய-மாநில அரசுகள் நீதிமன்றங்களை விலைக்கு வாங்கி விட்டன” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

    இதற்கு நீதிமன்ற அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில் பெண் வக்கீல் ஸ்ரீமதி சென்னை ஐகோர்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை, தங்க தமிழ்ச்செல்வன் மிக, மிக தரக்குறைவான வகையில் மீடியாக்களில் விமர்சனம் செய்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு ஜூன் 23, 24-ந்தேதிகளில் அவர் அளித்த பேட்டியில், “அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க உதவவே ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இது விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு போல தெரிகிறது” என்று கூறினார்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டையும் தலைமை நீதிபதியையும் அவர் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையிலும் கீழ்த்தரமாகவும் விமர்சித்தார். மத்திய-மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிபதிகள் சதி செய்ததாகவும், மத்திய-மாநில அரசுகளின் கைகளில் நீதிபதிகள் அடகு வைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

    தங்க தமிழ்ச்செல்வனிடம் பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர், “உங்கள் குற்றச்சாட்டுக்கள் கோர்ட்டு அவமதிப்புக்கு உள்ளானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், “என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்” என்று வெளிப்படையாக சவால் விட்டார்.

    இது அவர் கோர்ட்டு நடவடிக்கைகளில், நிர்வாகத்தில் குறுக்கீடு செய்து தடை உண்டாக்குவது போல உள்ளது. எனவே தங்க தமிழ்ச் செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் ஸ்ரீமதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது மனுவை அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணனுக்கு ஐகோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைத்தார். அரசு தலைமை வக்கீலின் ஒப்புதலை ஐகோர்ட்டு பதிவாளர் கேட்டுள்ளார். அரசு வக்கீல் ஒப்புதல் கொடுத்தால்தான் இந்த வழக்கை பதிவாளரால் விசாரணைக்கு பட்டியலிட முடியும்.

    கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை சிவில் அவமதிப்பு வழக்கு, கிரிமினல் அவமதிப்பு வழக்கு என இரு வகை உள்ளது. கோர்ட்டு சிவில் அவமதிப்பு வழக்குகளில் கோர்ட்டே தீர்ப்பளித்து விடும். ஆனால் கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு வழக்கில் அரசு தலைமை வக்கீலின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.

    இதனால்தான் வக்கீல் ஸ்ரீமதி தொடுத்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, அரசு தலைமை வக்கீலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி விமர்சித்து பேசியது பற்றி 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக நேரில் ஆஜராக வேண்டும். அல்லது வக்கீல் மூலம் பதில் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    தங்கதமிழ்ச்செல்வன் இந்த நோட்டீசுக்கு ஜூலை 2-வது வாரத்துக்குள் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டுகள் அவமதிப்பு சட்டம் 1971 பிரிவு 15-ன் கீழ் நட வடிக்கை எடுப்பது பற்றி உத்தரவிடப்படுமா? என்பது தெரிய வரும். #ThangaTamilSelvan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கை வாபஸ் பெறுவது பற்றி தங்க தமிழ்செல்வன் பரிசீலனை செய்து வருகிறார்.
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தார். நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு கூறினார். இதனால் 3-வது நீதிபதி விமலா விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-

    நான் நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவன். ஆனால் எங்கள் வழக்கில் எந்த காலக்கெடுவும் சொல்லாமல் தீர்ப்பு கூறியதால் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3-வது நீதிபதியை நியமித்து 10 நாளில் வழக்கை முடிக்குமாறு கூறி இருந்தால் மதித்திருப்பேன். எங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். அதை ஏன் சொல்லவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.

    நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோமா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள 9 மாதம் காத்து இருந்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு தெளிவாக விடை கிடைக்கவில்லை.

    அதன்படி நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அங்கும் மாத கணக்கில் வழக்கு நடந்தால் என்ன பிரயோஜனம்? எங்கள் பதவி காலமே முடிந்து விடும்.

    அதனால்தான் வழக்கை வாபஸ் பெறப்போவதாக கூறி இருந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

    ஏனென்றால் வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியிடம் மனு கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்க மறுத்தால் யாரை அணுகுவது என்ற நிலை ஏற்படும்.

    அப்படியே மனு ஏற்கப்பட்டாலும் உடனே இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விடுவார்கள்.

    அப்படியே தேர்தல் நடந்தாலும் நான் இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

    தேர்தலில் நின்றாலும் தேர்தல் அதிகாரி மூலம் எனது மனுவை நிராகரிக்க செய்து விடுவார்கள்.

    இந்த அளவுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க சட்டத்தில் இடம் உள்ளதால் யோசிக்க வேண்டி உள்ளது.

    சட்ட நிபுணர்களும் 3 விதமான கருத்தை கூறி உள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து பேச உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×