search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "pushkaram"

  காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
  காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.

  அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.

  காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.

  மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
  தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

  நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

  நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
  தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட வந்திருப்பதாக தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
  குற்றாலம்:

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அநேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி குற்றாலம் வந்து தங்கியிருக்கின்றனர்.

  தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றும் நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வு எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.  மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அமமுகவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அமமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

  தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததுபோன்று இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

  தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

  குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

  12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


  சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

  மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

  நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

  நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. 
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

  தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

  புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

  இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

  விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


  தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

  புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

  ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

  நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

  குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

  முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

  இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

  சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

  தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

  நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

  நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

  நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

  முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


  நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

  மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

  கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

  இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

  நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
  ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
  புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான, பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் போது துலா ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

  அதன்படி, காவிரி மகாபுஷ்கரம் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவிற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 12-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

  காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் தொடக்க நாளான நேற்று மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் இருந்து கல்யாண உற்சவர்கள் ஆதிநாயகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தனர். பின்னர் காலை 5.45 மணிக்கு கோ-பூஜை, காலை 6 மணிக்கு விஷ்வக்சேன யாகம், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஹரி நாம பஜனை நடைபெற்றது.

  மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடைபெற்றது. பின்னர் யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா நடைபெறும் 4 நாட்களும் மாலை காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
  மகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
  தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் வரலாறு காணாத பக்தர்கள் வருகை தந்தனர்.

  நேற்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் என்பதால் அதற்குரிய ராசிக்காரர்களும், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்ததால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

  அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் முறப்பநாடு காசி தீர்த்தகட்டத்துக்கு வந்து நீராடி கைலாசநாதரை வணங்கினர்.

  முறப்பநாடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதி நேற்று இல்லை.

  எனவே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நடந்து வந்து நீராடினர். கைலாசநாதர் கோவிலிலுக்குள் தரிசனம் செய்பவர்கள் கோவிலை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

  நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காமாட்சிபுரம் ஆதீனம் ஞானக்குரு சாக்த ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராடினர்

  தொடர்ந்து முறப்பநாட்டில் அதிருத்ர பெருவேள்வி நடைபெறுகிறது. அதில் 121 வைதீயர்கள் ருத்ர பாராயணம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு நதிக்கு சிறப்பு ஆராத்தி காட்டப்பட்டது. 6.30 மணிக்கு தாமிரபரணி ஈசுவரம் அறநிலை துறை சார்பாக நதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.

  நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை வழியாக மாற்றி விடப்பட்டது.

  அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தர விநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை போன்றவற்றில் காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

  தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். 
  மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
  தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

  இந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.

  நேற்று 11-வது நாள் விழா தாமிரபரணி படித்துறைகளில் நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  அதேபோல் அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றில் நேற்று காணும் இடமெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

  வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நெல்லை மாவட்டத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெறும் விழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

  பாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், சேனைத் தலைவர் மண்டபத்தில் தினமும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடைபெற்று வருகிறது. பாபநாசம் படித்துறை இந்திர தீர்த்தத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். பாபநாசத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை போலீசார் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மட்டுமே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் நின்று படித்துறை இந்திர தீர்த்தக்கட்டத்தில் நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

  நேற்று காலை பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் அதிக அளவில் புனித நீராட குவிந்ததால் நெல்லை திணறியது.

  தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், ரெயில்களில் நெல்லை வந்தனர். சில பக்தர்கள் வெளியூர்களில் இருந்து தனி வேன், கார்களில் வந்துள்ளனர். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லை வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து, நயினார்குளம் ரோடு வழியாக, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் சென்றனர். காலை முதல் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  நெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் வெளியூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.