search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery pushkaram"

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.

    அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான, பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் போது துலா ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    அதன்படி, காவிரி மகாபுஷ்கரம் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவிற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 12-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

    காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் தொடக்க நாளான நேற்று மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் இருந்து கல்யாண உற்சவர்கள் ஆதிநாயகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தனர். பின்னர் காலை 5.45 மணிக்கு கோ-பூஜை, காலை 6 மணிக்கு விஷ்வக்சேன யாகம், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஹரி நாம பஜனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடைபெற்றது. பின்னர் யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா நடைபெறும் 4 நாட்களும் மாலை காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
    ×