search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.
    X
    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்கள்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் திரண்ட வடமாநில பக்தர்கள்: நவதிருப்பதியில் அலைமோதிய கூட்டம்

    காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து அந்த ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறா ர்கள். பல்வேறு ஆன்மீக அமைப்புகள் புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், வேள்விகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

    விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

    தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணியின் அனைத்து படித்துறைகளிலும் விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புஷ்கர விழா நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


    முறப்பநாட்டில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடைபெற்ற காட்சி.

    அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் இன்று நடைபெற்ற விழாவில் காலை சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் இன்று காலை புஷ்கர பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் நாராயணியம் பாடினர். இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    இதேபோல கல் லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி தீர்த்தக்கட்டங்களிலும் தாமிரபரணியில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் புஷ்கர விழாவை முன்னிட்டு இன்று காலை புரு‌ஷ ஸுக்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்புகழ் இசைவழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணம், சங்கீதசபாவில் பண்ணிரு திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    முக்கூடல் அத்தாளநல்லூரில் தாமிரபரணிக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.


    புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப் பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் சாதனங்களுடன் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில் காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    நவக்கிரகங்களில் அதிபதிகளுக்கு உரிய கோவில்களான சூரிய அம்சம் உள்ள பாபநாசம் சிவன் கோவில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், சந்திரன் வழிபட்ட சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில், நத்தம் விஹயாசன பெருமாள் கோவில், செவ்வாய் வழிபட்ட தலமான கோடகநல்லூர் சிவன் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் புதனுக்குரிய தென்திருபேரை கைலாசநாதர் கோவில், திருப்புளியங்குடி பெருமாள் கோவில், குரு பகவானுக்குரிய முறப்பநாடு கைலாசநாதர் கோவில், ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், சனி கிரகத்துக்குரிய பெருங்குளம் பெருமாள் கோவில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில், சுக்கிரனுக்குரிய சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், தென்திருபேரை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மேலும் ராகு கேது தலங்களான இரட்டை திருப்பதி பெருமாள் கோவில், ராஜபதி கைலாசநாதர் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் இந்த கோவில்களை தேடி கார், வேன்களில் சென்று சாமி ஹ்ரிசனம் செய்தார்கள். இது தவிர நெல்லையப்பர் கோவில், யரை தெட்சணாமூர்த்தி கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    Next Story
    ×