search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் படித்துறையில் புனித நீராடிய பக்தர்கள்.
    X
    வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோவில் படித்துறையில் புனித நீராடிய பக்தர்கள்.

    தாமிரபரணி புஷ்கர விழா: 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

    தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

    புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


    தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

    புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

    குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

    இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

    சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

    நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

    முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

    கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

    இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
    Next Story
    ×