search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாபுஷ்கரத்தால் விழாக் கோலம்: தாமிரபரணி ஆற்றில் 20 லட்சம் பேர் நீராடல்
    X

    மகாபுஷ்கரத்தால் விழாக் கோலம்: தாமிரபரணி ஆற்றில் 20 லட்சம் பேர் நீராடல்

    தாமிரபரணியில் கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    தமிழகத்தில் உள்ள நதிகளில் வற்றாத ஜீவநதியாக திகழ்வது தாமிரபரணி. பாபநாசம் மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் இந்த நதி கடலில் கலக்கிறது. ஆன்மீக சிறப்பு மிக்க இந்த நதியின் இருகரைகளிலும் பிரசித்திபெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.

    சிவனால் தருவிக்கப்பட்டு அகஸ்தியரால் பூமியில் விடப்பட்ட சிறப்பு மிக்க தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களையும் வளமாக்குகிறது. இந்த மாவட்டங்களோடு விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியின்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    புஷ்கரம் என்பது புனித தீர்த்தமாகும். புஷ்கர விழாவின்போது அனைத்து தெய்வங்கள், தேவுக்கள், ரிஷிகள் மற்றும் அனைத்து நதிகள் நதியில் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் புஷ்கர விழாவில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தொடக்கத்தில் இதுபற்றி விழிப்புணர்வு மக்களுக்கு போதிய அளவு இல்லை.

    பின்னர் ஆன்மீக அமைப்புகளின் முயற்சியால் புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புஷ்கர விழாவுக்கு கடும் எதிர்பார்ப்பு உண்டானது. புஷ்கர விழாவுக்காக தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகள் சரிசெய்யப்பட்டன. குறிப்பாக பாபநாசம், அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், நெல்லை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    படித்துறைகளுக்கு செல்லும் பாதைகள் சரிசெய்யப்பட்டது. ஆற்றில் மணல் மூட்டைகள் போடப்பட்டு பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி பாபநாசத்திலும், நெல்லையில் மகா புஷ்கர விழாவினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

    அன்று முதல் தொடர்ந்து தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் காலையில் சிறப்பு வேள்விகள், யாகங்கள், வழிபாடுகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது. மகா ஆரத்தியை காணவும், ஆற்றில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளார்கள். காசியில் இருந்து வேத பண்டிதர்கள் மற்றும் சாமியார்கள், சாதுக்கள் நெல்லையில் முகாமிட்டுள்ளார்கள்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி நடந்த போது எடுத்தபடம்

    உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளின் பார்வை நெல்லை தாமிரபரணியின் மீதே உள்ளது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தாமிரபரணியை நோக்கி படையெடுத்து வந்துள்ளார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுவை, ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். 12 நாட்களும் நீராடுவதற்காக நெல்லையில் தங்கும் விடுதிகள் அறை எடுத்தும், தனி வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கியுள்ளார்கள். அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டிற்காக தேவைப்படும் பூஜை பொருட்கள் மற்றும் மாலை, பூ என அனைத்தையும் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.

    பாபநாசம் தொடங்கி புன்னாக்காயல் வரை அனைத்து தீர்த்தங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடக்க நாட்களில் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்டது. பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தாமிரபரணி கரையில் ஆன்மீக அமைப்புகளால் நடத்தப்படும் யாகங்கள், வேள்விகளில் பங்கேற்று சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து வருகிறார்கள். மொத்தத்தில் புஷ்கர விழா தொடங்கிய நாளில் இருந்தே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் விழா கோலமாக காட்சியளிக்கின்றன. அன்னதானம் உள்ளிட்ட தான தர்மங்களும் நடைபெற்று வருகின்றன.

    தாமிரபரணியின் புகழுக்கு மகுடம் சூட்டும் அற்புத விழாவாக இது அமைந்துள்ளது. தாமிரபரணி மகா புஷ்கரம் இந்த ஆண்டில் வழிபாட்டோடு நின்றுவிடாமல், இயற்கை வனப்பினை கொண்டாடுவதற்கும், பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதற்கும், கலையை ரசிப்பதற்கும் இந்த புஷ்கரத்தினை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

    அதன்படி ஆற்றின் கரையோர ஆலயங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திர கீல தீர்த்ததில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோல் நெல்லை அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் ராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த ஜடாயு தீர்த்தத்திலும், சீவலப்பேரியில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணையும் முக்கூடல் தீர்த்தம் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    நீராட வரும் பக்தர்களுக்காக மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர், சுகாதார வசதிகளை செய்துள்ளன. இரு மாவட்ட போலீசார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். புஷ்கரணி எனப்படும் பக்தர்கள் நீராடும் இடங்களில் ஆற்றில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    இனி இப்படி ஒரு விழாவை காண இன்னும் 12 ஆண்டுகளும், மகா புஷ்கரத்தை காண 144 ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும். அடுத்த 12-வது ஆண்டில் புஷ்கரத்தை காண நமக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் மகா புஷ்கரம் என்பது காணக்கிடைக்காத அரிய வாய்ப்பு. இதை உணர்ந்து பலரும் ஆற்றில் புனித நீராடி , வழிபாட்டில் பங்கேற்று வருகிறார்கள்.
    Next Story
    ×