search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs Disqualification Case Judgement"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக தங்க தமிழ்செல்வனுக்கு அரசு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ThangaTamilSelvan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்த தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு சட்டசபையில் இருந்து அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் தனபால் சபை விதிகளைக் குறிப்பிட்டு, விளக்கம் கேட்ட பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அந்த 18 பேரும் தங்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரது பெஞ்சில் இரு தரப்பு விசாரணைக்கு பிறகு கடந்த 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.



    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், “18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர், “சபாநாயகர் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்த காரணத்தால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியிடம் (நீதிபதி சத்தியநாராயணன்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்ச்செல்வன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர், “மத்திய-மாநில அரசுகள் நீதிமன்றங்களை விலைக்கு வாங்கி விட்டன” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

    இதற்கு நீதிமன்ற அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில் பெண் வக்கீல் ஸ்ரீமதி சென்னை ஐகோர்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை, தங்க தமிழ்ச்செல்வன் மிக, மிக தரக்குறைவான வகையில் மீடியாக்களில் விமர்சனம் செய்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு ஜூன் 23, 24-ந்தேதிகளில் அவர் அளித்த பேட்டியில், “அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க உதவவே ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இது விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு போல தெரிகிறது” என்று கூறினார்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டையும் தலைமை நீதிபதியையும் அவர் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையிலும் கீழ்த்தரமாகவும் விமர்சித்தார். மத்திய-மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிபதிகள் சதி செய்ததாகவும், மத்திய-மாநில அரசுகளின் கைகளில் நீதிபதிகள் அடகு வைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

    தங்க தமிழ்ச்செல்வனிடம் பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர், “உங்கள் குற்றச்சாட்டுக்கள் கோர்ட்டு அவமதிப்புக்கு உள்ளானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், “என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்” என்று வெளிப்படையாக சவால் விட்டார்.

    இது அவர் கோர்ட்டு நடவடிக்கைகளில், நிர்வாகத்தில் குறுக்கீடு செய்து தடை உண்டாக்குவது போல உள்ளது. எனவே தங்க தமிழ்ச் செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் ஸ்ரீமதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது மனுவை அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணனுக்கு ஐகோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைத்தார். அரசு தலைமை வக்கீலின் ஒப்புதலை ஐகோர்ட்டு பதிவாளர் கேட்டுள்ளார். அரசு வக்கீல் ஒப்புதல் கொடுத்தால்தான் இந்த வழக்கை பதிவாளரால் விசாரணைக்கு பட்டியலிட முடியும்.

    கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை சிவில் அவமதிப்பு வழக்கு, கிரிமினல் அவமதிப்பு வழக்கு என இரு வகை உள்ளது. கோர்ட்டு சிவில் அவமதிப்பு வழக்குகளில் கோர்ட்டே தீர்ப்பளித்து விடும். ஆனால் கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு வழக்கில் அரசு தலைமை வக்கீலின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.

    இதனால்தான் வக்கீல் ஸ்ரீமதி தொடுத்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, அரசு தலைமை வக்கீலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி விமர்சித்து பேசியது பற்றி 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக நேரில் ஆஜராக வேண்டும். அல்லது வக்கீல் மூலம் பதில் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    தங்கதமிழ்ச்செல்வன் இந்த நோட்டீசுக்கு ஜூலை 2-வது வாரத்துக்குள் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டுகள் அவமதிப்பு சட்டம் 1971 பிரிவு 15-ன் கீழ் நட வடிக்கை எடுப்பது பற்றி உத்தரவிடப்படுமா? என்பது தெரிய வரும். #ThangaTamilSelvan
    ×