search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shastri"

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

    அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.

    அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.

    • தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.
    • வீராட்கோலி சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.

    அவர் கிட்டத்தட்ட 3½ ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சுரி அடித்தார். வீராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 + ஒருநாள் போட்டி 46 + 20 ஓவர் 1) அடித்துள்ளார்.

    தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை வீராட்கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம்.

    வீராட்கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    மும்பை:

    20 ஓவர் கிரிக்கெட் வருகைக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி (50 ஓவர்) ஆகியவற்றின் மீது ரசிகர்கள் ஆர்வம் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    இதையடுத்து டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கிடையே ஒரு நாள் போட்டி மீது ரசிகர்கள் கவனத்தை இழுக்க இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளார்.

    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உயிர்பித்து இருக்க எதிர்காலத்தில் 40 ஓவர் ஆட்டங்களாக குறைக்கப் பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ரசிகர்களின் கவனம் குறைந்து போவதை தடுக்கும்.

    1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தது. பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது 40 ஓவர்களாக குறைக்க வேண்டிய சரியான நேரம்.

    காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையுங்கள். வடிவமைப்பை குறையுங்கள். 20 ஓவர் கிரிக்கெட் முக்கியமானதுதான் என்று நினைக்கிறேன். இது விளையாட்டின் வளர்ச்சிக்கு தேவையானது. ஆனால் இரு தரப்பு தொடர்கள் குறைக்கப்பட வேண்டும்.

    உலகம் முழுவதும் போதுமான உள்நாட்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. அந்த லீக் போட்டிகள் நடக்க அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு இடையில் ஒரு உலக கோப்பையை நடத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சோபிக்கவில்லை. கடைசியாக ஆடிய 8 இன்னிங்சில் முறையே அவர் 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன் வீதமே எடுத்துள்ளார். இதனால் முதல் இரு டெஸ்டுக்கு துணை கேப்டனாக செயல்பட்ட அவர் எஞ்சிய இரு டெஸ்டுக்கான அணியில் நீடிக்கிறாரே தவிர துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    இந்தூரில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலை நீக்கிவிட்டு சூப்பர் பார்மில் உள்ள சுப்மன் கில்லை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எஞ்சிய இரு டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    துணை கேப்டன் குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்கும். அவர்களுக்கு லோகேஷ் ராகுலின் ஆட்டத்திறன் தற்போது எப்படி உள்ளது. அவர் எத்தகைய மனநிலையில் உள்ளார் என்பது நன்கு தெரியும். என்னை கேட்டால் இந்திய அணிக்கு துணை கேப்டனையே நியமிக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.

    போட்டிக்கு மிகச்சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டுமே தவிர, துணை கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு சிக்கலை உருவாக்கிக் கொள்ள கூடாது. களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்படாவிட்டால் அவரது இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வரலாம்.

    நேர்மையாக சொல்வது என்றால், இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு துணை கேப்டன் பதவியை நான் ஒரு போதும் விரும்புவது இல்லை. ஆனால் வெளிநாட்டில் நிலைமை வேறு. இங்கு நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    லோகேஷ் ராகுல் அற்புதமான வீரர் தான். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அதை களத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சில நேரம் சிறிய இடைவெளி எடுத்து விட்டு வரும் போது நல்ல பலனை கொடுக்கும். எனது பயிற்சி காலத்தில் புஜாரா நீக்கப்பட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய போது சதங்கள் அடித்தார்.

    இதே போல் ராகுலும் நீக்கப்பட்டு, வலுவாக திரும்பி வந்தார். ஆனால் நீங்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய ஆட்டத்திறனை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இறுதிப்போட்டி நடக்க உள்ள இங்கிலாந்தின் சூழல் இதை விட வித்தியாசமானதாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் முழு உடல்தகுதியுடன் கூடுதல் உற்சாகத்தில் களம் இறங்குவார்கள். ஆனால் மனரீதியாக பார்க்கும் போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கே அனுகூலமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வந்து விடுவார்.

    ஏற்கனவே முகமது ஷமியும், முகமது சிராஜிம் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்லும் போது, அது மனதளவில் நம்மை வலுப்படுத்தும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

    • கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு.
    • எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான்.

    பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் நான்காம் தேதி (டிசம்பர் 4) டாக்கா நகரில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

    அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா இழந்த தனது பார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பதிலில் கூறியதாவது:-

    எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது. அனைவருக்குமே இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு. ஒரு வீரரால் எப்பொழுதுமே அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய இயலாது, அது மனித இயல்பு தான்.

    அவர்களும் ஒரு கட்டத்தில் பார்மில் சறுக்களை சந்தித்து இருந்தார்கள். அதேபோலத்தான் விராட் கோலி மற்றும் ரோஹித்துக்கு பார்மில் சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    • டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டி இரண்டரை மடங்கு பெரியது ஆகும்.
    • என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் 1 - 0 என வெற்றி பெற்ற சூழலில், ஒருநாள் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்தது.

    இந்த ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் 4, அதன்பின்னர் 34*, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் ௨-வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படியா சொதப்புவார் எனும் அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இந்நிலையில் சூர்யகுமாரின் பிரச்சினை குறித்து ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் முதலில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். அந்த அளவிற்கு அவர் பொறுமை காக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ரன்களை வழக்கத்தை விட 30 - 40 பந்துகளுக்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துவிடுகிறார். இதனை சரிசெய்ய சற்று அவருக்கு நேரத்தை கொடுக்க வேண்டும்.

    இதே போல என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த ஃபார்மெட். யாரின் மரியாதைக்காகவும் காத்துக்கொண்டிருக்காது. எனவே களத்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டும். சூர்யகுமாரும் புரிந்துக்கொண்டு வருவார் என நம்புகிறேன்.

    வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் விளையாடவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் 50 ஓவர் வடிவத்திற்கு ஏற்றார் போல மாறி வர வேண்டும். அவர் 5ம் இடத்தில் களமிறங்கும் போது ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்போது வேண்டுமானால் அதிரடி காட்டிக்கொள்ளலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    • இந்தியாவில் அதிவேகமாக பந்து வீசும் வீரராக உள்ளார்
    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி முத்திரை பதித்தார்

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.

    இதனால் உம்ரான் மாலிக் மீது அனைவருடைய கவனமும் உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவர் எப்படி பந்து வீச்சை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் உம்ரான் மாலிக் அற்புதமான திறமைசாலி என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

    உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ''உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர். உலகக் கோப்பையில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கலங்கடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு உதாரணம் ஹாரிஷ் ராஃப், நசீம் ஷா, அன்ரிச் நோர்ஜே. ஆகவே, உண்மையாக வேகத்திற்கு மாற்று இல்லை.

    குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் கூட எதிரணியை சமாளிக்க முடியும். ஆகவே, உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.

    • அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
    • தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

    • கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
    • கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.

    முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

    கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.

    நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

    கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

    இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமான பீல்டிங் செயதது.
    • டி20 போட்டிகளில் இந்திய அணியின் தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.

    இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற உறுதியான நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசுபவர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர்.எனவே இத்தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

    இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    இந்த அணியுடன் கடந்த 6 -7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது. 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5-வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணியின் அர்தீப்சிங் கேட்ச் மிஸ் செய்த காட்சி
    இந்திய அணியின் அர்தீப்சிங் கேட்ச் மிஸ் செய்த காட்சி

    ஆனால் பீல்டிங் துறையில் இப்போதில் இருந்தே இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பீல்டிங் துறையில் இந்திய அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் அதில் மிச்சப்படுத்தும் 15- 20 ரன்கள் வெற்றியில் உங்களை காப்பாற்றும். இல்லையேல் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பேட்டிங் செய்யும் போது எக்ஸ்ட்ராவாக 15 - 20 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்சின் அற்புதமான பீல்டிங்
    இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்சின் அற்புதமான பீல்டிங்

    மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் மாயாஜால பீல்டிங் செய்கின்றன. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கை பீல்டிங் துறையில் என்ன செய்தது என்பதை பாருங்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அபாரமான பீல்டிங் செய்ததன் காரணமாகவே குறைந்த அளவிலான வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தனர்

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது.
    • அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 6-ம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

    இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ள போதும், பந்துவீச்சு தான் கவலையளித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ரவிசாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது தான். அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. இதில் இனி கவலைக்கொண்டு எந்தவித பயனும் இல்லை. எனவே இதனை மற்றொருவருக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நகர வேண்டும்.

    இந்திய அணி முழுமையான பலம் கொண்ட வீரர்களை பெற்றுள்ளது என எனக்கு தோன்றுகிறது. அரையிறுதிக்கு சென்றுவிட்டால் கோப்பையை சுலபமாக வெல்லலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே தொடக்கத்தையும், லீக் சுற்றையும் சிறப்பாக விளையாட வேண்டும். பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் இருக்கும் அணியிடம் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும். புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.

    இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.

    தற்போது பெர்த் நகரத்திற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி பெறவுள்ளது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனும், நியூசிலாந்துடனும் பயிற்சி போட்டிகளில் மோதவுள்ளது. இவை முடிந்தவுடன் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    • ஹர்த்திக் பாண்ட்யாவை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்-ரவுண்டராகவோ மீண்டும் அணிக்குள் வருவார். 2 ஓவர் வீச முடியாத அளவுக்கு அவர் மோசமாக காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை.

    அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    உலக கோப்பைக்கு முன்பாக சில மாதங்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வேண்டும். அவர் இரண்டு வீரர்களுக்கான பணியை செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக விளையாடினால் அவர் முதல் நான்கு அல்ல ஐந்து இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். ஆல்-ரவுண்டராக ஐந்து, ஆறு அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×