search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உள்நாட்டில் விளையாடும் போது இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை- ரவி சாஸ்திரி
    X

    உள்நாட்டில் விளையாடும் போது இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை- ரவி சாஸ்திரி

    • சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சோபிக்கவில்லை. கடைசியாக ஆடிய 8 இன்னிங்சில் முறையே அவர் 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன் வீதமே எடுத்துள்ளார். இதனால் முதல் இரு டெஸ்டுக்கு துணை கேப்டனாக செயல்பட்ட அவர் எஞ்சிய இரு டெஸ்டுக்கான அணியில் நீடிக்கிறாரே தவிர துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    இந்தூரில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலை நீக்கிவிட்டு சூப்பர் பார்மில் உள்ள சுப்மன் கில்லை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எஞ்சிய இரு டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    துணை கேப்டன் குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்கும். அவர்களுக்கு லோகேஷ் ராகுலின் ஆட்டத்திறன் தற்போது எப்படி உள்ளது. அவர் எத்தகைய மனநிலையில் உள்ளார் என்பது நன்கு தெரியும். என்னை கேட்டால் இந்திய அணிக்கு துணை கேப்டனையே நியமிக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.

    போட்டிக்கு மிகச்சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டுமே தவிர, துணை கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு சிக்கலை உருவாக்கிக் கொள்ள கூடாது. களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்படாவிட்டால் அவரது இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வரலாம்.

    நேர்மையாக சொல்வது என்றால், இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு துணை கேப்டன் பதவியை நான் ஒரு போதும் விரும்புவது இல்லை. ஆனால் வெளிநாட்டில் நிலைமை வேறு. இங்கு நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    லோகேஷ் ராகுல் அற்புதமான வீரர் தான். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அதை களத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சில நேரம் சிறிய இடைவெளி எடுத்து விட்டு வரும் போது நல்ல பலனை கொடுக்கும். எனது பயிற்சி காலத்தில் புஜாரா நீக்கப்பட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய போது சதங்கள் அடித்தார்.

    இதே போல் ராகுலும் நீக்கப்பட்டு, வலுவாக திரும்பி வந்தார். ஆனால் நீங்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய ஆட்டத்திறனை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இறுதிப்போட்டி நடக்க உள்ள இங்கிலாந்தின் சூழல் இதை விட வித்தியாசமானதாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் முழு உடல்தகுதியுடன் கூடுதல் உற்சாகத்தில் களம் இறங்குவார்கள். ஆனால் மனரீதியாக பார்க்கும் போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கே அனுகூலமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வந்து விடுவார்.

    ஏற்கனவே முகமது ஷமியும், முகமது சிராஜிம் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்லும் போது, அது மனதளவில் நம்மை வலுப்படுத்தும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

    Next Story
    ×