search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President"

    • கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவர் கைது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை வருநதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சற்று நேரம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதன் எதிரொலியால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.

    இந்நிலையில், குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என டிஜபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    • நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரை தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
    • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார்.

    இந்தூர்:

    நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.

    அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-வது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு 3-வது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன.

    மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன.

    குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன.

    'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-வது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.

    இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்தியபிரதேச கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்?
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்?

    புதுடெல்லி:

    பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த நிகழ்வின் போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எங்கே இருந்தார்? அவர் அழைக்கப்பட்டாரா? ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 21 எதிர்க்கட்சிகள் அந்த விழாவை புறக்கணித்தன.

    • தேசத்தின் உயிர்நாடியாக ரெயில்வே உள்ளது.
    • ரெயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள்.

    புதுடெல்லி:

    ரெயில்வேயில் அதிகாரிகளாக பயிற்சி பெற்று வரும் 255 பேர் அடங்கிய குழு ஒன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

    ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பின்னர் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தேசத்தின் உயிர்நாடியாக ரெயில்வே உள்ளது. லட்சக்கணான பயணிகள் நாள்தோறும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார்கள்.

    எனவே லட்சக்கணக்கான மக்களின் முதலாளியாக இருப்பதுடன், கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை தாங்கி செல்லும் வாகனமாகவும் உள்ளது.

    அதேநேரம், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் ரெயில்வே முதுகெலும்பாக உள்ளது.

    இந்திய ரெயில்வே சுற்றுச்சூழலின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இந்திய ரெயில்வேயை உலகின் சிறந்த தரமான சேவைகளை வழங்குபவராக மாற்ற பாடுபடுவது உங்களை போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

    ரெயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை அனைத்து வழிகளிலும் உறுதி செய்ய வேண்டும்.

    மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயன்பாடுகளுடன், ரெயில் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து திறமையான தடுப்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

    ரெயில்வே வாடிக்கையாளர்களை, குறிப்பாக பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, அவர்கள் போற்றும் வகையில் சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அதிகரிக்க நீங்கள் உழைக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் இந்திய ரெயில்வேயில் தொழில்நுட்பத்தை சிறந்த அளவிற்கு பயன்படுத்துவது அவசியம்.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதுமையான மற்றும் தகவமைப்புடன் சிறந்து விளங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ரெயில்வே மின்மயமாக்கல், அதிக சரக்குகளை கையாளுதல் மற்றும் வருவாய் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் இதில் முக்கியமான படிகள் ஆகும்.

    இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

    • முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவேகவுடா ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    • தொழில் அதிபர்களில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்பட பிரபலங்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

    டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக வந்திருக்கும் உலக தலைவர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் இந்த விருந்து நாளை இரவு வழங்கப்படுகிறது.

    டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டப வளாகத்தில் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விருந்தில் கலந்து கொள்ள வருமாறு மாநில முதல்-மந்திரிகள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவேகவுடா ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது காங்கிரசாரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் விருந்தில் பங்கேற்க இயலாது என்று மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். மாநில முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலின், மம்தாபானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் விருந்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் அதிபர்களில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்பட பிரபலங்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

    • அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.
    • தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் ஜனாதிபதிகள் முறையாக பயன்படுத்துவதில்லை.

    கருணை மனுக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் ஜனாதிபதிகளால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின் போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு, தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.

    எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்படும் போது மீண்டும் கோர்ட்டுக்கு சென்று சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள்.
    • பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மசோதாவின் (பி.என்.எஸ்.எஸ்) படி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடுகளை தடுக்கிறது.

    புதுடெல்லி:

    மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் அதில் இருந்து தப்பிக்க தண்டனையை குறைத்து கொள்வதற்காக நீதிமன்றங்களை நாடுவார்கள். கோர்ட்டு அதை நிராகரிக்கும் போது ஜனாதிபதிக்கு கருணை மனுவை தாக்கல் செய்வார்கள். தண்டனையை நிறுத்துவதற்கும் அல்லது மாற்றுவதற்கும், மன்னிப்பு, தளர்வு, அவகாசம் வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

    ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்படும் போது மீண்டும் கோர்ட்டுக்கு சென்று சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள்.

    இந்நிலையில் மரண தண்டனை கைதிகளின் கருணை மனு மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது. அதற்கு மேல் முறையீடு கிடையாது என்று புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதாவின் (பி.என்.எஸ்.எஸ்) படி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடுகளை தடுக்கிறது.

    அரசியலமைப்பு சட்டத்தின் 72-வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக எந்த நீதி மன்றத்திலும் மேல் முறையீடு செய்யக்கூடாது இது இறுதியானது. மேலும் ஜனாதிபதியின் முடிவை பற்றி எந்தவொரு கேள்வியும், எந்த கோர்ட்டுகளிலும் விசாரிக்கப்படாது என்று புதிய சட்ட மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி அல்லது கவர்னரின் முடிவு கால தாமதம் என காரணம் காட்டி மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது இந்த மனுக்களை விசாரிக்க உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.

    மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான யாகூப் மேமன் மரண தண்டனை வழக்கிலும், நிர்பயா கொலை வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டில் நள்ளிரவு கடந்தும் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

    • தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கவர்னர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்.
    • தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது கவர்னரின் வரம்பு மீறிய செயலாகும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியிருப்பது அவரது ஆணவப்போக்கை வெளிப்படுத்துகிறது. எந்த பிரச்சினையிலும் அரசியலமைப்புச் சட்ட அதிகார வரம்புகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கவர்னர் ரவி கூறியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தவர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி கடிதம் எழுதுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உயர் கல்வித்துறை அமைச்சரின் ஆலோசனை இல்லாமல், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கவர்னர் கடிதம் எழுதுவது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்.

    தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை எதிர்ப்பது கவர்னரின் வரம்பு மீறிய செயலாகும். கவர்னராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழக கவர்னரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தமிழக ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது என்றும், அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர், நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்ததாகவும், இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பல்வேறு விவாதங்களின் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021), தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-9-2021 அன்று நிறைவேற்றப்பட்டு.

    18-9-2021 அன்று தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டதாகவும், தமிழக ஆளுநர் அவர்கள், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவு தொடர்பாக, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 21-6-2022 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் 26.08.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் 13.01.2023 அன்று கோரியிருந்த விளக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அமைச்சகங்கள் கோரியிருந்த அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாததால், அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்ற வேண்டிய நீட் கட்டாயத்தில் உள்ளதாகவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் மிகுந்த கவலையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீட் தேர்வின் மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ்வுகளில் அவர்களது பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    அண்மையில்கூட, நீட் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு என்றும், அதனைச் செயல்படுத்துவதில் மாணவர்களுக்கு ஏற்படுத்துவதோடு ஏற்படும் மருத்துவ மட்டுமல்ல, ஒவ்வொரு சேர்க்கை சமுதாயத்தில் நாள் தாமதமும், கிடைப்பதில் தகுதியான பாதிப்புகளை விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • குடியரசு தலைவருடன் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர்.
    • அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார்.

     ராமேசுவரம்

    பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது கலாம் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவரிடம் வழங்கினர்.

    அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார். அப்போது கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் தலைவரும், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாப்தீன், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, ஸ்ரீபிரியா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.
    • ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார். அவரை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என முக்கிய பிரமுகர்கள் முறைப்படி அனுமதி கோரி இருந்தனர். ஆனால், பலருக்குச் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.

    அவருக்கு மட்டும் அனுமதியளித்து, மற்றவர்களை அனுமதிக்க வில்லை. இதனால் ஜனாதிபதியை சந்திக்காமல் அவர் திரும்பினார். துணை சபாநாயகர் ராஜவேலு, அவரது துணைவியார் மாலதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர்களுக்கு சரியான தகவலும் அளிக்கவில்லை.

    புதுவையை சேர்ந்த வர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுமதி அளித்துள்ளனர். இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் நடக்க மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததே காரணம். இதனால் ஜனாதிபதிக்கு மிகப் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    எனவே, நிர்வாகக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்குக் ஜனாதிபதி செயலகம், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×