search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தலைவர்"

    • கடிதத்தை திமுக எம்பி வில்சன் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த சில நாட்களாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள், இந்நாள் தேர்தல் ஆணையர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது.

    இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார். இந்த திட்டத்தை தி.மு.க. நிராகரிப்பதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், இது குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கி செல்வதற்கு சமம் என்றும் திமுகவினரால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்த திட்டதை கைவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து கேட்டு வரும் நிலையில் தி.மு.க. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும்.
    • எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார்.

    பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது.

    நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி உள்ளது.

    4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர்கள், உழவர்கள் சக்தியே அந்த 4 தூண்கள்.

    நாட்டின் பல்வேறு வளர்ச்சியை பற்றி பேசிய குடியரசுத் தலைவர் பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிட்டார்.

    இந்தியா விடுதலை பெற்றபோது அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

    10 ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது போல தற்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளீர்கள். பாராளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர்.

    எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

    புதிய பாராளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன்நின்று வழிகாட்டுகிறது.

    மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம்.

    காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை.

    இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடக்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்?

    நாடு எவ்வளவு குடும்ப அரசியலை பார்த்து உள்ளதோ அதில் பெரும் பங்கு காங்கிரசை சாரும்.

    எதிர்க்கட்சிகளை திறம்பட வழிநடத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. இந்த அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அடுத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உத்தேசித்து உள்ளனர்.

    மல்லிகார்ஜூன கார்கே மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். குலாம் நபி ஆசாத் கட்சியே மாறிவிட்டார்.

    ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் கட்சியின் எல்லா பதவிகளிலும் இருப்பதே குடும்ப அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாக ஆவதை நான் வரவேற்கிறேன்.

    வாரிசு மற்றும் குடும்ப அரசியல் காரணமாக தேசம் ஏராளமான துயரங்களை அனுபவித்துள்ளது.

    ஒரு குடும்பத்தின் அரசியல் தற்போது காணாமல் போய்விட்டது. மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் ரத்து செய் என்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும்.
    • நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இது மாற்றத்திற்கான தருணம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். 140 கோடி இந்தியர்களும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் அஞ்சலி. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விற்கு நாம் அனைவரும் சாட்சியாக விளங்குகிறோம்.

    நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும். நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அறிஞர்கள் குறித்து நாம் எப்போதுமே பெருமைக் கொண்டிருக்கிறோம்.

    இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவர் கைது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை வருநதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சற்று நேரம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதன் எதிரொலியால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.

    இந்நிலையில், குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என டிஜபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    • குடியரசு தலைவருடன் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர்.
    • அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார்.

     ராமேசுவரம்

    பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது கலாம் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவரிடம் வழங்கினர்.

    அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார். அப்போது கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் தலைவரும், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாப்தீன், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, ஸ்ரீபிரியா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.
    • நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருதயம், நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர் சிறப்பு பிரிவுகள் இதில் அமைய உள்ளது.

    அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை ஜூன் 3ம் தேதியன்று திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் திட்டமிட்டிருந்தார்.

    இந்த ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழா என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சென்னைக்கு வரவழைத்து அவரது கையால் இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.

    இதற்காக ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று காலை 11.20 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவரை டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்றனர்.

    அதன்பிறகு தமிழ்நாடு இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிதுநேரம் அங்கிருந்துவிட்டு பகல் 11.20 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    அப்போது கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார். இதற்கு ஜனாதிபதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு சென்றபோது அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை செல்வதற்காக சென்றார். அப்போது மரியாதை நிமித்தமாக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதை நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    • தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும்.
    • மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

    ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும். 


    சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.

    பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும்.
    • சாதாரண மனிதர்கள், காவல் துறையினரை நண்பராக கருத வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின் போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும். 


    ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.

    குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும். அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தர வழிபாட்டுத் தலமாக மாற்ற நடவடிக்கை.
    • வாகன நிறுத்துமிடங்கள், உணவு வசதி, வங்கி வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிதியை வழங்கி உள்ளது.

    ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தரத்திலான வழிபாட்டுத் தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. 


    திறந்தவெளி வட்ட அரங்கங்கள், ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், சிறந்த உணவுக்கான வசதிகள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், வங்கி வசதி மற்றும் ஏடிஎம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், ஆந்திர துணை முதலமைச்சர் கோட்டு சத்யநாராயணா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 30ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
    • ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேம்பாடு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார்.

    27ந்தேதி ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுவார். மேலும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார். 

    28ந்தேதி அன்று, பத்ராசலம் சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத வழங்கும் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.  

    • கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
    • கிறிஸ்து போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.

    இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தைக் கொண்டு வருகிறது.

    இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகம் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது.

    டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது.

    கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×