search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.
    • நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருதயம், நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர் சிறப்பு பிரிவுகள் இதில் அமைய உள்ளது.

    அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை ஜூன் 3ம் தேதியன்று திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் திட்டமிட்டிருந்தார்.

    இந்த ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழா என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சென்னைக்கு வரவழைத்து அவரது கையால் இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.

    இதற்காக ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று காலை 11.20 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவரை டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட எம்.பி.க்கள் வரவேற்றனர்.

    அதன்பிறகு தமிழ்நாடு இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிதுநேரம் அங்கிருந்துவிட்டு பகல் 11.20 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

    அப்போது கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார். இதற்கு ஜனாதிபதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு சென்றபோது அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை செல்வதற்காக சென்றார். அப்போது மரியாதை நிமித்தமாக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதை நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    Next Story
    ×