search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police protection"

    • நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மும்பை

    முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

    தலைவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அடிப்படையில் ஒய், ஒய் பிளஸ் என பல்வேறு வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மந்திரிகள், தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    இதன்படி முன்னாள் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரிகள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல விஜய் வடேட்டிவார், பாலாசாகேப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பாஸ்கர் ஜாதவ், சதேஜ் பாட்டீல், தனஞ்செய் முண்டே, சினில் கேதாரே, நர்கரி ஜர்வால் மற்றும் வருண் சர்தேசாய் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு நீக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் அனில் தேஷ்முக் 3 பேரும் முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆவர்.

    அதேநேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும், நம்பகத்தன்மை வாய்ந்த உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அச்சுறுத்தல் உணர்வை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டவை என்றும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முன்னாள் மந்திரிகள் ஆவர். இனி இவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், அவர்களுக்கு துணையாகவும் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு இருக்காது.

    மராட்டிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மகா விகாஷ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    100 போலீசார்

    நெல்லை மாவட்டத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்றும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

    • முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    • பறக்கும் கேமரா மூலமும் கண்காணிப்பு
    • அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள், பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 976 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    விநாயகர் ஊர்வலம்

    இதற்கு பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் மொத்தம் 1500 போலீஸ் மற்றும் கூடுதலாக 261 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் 3 பறக்கும் மேராக்கள் மூலம் கண்காணிக்கவும், மொபைல் கமாண்ட் கன்ட்ரோல் யூனிட் வாகனம் ஒன்றும் ஊர்வலத்தின் போது கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கேமரா மூலம் கண்காணிப்பு

    அந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம் பிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சிசிடிவி மேராக்கள் மற்றும் டிஜிட்டல் மேப்பிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு இடையூறு செய்பவர்கள் குறிப்பாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 62 பேரை குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

    அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் சிலை ஏற்பாட்டாளர்கள் அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது
    • மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட அதே இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் 100 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலும் சுமார் 75 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. டவுன், கருங்குளம், விளாகம், கருப்பந்துறை, பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் சன்னதி திடலில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அங்கு 4 நாட்கள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

    மேலப்பாளையம் மருதுபாண்டியர் 1-வது தெருவில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை சிறுவர்கள் தள்ளுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பாதுகாப்பு

    மாநகர பகுதியில் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவண குமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. சிலைகள் வைக்கும் இடங்களில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும்.

    அந்த பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் நாளையும், பெரும்பாலான இடங்களில் 4-ந்தேதியும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் 250 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் மட்டும் 34 இடங்களில் பிரதிஷ்டைக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆழ்வார்குறிச்சி, புளியங்குடி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், பாவூர்சத்திரம், அச்சன்புதூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

    செங்கோட்டை பகுதியில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 250 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாநகர பகுதியில் மட்டும் 100 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்தார்

    திருவண்ணாமலை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது திருவண்ணாமலையில் முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.

    வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

    திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி அருகில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது பாட்டில்கள் வீசப்பட்டு கலவரம் ஏற்பட்டது.

    அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சிலை சந்திப்பு பகுதி, அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கடந்த 2018-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்ட சமுத்திரம் காலனி அருகில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் பார்வையிட்டார். அந்த பகுதியில் இந்த ஆண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அவர் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் தாமரை குளம் வரை நேரில் சென்று பார்வையிட்டார்.

    ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • தேர்வினையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • தேர்வு மையத்துக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது.

    கோவை,

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் (குரூப்-4) தேர்வு இன்று நடைபெற்றது.

    கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது. இந்த தேர்வை 77,020 பேர் எழுத பதிவு செய்திருந்தனர்.

    தேர்வாளர்கள் நுழைவு சீட்டை அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்து கொண்டனர். தேர்வு மையத்துக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது. தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக 24 மொபைல் அலுவலர்கள், 247 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், துணை கலெக்டர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

    மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வுகூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. விடைத்தாளில் விவரங்க ளை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்களை பயன்படுத்த அனுமதிக்க வில்லை. விடைத்தாளில் இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிவு செய்தனர்.

    தேர்வர்கள் தேர்வு தாளை சரியாக செய்துள்ளனரா? என்று உறுதி செய்து கொள்ள ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு முடிந்த பின்னர் 15 நிமிடங்கள் கூடுதல்லாக வழங்கப்பட்டது.

    அதாவது 12.30 மணி முதல் 12.45 மணி வரை இந்த செயல்பாட்டை முடித்து விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

    மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சவாரி செயல் பட்டு வரும் கடைகளின் கோடுகள் மற்றும் கடையின் பொருள்களை ரோடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து மெர்சல் ஏற்படுவதோடு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தற்போது ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இததனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ரோட்டை அளவீடு செய்யும் போது ஒரு சில பெரிய கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கடை உரிமையாளர்களுக்கு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கருத்தை முடித்து அகற்ற வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் :

    ராணுவத்தில் இளைஞர்களை பணியமர்த்துவதற்கு அக்னிபத் என புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. வடமாநிலங்களில் ரெயில் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

    இதனால் 12 ரெயில்கள் எரிக்கப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும் போராட்டங்கள் தென்மாநிலங்களுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் ரெயில் பாலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BombThreat
    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

    இலங்கையை தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரெயில், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

    குறிப்பாக இலங்கையை யொட்டி உள்ள ராமேசுவரம் கடல் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தமிழகத்தில் முக்கிய இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும், குறிப்பாக ராமேசுவரத்தில் பேரழிவை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் கொடுத்த தகவலின்பேரில் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    குறிப்பாக பாம்பன் ரெயில் பாலம் தகர்க்கப்படும் என தொலைபேசியில் பேசிய மர்ம நபர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல்டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று நள்ளிரவு வரை அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

    இதேபோல் பாம்பன் சாலை பாலத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் மிரட்டலையடுத்து 2 பாலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BombThreat
    இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #SriLankablast #Rameswaramtemple
    ராமேசுவரம்:

    இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

    குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகாப்டரிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். #SriLankablast #Rameswaramtemple
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 2 சிறப்பு எஸ்.பி.க்கள் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று டி.ஜ.ஜி. வனிதா தெரிவித்தார். #TiruvannamalaiGirivalam
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் வரும் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்த துணை ராணுவம், போலீசார் என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்திலேயே, பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

    சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

    இதனால் தேர்தல் மற்றும் சித்ரா பவுர்ணமி என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சித்ரா பவுர்ணமிக்கு முத்தரசி, ஷியாமளா ஆகிய 2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கோவிலுக்கு மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சித்ரா பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி வனிதா தெரிவித்தார்.

    சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



    இந்த பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

    மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்சு நிறுத்தி வைக்கப்படுகின்றன. #TiruvannamalaiGirivalam

    ×