search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh Assembly Election"

    • காங்கிரஸ் தலைவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது என கமல்நாத் விமர்சனம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச மாநில தலைவரும், முன்னாள் முதல்வரும், சிந்த்வாரா தொகுதி வேட்பாளருமான கமல்நாத் கூறுகையில் "ஒட்டுமொத்த மாநில மக்களும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுமக்கள், வாக்காளர்களை நான் நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம் என சொல்வதற்கு, நான் சிவராஜ் சிங் அல்ல. இடங்களின் எண்ணிக்கையை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

    பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களுக்கு அது அவர்களிடம் இருக்கும். நேற்று எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. யாரோ ஒருவர் எனக்கு மது மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கமல்நாத் முதல்வராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். உள்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.-க்கள் பிரிந்து சென்றதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

    • செல்போன் தயாரிப்பதில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று பெதுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "உலகளவில் செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது மிகப்பெரிய நாடாகியுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகியவை நிஜமாகும் என காங்கிரஸ் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆனால், நாங்கள் அதை செய்துள்ளோம். மத்திய பிரதேச மக்கள் மத்தியில் பா.ஜனதா மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கையும் பாசமும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    • ஏழைகளுக்கு 450 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
    • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் வி.டி.சர்மா, முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.450க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    ஏழைப் பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.

    கோதுமை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700, நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 வரை ஆதார விலை வழங்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை இலவச கல்வி.

    அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதிசெய்ய பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்று முதல் மந்திரி ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு வழங்கப்படும். 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.

    பழங்குடியின சமுதாயம் அதிகாரம் பெற பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிந்தியா அளித்துள்ள பேட்டியில், காங்கிரசிடம் அதிகாரத்திற்காக போட்டியிடுபவர்கள் உள்ளனர், அவர்களுக்கு குழுக்கள் உள்ளன, அவர்கள் முதலமைச்சராக திட்டம் தீட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன் காங்கிரசிடம் முதல் மந்திரி என்று கூறிக்கொள்ளும் 8 தலைவர்கள் உள்ளனர்.

    பா.ஜ.க. என்பது தொண்டர்களின் கட்சி. நாம் அனைவரும் காரியகர்த்தாக்கள், அப்படியே இருப்போம். மத்தியப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பிரதமர் தலைமையில் தேர்தலில் போராடுகிறது. நான் இந்தப் போட்டியில் (முதல் மந்திரி பதவிக்கு) இல்லை. நான் ஒரு சேவகன். நான் பந்தயத்தில் இல்லை என தெரிவித்தார்.

    • இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள், சிந்தியா பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சியை பண பலத்தால் பா.ஜ.க. கலைத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 2018 சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியின் முதல்வராக கமல் நாத் தேர்வு செய்யப்பட்டார்.

    பிறகு 2020 மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியை கவிழ்க்க காரணமாக செயல்பட்டனர். இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றார். பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிந்தியா ஆகியோர் பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் ராய்பூரை அடுத்த பார்வானியில் நடைபெற்ற பிராசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "கடந்த சட்டசபை தேர்தலின் போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி 25 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த கடன்களை தள்ளுபடி செய்தோம்."

    "ஆனால் பா.ஜ.க. மற்றும் அதன் தொழிலதிபர்கள் அடங்கிய சகாக்கள் உங்களது அரசாங்கத்தை சட்டசபை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து திருடி விட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கைகளில் பணம் கிடைத்தால், அவர்கள் அதனை கிராமங்கள் மற்றும் நகரங்களில் செலவிடுவர். இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும். இதே நிலை சத்தீஸ்கரில் வெற்றிகரமாக எட்டப்பட்டது," என்று தெரிவித்தார்.

    • உங்களுடைய ஒரு வாக்கு பா.ஜனதா மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும்.
    • உங்களுடைய வாக்கு டெல்லியில் மோடி அரசை வலுப்படுத்தும்.

    பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னுடைய அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளை உருவாக்கியுள்ளது. ஆனால், எனக்காக அதில் ஒரு வீடு கூட இல்லை. உங்களுடைய ஒரு வாக்கு பா.ஜனதா மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும். உங்களுடைய வாக்கு டெல்லியில் மோடியை வலுப்படுத்தவும், மத்திய பிரதேச ஆட்சியில் இருந்து ஊழல் காங்கிரசை பல மைல் தூரத்திற்கு விரட்டவும் உதவும். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு வாக்கில் மூன்று அதிசயங்கள். இது மூன்று சக்திகளை (Trishakti) போன்றது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு திட்டத்தின் மூலம் பயனடைய காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட 10 கோடி போலி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு 2.75 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது என்னை வசைபாடுகிறார்கள்.

    இப்போது நான் எங்கு சென்றாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது பற்றி பேசப்படுகிறது. நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுகிறது. நாம் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்டியுள்ள நிலையில், 30 ஆயிரம் பஞ்சாயத்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்ததில் பா.ஜனதாவின் டபுள்-என்ஜின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சட்னாவில் ஏழை மக்கள் 1.32 லட்சம் வீடுகளை பெற்றுள்ளனர்.

    • ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போபாலில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
    • அப்போது, ஆம் ஆத்மியின் நேர்மையை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர் என கூறினார்.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் பேரணியாக சென்று வாக்கு கேட்டனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    75 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் பாஜ.க ஆகிய கட்சிகளால் சாதிக்க முடியாததை ஆம் ஆத்மி கட்சி 5 ஆண்டுகளில் சாதித்துள்ளது.

    டெல்லி மக்களுக்கு மின்சாரம் கூட இலவசமாக வழங்கப்படுகிறது.

    சுதந்திரத்திற்குப் பிறகு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 2 கட்சிகள் மட்டுமே இருந்தன. இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கஜானாவை நிரப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் ஆம் ஆத்மியை உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என குறிப்பிட்டார்.

    • விதிமீறலில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்தது.
    • மத்திய பிரதேசம் மாநிலத்தின் குணா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    போபால்:

    சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழஙகும் திட்டம் நீட்டிக்கப்படுகிறது என்றார்.

    ஆனால், நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் குணா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் தருவதாக அறிவித்து குற்றம் இழைத்துள்ளதால் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சென்று புகார் அளிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    காங்கிரசைக் கண்டு நான் பயப்பட வேண்டுமா? என்னைத் தடுக்க நீங்கள் உலகில் எந்த நீதிமன்றத்திற்கும் செல்லலாம்.

    நான் மக்கள் மன்றத்தில் முடிவுகளை எடுக்கிறேன் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    • மத்திய பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

    இந்தூர்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். இந்த பேரணி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

    அப்போது, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார்.

    ஆனால், அதனை வாங்கிப் பார்த்த பிரியங்கா காந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பூங்கொத்தில் ஒரு பூவை கூட காணவில்லை. அது காலியாக இருந்தது. இதனைப் பார்த்த அவர் மேடையிலேயே சிரித்துவிட்டார். அவருடன் மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.

    இதுதொடர்பாக வெளியான வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக சென்று பிரியங்கா காந்திக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர்களை புன்னகையோடு வரவேற்று, அவர் திருப்பி அனுப்புகிறார். சிலர் அவருக்கு ரோஜாக்களை வழங்கினர். வேறு சிலர் அவருடன் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

    அப்போது ஒருவர், பூங்கொத்து கொண்டு வந்து கொடுக்கிறார். அதனைப் பார்த்த பிரியங்கா, இதில் பூக்கள் எங்கே? என அவரிடம் கேட்கிறார். சிரித்துக்கொண்டே அவர் பின்னால் சென்று மறைகிறார். இதனை கவனித்த கட்சி தொண்டர்கள் இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

    • சீட் கொடுக்காததால் சில தலைவர்கள், சொந்த கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி
    • முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கியுள்ளது காங்கிரஸ்

    மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளும் களத்தில் உள்ளன.

    பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத தலைவர்களில் சிலர், காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தனர். சில தலைவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். சில தலைவர்கள் சமாஜ்வாடி, பகுஜன் சமா, ஆம் ஆத்மி கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு சொந்த கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்யிடும் 39 தலைவர்களை காங்கிரஸ் கட்சி, கமல்நாத்தின் நேரடி உத்தரவின்பேரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

    இதில் முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு (அலோட்), முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் அந்தர் சிங் தர்பார் (மோவ்), யாத்வேந்த்ர சிங் (நகோட்) ஆகியோர் அடங்குவர். மேலும், மாநில கட்சி செய்தி தொடர்பாளர் அஜய் சிங் யாதவ் (கர்காபுர்), நசிர் இஸ்லாம் (போபால் வடக்கு), அமிர் அக்யீல் (போபால் வடக்கு) ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

    • மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கரேலி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் எங்கு சென்றாலும் மக்கள் சிவராஜ் சிங்குக்கு அன்பான பிரியாவிடை கொடுக்க முடிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.

    சிவராஜ் சிங் 22,000 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் அவரது அறிவிப்பு மெஷின் இரட்டிப்பு வேகத்தில் இயங்கியது.

    ஆனால் அறிவிப்பு மெஷினின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
    • மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது.

    லக்னோ:

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது. இங்கு பா.ஜ.க. ஆளும் கட்சியாக திகழ்கிறது.

    முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் சமாஜ்வாடிக்கு 6 தொகுதிகள் வழங்க முடிவு எட்டப்பட்டு இருந்த நிலையில், 229 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. இதனால் சமாஜ்வாடி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி சார்பிலும் 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடாது என்றும், சமாஜ் வாடியுடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உ.பி.யின் ஹர்டோய் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு பின் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புகிறதா, இல்லையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். எங்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம். உங்களுடன் கூட்டணி குறித்து மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க தனியாக போட்டியிடுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்.

    கூட்டணி இல்லை என்றால் எங்களை அழைத்தது ஏன்? 2024 பாராளுமன்ற தேர்தலில் மட்டும்தான் கூட்டணி, மாநில அளவில் கூட்டணி கிடையாது என்பதை அவர்கள் தெளிவாக தெரிவித்து இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    ×