search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    கும்பகோணம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சாக்கோட்டை கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கொத்தனார். இவரது மகன் பூவரசன்(22). ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப தகராறு காரணமாக பூவரசன் தனது அம்மாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதை தட்டிக்கேட்ட ரவியை அரிவாளால் பூவரசன் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரவியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அண்ணலக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மனமுடைந்த மோகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கும்பகோணம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணம்:

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்கிரஹாரம் மாத்தி கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷா தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் எடுத்து செல்வது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.

    செல்வத்திடம் நடத்திய விசாரணையில் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், தன்னிடம் கடன் பெறுபவர்களுக்கு பணத்தை கொடுக்க எடுத்து சென்றதாக கூறினார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாதததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55). இவர் நேற்று கும்பகோணத்திலுள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கம்பி இறக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்

    கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கும்பகோணம்:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    கும்பகோணம் லாட்ஜில் சென்னை வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    சென்னை அம்பத்தூர் சிட்கோ நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது41) என்பவர் கடந்த 22-ந்தேதி காலை கும்பகோணம் பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனியார் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார்.

    அன்று மதியம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்.

    நேற்று 24-ந்தேதி இரவு வரை அறையை விட்டு வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்காததால் லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது துண்டு மட்டும் அணிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் மருந்து ஸ்பிரே கிடந்தது. அவரை உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சென்னையில் இருந்துதான் வந்து தங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் மூச்சுத் திணறலில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கவுதமநதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் சிறப்புமிக்கது.

    தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் அருணா சலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை சுமார் 9 மணியளவில் சந்திர சேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்த வாரிக்கு சென்றார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே, சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நதியில் நடைபெற்றது.



    கவுதமநதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் அதனை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தீர்த்தவாரி முடிந்தபிறகு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல சத்திரிய வள்ளால மகாராஜா மடாலய சங்கத்தலைவர் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மேலும் மாசி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 11.53 தொடங்கி நேற்று இரவு 9.32 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை ஏராளமான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது. பகலில் வெயில் கொளுத்தினாலும், பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
    கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசி மக திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக் கான மாசி மகத்திருவிழாவையொட்டி கும்பகோணம் மகா மகத்திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் 11-ந் தேதி வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இந்த நிலையில் ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசி விசுவநாத சுவாமி கோவில், அபிமுகேஸ்வர சுவாமி கோவில், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் மகாமகக்குள கரையில் நேற்று மாலை நடந்தது. இதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



    மாசி மக திருவிழாவை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதையடுத்து மதியம் 12 மணியளவில் மகாமகக் குளகரையில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. 10 நாள் உற்சவம் நடைபெறும் சிவன் கோவில்களான கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி, பாணபுரீஸ்வரர் கோவில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை யடுத்து அந்தந்த கோவில் களின் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது.

    அப்போது மகாமகக் குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி - அம்பாளை வழிபட்டனர்.

    முன்னதாக இன்று காலை மாசி மக தீர்த்தவாரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகா மகக்குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.
    கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சுபபிரியா (வயது 21). இவர் கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சுபபிரியாவின் தாய் சித்ரா அதிர்ச்சி அடைந்து மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.

    இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து தாய் சித்ராவின் செல்போனுக்கு நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து மகளை மீட்டு கொள்ளுங்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவியை கடத்திய கும்பல், பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 7 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Ponmanickavel
    சென்னை:

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக தற்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-5-1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது.

    போலீசில் புகார் கொடுத்தும் கடந்த 47 வருடங்களாக உரிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

    இதுதொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.



    இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Ponmanickavel
    கும்பகோணத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×