search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Yoga Day"

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #InternationalYogaDay2018
    சென்னை:

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    யோகா என்பது உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் அறிவியல் பூர்வ கலையாகும்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதட்டம் போன்றவற்றை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.


    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மூலம் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.

    அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #InternationalYogaDay2018
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    சமூக வலை தளங்களில் வி.ஐ.பி.க்களின் உடல் பிட்னஸ் வீடியோக்கள் தான் தற்போது ஹாட்டாபிக்காக உள்ளது.

    மத்திய மந்திரி ராஜ்வர்தன் ரதோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதோடு, கிரிக்கெட் வீரர்கள் கோலி, தோனி ஆகியோர் தங்களது பிட்னசை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். இதை ஏற்று கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். மேலும், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தனது உடல் பிட்னசை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி சவால் விடுத்தார். மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

    நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

    நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    சத்குருவின் இந்த சவால் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JaggiVasudev #EdappadiPalanisamy #OPanneerSelvam #MKStalin
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுமார் 3.75 லட்சம் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு யோகா பயிற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகமானது. அதன் பிறகு சர்வதேச யோகா தினம் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்தும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் சர்வதேச யோகா தினமான இன்று குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் என 460-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 3¾ லட்சம் பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பள்ளி, கல்லூரிகளின் வரவேற்பு அறை, விளையாட்டு மைதானம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் இப்பயிற்சி நடைபெற்றது.

    நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த யோகா பயிற்சியில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். இதனை ஈஷா யோகா மையத்தினர் நடத்தினர். இதில் ஈஷா யோகா மையத்தின் யோகேந்திரன், கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-



    இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு யோகா பயிற்சியும், அதன் பலனும் உலக நாடுகள் முழுவதும் பரவியது. யோகா மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இது மனதிற்கும், உடலுக்கும் தெம்பு தரும் பயிற்சி ஆகும். இதனை மேற்கொண்டால் மக்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

    இந்தியாவில் சித்தர்களும், ரிஷிகளும் மேற்கொண்ட இந்த பயிற்சி இன்று உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட வேண்டுமானால் நாட்டு மக்களின் ஆரோக்கியம் முக்கியம். அதனை யோகா பயிற்சி நமக்கு அளிக்கிறது.

    சிறிய நாடான மொராக்கோவில் சுமார் 36 ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். நாகர்கோவில் நகரை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. இங்குள்ள மக்கள் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபோல அர்ஜென்டினா நாட்டிலும் மக்கள் யோகா பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 170 நாடுகளில் யோகா பயிற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டார். அவருடன் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், நர்சுகள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதில், போலீஸ் அதிகாரிகள், மகளிர் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதனை பிரம்மகுமாரிகள் அமைப்பு செய்திருந்தது. #InternationalYogaDay2018 #Yoga #PonRadhakrishnan
    உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்#InternationalYogaDay2018
    ஜெய்ப்பூர்:

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



    மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. #InternationalYogaDay2018
    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018
    டோராடூன்:

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி, மற்ற மாணவர்கள் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். சுமார் 55 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



    முன்னதாக அவர் பேசும் போது, யோகா உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு கருவியாகி உள்ளதாக கூறினார். இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா செய்து வருகின்றனர். 
    சர்வதேச யோகா தினத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். #Dehradun #InternationalYogaDay #PMModi
    டேராடூன்:

    சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகாவின் தாயகமான இந்தியாவில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 55,000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.  

    இந்நிலையில், பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று இரவு டேராடூன் வந்தடைந்தார். அவரை உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை சென்ற பிரத்மர் மோடி இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Dehradun #InternationalYogaDay #PMModi
    சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி தலைமையில் 21-ம் தேதி டேராடூன் நகரில் நடைபெறும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi

    டேராடூன்:

    நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகரான டேராடூன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சியை நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 



    டேராடூன் நகரில் சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த யோகாசன நிகழ்ச்சியையொட்டி, மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணிகளை பா.ஜ.க.வினர் நடத்தி வருகின்றனர்.

    யோகாசனம் நடைபெறும் முகாம் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி, பிரதமர் வரும் பாதையை செப்பனிடும் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 20-ம் தேதி இரவு 9 மணியளவில் டேராடூன் நகருக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். 21-ம் தேதி அதிகாலை வனத்துறை ஆராய்ச்சி மையத்துக்கு செல்லும் அவர், காலை 6.45 முதல் 7.45 மணிவரை யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  



    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறை ஆராய்ச்சி மையம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    டேராடூன் நகரம் முழுவதும் போலீசார், துணை ராணுவம் மற்றும் கருப்பு பூனை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை ஆராய்ச்சி மையம் பகுதியில் பதாககைளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு, டேராடூன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். #internationalyogaday
    கேன்பெர்ரா:

    ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம் துவங்கப்பட்டது மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஜனநாயகத்தின் அதிஅற்புத சக்தியாக உருவாகி வரும் இந்தியாவுடன் இந்த யோகா கலைக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் கலை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவது சிறப்பான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.



    இதையடுத்து, சமூக நலனுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்களின் மன உளைச்சலை சரிசெய்ய யோகா உதவும் என ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இதுதொடர்பாக பேசிய வாசுதேவ் கிரியா யோகா அமைப்பின் தலைவர், உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் பாராளுமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இதே நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி விக்டோரியன் பாராளுமன்றத்திலும் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். #internationalyogaday
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது.
    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் ஒருவார கால யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது.


    நியூயார்க் நகரில் நடைபெற்ற இரண்டு மணிநேர யோகாசன நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவத்தி மற்றும் ஏராளமான உள்நாட்டு மக்களும், இந்தியர்களும் பங்கேற்றனர். சுதந்திர தேவி சிலையின் பின்னணியில் சூரிய நமஸ்காரம், பிராணாயமா உள்ளிட்ட மூச்சு பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

    வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில் பகுதி மற்றும் சில முக்கிய பெருநகரங்களில் நான்காவது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. #InternationalYogaDay #YogaDaycelebrations #USYogaDay
    மைசூருவில் கடந்த ஆண்டை போலவே மீண்டும் ஒரு பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை வரும் ஜூன் 21-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #Yoga #InternationalYogaDay
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம், மைசூருவில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. ஒரே இடத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    இந்நிலையில், சுகாதர ஆர்வலர்கள், நமது பண்பாட்டு கலையான யோகவை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு மைசூருவில் மீண்டும் ஒரு  பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    உலக யோகா தினம் கொண்டாடப்படும் தினமான ஜூன் 21-ம் தேதி மைசூரு மாவட்டம் சாமுண்டி பகுதியில் உள்ள மைசூரு ரேஸ் கிளப்பில் இந்த நிகழ்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    ஆனால், போதிய நிதி இல்லாத காரணத்தினால் கின்னஸ் சாதனை அலுவலகத்துக்கு இந்நிகழ்ச்சியை பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல இம்முறை சாதனையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  #Yoga #InternationalYogaDay
    ×