என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை யோகா விழா - களைகட்டும் டேராடூன் நகரம்
சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி தலைமையில் 21-ம் தேதி டேராடூன் நகரில் நடைபெறும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi
டேராடூன்:
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகரான டேராடூன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் யோகாசன நிகழ்ச்சியை நடத்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

டேராடூன் நகரில் சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் இந்த யோகாசன நிகழ்ச்சியையொட்டி, மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணிகளை பா.ஜ.க.வினர் நடத்தி வருகின்றனர்.
யோகாசனம் நடைபெறும் முகாம் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி, பிரதமர் வரும் பாதையை செப்பனிடும் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 20-ம் தேதி இரவு 9 மணியளவில் டேராடூன் நகருக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். 21-ம் தேதி அதிகாலை வனத்துறை ஆராய்ச்சி மையத்துக்கு செல்லும் அவர், காலை 6.45 முதல் 7.45 மணிவரை யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறை ஆராய்ச்சி மையம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூன் நகரம் முழுவதும் போலீசார், துணை ராணுவம் மற்றும் கருப்பு பூனை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை ஆராய்ச்சி மையம் பகுதியில் பதாககைளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டு, டேராடூன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #InternationalYogaDay #Dehradun #PMModi
Next Story






