search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrocarbon project"

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #indiacommunistparty #hydrocarbonproject

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் கல்யாண சுந்தரம், காசிநாதன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். 4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #indiacommunistparty #hydrocarbonproject

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Seeman #HydrocarbonProject

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக் குறியாக்கி சுற்றுச் சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் 1,794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதே போல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம் எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித் திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத் துரோகம்.

    தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், ரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும். அதனை எதன்பொருட்டும் இன மானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

    மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.

    இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க் களமாகத் தமிழகம் மாறும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார். #Seeman #HydrocarbonProject

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HydrocarbonProject #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடங்கி, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகளும் தமிழக மக்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வலிந்து செயல் படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்து இருப்பது தமிழ் நாட்டின் மீது உள்ள மோடி அரசின் வன்மத்தைப் பறை சாற்றுகின்றது.


    நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டக்களத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கொந்தளிப்பை அலட்சியப் படுத்திவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.

    ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து காவேரி பாசனப் பகுதி மக்களை பஞ்சத்தில் தள்ளி வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த மண்ணை விட்டு ஏதிலிகளாக இடம்பெயரச் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றது.

    வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிர்க்க மக்களுக்கு துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.

    தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து விட முடியாது. அடிமைச் சேவகம் புரியும் தமிழக அரசைத் துணைக்கு வைத்துக் கொண்டு, அடக்கு முறையை ஏவி, மக்கள் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகின்றது. அது பகல் கனவாகவே முடியும்.

    மத்திய பாஜக அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இல்லையேல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #HydrocarbonProject #Vaiko

    தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. #HydrocarbonProject #Vedanta
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 55 இடங்களிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. 

    இந்த டெண்டரில் வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளன. 

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதற்கிடையே நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், காவரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமேஸ்வரம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #HydrocarbonProject #Vedanta
    மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று கூறி ஏமாற்றி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது, தமிழக வேளாண்மை முன்னேற்றம் பற்றியோ, தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் துயரம் மறைவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுப்புறச்சூழலைக் கெடுத்து வரும் அதே வேதாந்தா நிறுவனத்திற்கு, மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இடங்களை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசும் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு உறுதுணையாக இருந்து “அரச பயங்கரவாதத்தை” அப்பாவி மக்கள் மீது இரண்டு அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டது உண்மையாகியிருக்கிறது.

    விளை நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகளின் நலன், அப்பகுதியில் வாழும் மக்களின் சுற்றுப்புறச்சூழலுக்கு ஆபத்து என்று வாழ்வாதாரத்திற்கும் உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது கிஞ்சிற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல.


    எனவே, வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாயமான நிலை உருவாகும் என்று மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆகவே, “தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை” காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதியும் இத்திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    “தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியதை நினைவுபடுத்தி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin  #HydrocarbonProject #BJP
    தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #HydrocarbonProject
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது.

    இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர்.

    இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.

    இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று 180 நாட்களுக்குள் அதனை தொடங்கவேண்டும் என்று சட்டவிதிகள் உள்ளது.

    ஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் திட்டம் தொடங்க காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


    எனவே ஜெம் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு தங்களுக்கு நெடுவாசலை தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கூற தொடர்ந்து அந்த அமைச்சகம் காலதாமதம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது.

    மேலும் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தங்களுக்கு மாற்றித்தர இழுத்தடிப்பு செய்து வருவதால் தங்கள் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் கிராமத்தில் கைவிட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன் கூறியதாவது:-

    நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதியை ஜெம் நிறுவனத்திற்கு வழங்கிய மத்திய அரசு, 180 நாட்கள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால் அனுமதியை ஏற்கனவே ரத்து செய்து விட்டது. அதன்பிறகு அதே மத்திய அரசு சர்வதேச அனுமதியை வழங்கியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கலாம். எனவே ஜெம் நிறுவனம் திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது.

    மத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும். நாளை மறுநாள் (12-ந்தேதி) நெடுவாசலில் ஆலோசனை கூட் டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #HydrocarbonProject
    ×