search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrocarbon struggle"

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Seeman #HydrocarbonProject

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக் குறியாக்கி சுற்றுச் சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.

    நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் 1,794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதே போல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம் எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித் திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத் துரோகம்.

    தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், ரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும். அதனை எதன்பொருட்டும் இன மானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

    மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.

    இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க் களமாகத் தமிழகம் மாறும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார். #Seeman #HydrocarbonProject

    ×