search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor banwarilal purohit"

    ராமேசுவரத்தில் புனரமைக்கப்பட்ட மேலும் 30 தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அர்ப்பணித்தார். #TNGovernor #BanwarilalPurohit
    ராமேசுவரம்:

    புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் இன்னும் பல தீர்த்தங்கள் இருந்ததாக வரலாறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் ஆராய்ச்சியில் இறங்கியது.

    இதில் 1964-ம் ஆண்டு 62 தீர்த்தங்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. அதில் 30 தீர்த்தங்கள் ஜடாமகுட தீர்த்தம், தங்கச்சிமடம், மண்டபம், உப்பூர், வடகார் உள்பட பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்த 30 தீர்த்தங்களும் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

    30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்களதீர்த்த தெப்பத்தில் விட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழிபட்டார். அருகில் கலெக்டர் வீரராகவராவ் உள்ளார்.

    இதனை தொடர்ந்து 30 தீர்த்தங்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. தங்கச்சி மடம் அருகே உள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் பங்கேற்றார். 30 தீர்த்தங்களும் தனித்தனி குடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு குடத்தில் 30 தீர்த்தங்களும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு 30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்கள தீர்த்த தெப்பத்தில் கவர்னர் ஊற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள், அறநிலையத்துறையினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.  #TNGovernor #BanwarilalPurohit
    உயர்கல்வியில் தமிழகம் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது என்று சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபையும் இணைந்து ‘நிர்வாக மேன்மையில் புதிய உருமாற்றங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை நடத்துகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தொடங்கியது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பலத்தை புரிந்துகொண்டு, செயல் திட்டத்தை வகுத்து வெற்றி மற்றும் சிறப்பான இடத்தை பெறவேண்டியது இந்த தருணத்தில் அவசியமானது ஆகும். கல்வி மற்றும் தொழில்முனைவோர் திறன் ஆகியவை தான் நம்முடைய பலம். உலக கல்வி வரைபடத்தில் நாம் முக்கிய இடத்தை வகிக்கிறோம்.

    850 பல்கலைக்கழகங்கள், 42 ஆயிரத்து 26 கல்லூரிகள் என உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் உயர் கல்வியில் தமிழகம் பெரும் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது. தமிழக பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. பள்ளிகளில் படிப்பு முடித்து உயர்படிப்புக்கு செல்லும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களை விடவும் தமிழகம் 2 மடங்கு அதிகமானவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்பு பல்கலைக்கழக கல்வியில் அதிகப்படியான முதலீடுகள் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம். மாநில பல்கலைக்கழகங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அளப்பரிய கட்டுமானம் மற்றும் மனித வளம் ஆகியவை உயர் கல்வியை இந்தியா மற்றும் தமிழகத்தில் வலுவடையச் செய்துள்ளது.

    நமக்கு தற்போது காலம் பிரகாசமாக கனிந்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் முன்னோக்கி நடைபோடவேண்டும். மொத்த உலகமும் நமது மேடை. செழிப்பு மற்றும் வளர்ச்சியடைந்த வேலைவாய்ப்பு என்ற பாதையை நோக்கி நம்முடைய செயல்பாடு இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல் நாள் மாநாட்டில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாசலம், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் எஸ்.கோதை, இணை பேராசிரியர் பஞ்சாபி மாலா தேவிதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ராமேசுவரம்:

    தென்னிந்தியாவில் புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினால் நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அண்மையில் ராமேசுவரம் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் 30 தீர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ளன.

    இதனை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் பின்னர் தீர்த்தங்களை திறத்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி மாவட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். #TNGovernor #Banwarilalpurohit
    நதிநீர் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். #TNAssembly #AssemblySession #WaterDispute
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள சில அம்சங்களை பார்ப்போம்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.

    ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.

    புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

    பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறைவாக உள்ளது; எனவே கூடுதல் பள்ளிகள் அமைப்பதற்காக புதிய திட்டம்.

    தமிழகத்திற்கான ரூ.7669 கோடி வரி வருவாய் இதுவரை வழங்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில பங்கினை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது.


    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

    அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. நீர் பகிர்வு உரிமையை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் செயல்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

    நீர்ப்பகிர்வு உரிமையை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது.  நதிநீர்ப் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNAssembly #AssemblySession #WaterDispute
    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். #Banwarilalpurohit #SudhaSeshayyan
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.

    இதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வந்தது.

    எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் உள்பட 48 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மயில்வாகனன் நடராஜன் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி மீண்டும் துணை வேந்தர் பதவியைப் பெற சட்ட உதவியை நாடி உள்ளார்.

    இதனால் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் டாக்டர் சுதா சே‌ஷய்யன் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    டாக்டர் சுதா சே‌ஷய்யன் துணை வேந்தராக தேர்வான தகவலை கவர்னர் பன்வாரிலால் இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டாக்டர் சுதா சே‌ஷய்யன் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

    30 வயதில் டாக்டராக சேவையை தொடங்கிய சுதா சே‌ஷய்யன் இன்று மருத்துவ துறையின் உயர் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த எழுத்தாளரான அவர் மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்.

    சிறந்த பேச்சாளரான அவர் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஆன்மீக இசையிலும் சிறந்து விளங்குபவர். முக்கிய பிரமுகர்களின் பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனித்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MGRMedicalUniversity #Banwarilalpurohit #SudhaSeshayyan
    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடக்கி வைத்தார். #ChancellorsCupCricket #BanwarilalPurohit
    சென்னை:

    தமிழகத்தில் முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்படும் இப்போட்டித் தொடர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    துவக்க விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு டாஸ் போட்டு போட்டியை  தொடங்கி வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இப்போட்டித் தொடரில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி பொங்கலுக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. #ChancellorsCupCricket #BanwarilalPurohit
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்துள்ள வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டையை அகற்ற மத்திய அரசின் இந்நிலைப்பாடு பெரிதும் உதவும். அந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

    அதை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலையின் போது உயிரிழந்த வேறு சிலரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 161-வது பிரிவுகளின் கீழ் ஏற்கனவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட மத்திய அரசு, 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகி விட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.


    7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்த நிலையில் தான் மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அப்பாஸ் உள்ளிட்ட சிலரின் வழக்குகளைக் காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை தாமதப்படுத்தி வந்த ஆளுனர், மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? என்பது தான் இப்போது விடை காணப்பட வேண்டிய வினாவாகும். 7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்து கடந்த 9.9.2018 அன்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாளில் இருந்தே, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்றுவதற்காக அவர்களின் விடுதலையை தமிழக ஆளுனர் திட்டமிட்டு தாமதித்து வந்தார்.

    7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இன்றுடன் 93 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இனியும் ஆளுனர் தாமதிப்பது முறையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்ற ஒற்றை விதியை மட்டும் வைத்துக் கொண்டு, 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்வதை தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இந்தத் தவறை தமிழக ஆளுனர் மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்து வரும் 17-ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை தமிழக அரசும், தமிழக ஆளுனரும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகள் உடலை திடமாக இருக்க உதவும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    ஈரோடு:

    ஈஷா யோகா மையம் சார்பில் 14-வது ஈஷா கிரா மோத்சவம் விழா ஈரோடு அருகே கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் நேற்று நடைபெற்றது.

    விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமோத்சவம் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு என்பது தன்னம்பிக்கையுடனும், கவுரவத்தை பாதுகாக்க தைரியமாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது. பள்ளிக் கூடங்கள் திறமைகளை ஊக்குவிப்பதற்கான மையங்கள் ஆகும். எனவே பள்ளிக்கூடங்களில் பாடங்களுடன் சேர்ந்து விளையாட்டும் கற்று கொடுக்கப்படுகிறது.

    சுவாமி விவேகானந்தர் கூறும் போது வலிமை என்பது வாழ்க்கை, பலவீனம் என்பது மரணம் என்று குறிப்பிட்டு உள்ளார். நீ உன் மீது நம்பிக்கை கொள்ளாத வரை நீ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாதே என்றும் கூறியுள்ளார். விளையாட்டு ஆரோக்கியமான உடலையும், மன தைரியத்தையும் தருகிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.

    விளையாட்டில் பங்கேற்றால் போட்டித்திறன், நேர மேலாண்மை, குழுப் பணி ஆகியவற்றின் திறமைகள் வளர்ச்சி பெற உதவுகிறது. உடலின் இயல்பான திறமைகளை மீறி போட்டியிடுவதற்கும், உற்சாகம் அடைவதற்கும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஈஷா கிராமோத்சவத்தில் கலந்து கொண்ட 40 ஆயிரம் வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்களில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இறுதி போட்டியில் விளையாடினார்கள். இதுபோன்று வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயர்த்தும் வகையில் கிராமப்புற மக்களை உருவாக்கும் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

    கபடி என்பது தமிழ்நாடு மாநில விளையாட்டு. இது ‘‘சடுகுடு’’ என்கிற தமிழ்மொழி வார்த்தையில் இருந்து வந்தது.

    கடந்த 1964-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கைப்பந்து சேர்க்கப்பட்டது. இது உலகம் முழுவதும் விளையாடிய பிரபலமான விளையாட்டு ஆகும். 1940-ம் ஆண்டிலேயே ஆசியாவிலேயே இந்தியாவில் முதல் முதலாக பெண்கள் எறிப்பந்து போட்டியை விளையாடியது பலரும் அறிந்து இருக்கலாம்.

    கபடி, கைப்பந்து, எறிப்பந்து ஆகிய 3 போட்டிகளும் அனைவருக்கும் பொதுவானது. அதன் விதிமுறைகள் எளிதாக இருப்பதால் அனைவராலும் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாடுபவர்களின் உடல் திடமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் 3 விளையாட்டுகளும் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதில் ஆச்சரியம் இல்லை.

    இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். #Vaiko #BanwarilalPurohit
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். மாவட்டம் தோறும் கலெக்டர்களை அழைத்து கொண்டு புரோக்கர் போல் செயல்படுகிறார்.


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

    இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய போராட்டமாக மாறும்.

    இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #BanwarilalPurohit
    சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். #PeriyarUniversity #Banwarilalpurohit
    கருப்பூர்:

    சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.

    அப்போது கவர்னருக்கு விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

    விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்று பேசினார்.


    இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள் என 49 ஆயிரத்து 534 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் பட்டமளிப்பு விழாவுரை நிகழ்த்தினார். இதில் கலெக்டர் ரோகிணி மற்றும் பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவர்னர் வருகையையொட்டி சேலம் மாநகர காவல் துறை சார்பில் கவர்னர் வரும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #PeriyarUniversity #Banwarilalpurohit
    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் 322 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்குகிறார். #TNGovernor #BanwarilalPurohit
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா நாளை காலை (25-ந் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 322 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் 45 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், மத்திய தீர்ப்பாயத்தின் தலைவருமான நரசிம்ம ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பல்கலைக் கழகத்தில் நேரடியாக படித்த 5 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் மற்றும் தொலைதூர கல்வி மூலம் படித்த 63 ஆயிரத்து 187 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

    அங்கு பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்கள்-பதக்கங்கள் வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்து விட்டு சிதம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணியளவில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னரின் வருகையையொட்டி சிதம்பரத்தில் ரெயில், பஸ் நிலையம், மேம்பாலம், பல்கலைக்கழக வளாகம், நடராஜர் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற கவர்னர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். #GajaCyclone #Banwarilalpurohit
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கியதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாகை வந்தார்.

    புயலால் பாதித்த நாகை மற்றும் வேளாங்கண்ணி, வேதாரண்யம், சாலை வழியாக காமேஸ்வரம், விழுந்த மாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.


    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் மல்க கவர்னரிடம் தங்கள் படும் அவலநிலையை எடுத்து கூறினர்.

    இதை கேட்டுக் கொண்ட கவர்னர், அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    பின்னர் மன்னார்குடி அருகே காசாங்குளம், சேரி, கோட்டூர், கோட்டூர் தோட்டம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு தங்கள் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்தும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த புயல் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டது. நாங்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு நிவாரண பணி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

    இதனை கேட்டுக் கொண்ட கவர்னர் அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். தொடர்ந்து உங்கள் பகுதிக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.

    இதன் பின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று அவர்களிடம் கவர்னர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள அரசினர் மாளிகைக்கு சென்ற கவர்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் பிற்பகலில் மீண்டும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட புயலால் சேதமான பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்கிறார். #GajaCyclone #TNGovernor #Banwarilalpurohit

    ×