search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood relief"

    சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
    சென்னை:

    அயனாவரம் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தங்களுக்கு அங்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என சென்னை  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
    கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆறு கரையோர பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி கொள்ளிடம் ஆறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் ஜவகர், அலெக்ஸ், நடராஜன், சிவக்குமார், பாலா, யோகேஷ், ரவீந்திரன், பால்ராஜ், ரத்தினகுமார், அக்பர், வக்கீல்கள் ரங்கநாதன், ரமேஷ், பிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் அரிசி, பிஸ்கெட், துணி மணிகள், பெட்சீட், காய்கறிகள் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    பொருட்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்டு கடலூருக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    கர்நாடக மாநிலத்தில் வெள்ள நிவாரணத்துக்கு முகநூல் மூலம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஜய்சர்மா என்பவர், குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில், ‘‘குடவா சமாஜம்” அமைப்பு மூலம் நிதி சேகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், குடவா சமாஜம் அமைப்பு இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அந்த அமைப்பின் செயலாளர் சுப்பையா, பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தார்.

    இதன் பேரில், விஜய் சர்மாவின் வங்கி கணக்கை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதில், பல்வேறு நபர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று விஜய் சர்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகியவற்றுக்கும் நிதி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

    பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது முகநூல் மூலமாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.75 லட்சம் நிதி வசூலித்தார். அதில் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் பேரில், லட்சுமியிடம் நடத்த விசாரணையில், அவர் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு யாரேனும் உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட அரசின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வெள்ள நிவாரண நிதியில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார் வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவியின் மனித நேயத்தை பாராட்டி அவருக்கு சைக்கிள் நிறுவனம் ஒன்று புது சைக்கிளை பரிசாக வழங்கியது.
    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம்(வயது48). கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை இழந்து தவித்து உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்த சஜீரா பாத்திமா தான் சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுக்க உண்டியலை திறந்தார். அதில் ரூ. 600 சேர்ந்திருந்தது.

    உடனே அவர் பெற்றோரின் அனுமதியுடன் ரூ.600ஐ கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது. இதனை அறிந்த நாகர்கோவிலை சேர்ந்த தனியார் சைக்கிள் நிறுவனம் ஒன்று மாணவியின் மனித நேயத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கியது.

    இதுகுறித்து மாணவி சஜீரா பாத்திமா(12) கூறுகையில், சிறு வயதில் இருந்தே சைக்கிள் வாங்க ஆசையாக இருந்தது. அதற்காக பெற்றோர் உறவினர்கள் தரும் காசுகளை சேமித்து வந்தேன்.

    இந்த வேளையில் கேரளாவில் வெள்ளப்பெருக்கால் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த உதவியை செய்ய பெற்றோரிடம் கூறினேன். மேலும் நான் சேமித்த ரூ.600ஐ வெள்ள நிவாரண நிதியாக அளித்தேன். இதனை எனது தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து ஒரு சைக்கிள் நிறுவனம் நான் படித்த பள்ளியில் வந்து சைக்கிளை பரிசாக வழங்கினர் என்றார். #tamilnews
    கேரள வெள்ள பாதிப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். #KeralaFloods #ViduthalaiChiruthaigalKatchi
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

    கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக ரூபாய் 25 லட்சம் உதவி வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 10 லட்சம் நிதியாகவும் ரூபாய் 15 லட்சம் பொருட்களாகவும் வழங்கப்படும்.



    மழைவெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு மொழி, இனம், மதம் கடந்து பல்வேறு தரப்பினரும் உதவ முன் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. கேரள மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று மிகத்தீவிரமான இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள உதவி போதுமானதல்ல. குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கோடி ரூபாயாவது நிதியுதவி அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    கர்நாடகாவிலும் கேரளாவிலும் பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பொழிந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaFloods #ViduthalaiChiruthaigalKatchi
    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. #KeralaFlood #Tamilnadu
    சென்னை:

    கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் அளித்த பேட்டி வருமாறு:-

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்துக்காக 10-ந் தேதியன்று ரூ.5 கோடியையும், 18-ந் தேதியன்று மேலும் ரூ.5 கோடியையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.



    அதோடு, 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டி, லுங்கி, போர்வை ஆகியவை தலா 10 ஆயிரம் ஆகியவற்றையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ்பாபு, தரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 306 டன் அரிசி, 270 டன் பால் பவுடர் மற்றும் பால் அனுப்பப்பட்டுள்ளது.

    கேரளாவுக்கு மருந்து, சுகாதாரம் ரீதியிலான உதவிகளை தமிழக அரசுதான் முதன் முதலாக செய்தது. ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள், கிருமி நாசினிகள், திரவ குளோரின் உள்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.



    கேரளாவில் உள்ள வயநாடு உள்பட சில மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளுக்காக நமது அதிகாரிகள் குழு சென்றுள்ளது. 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளோம்.

    கேரளாவில் மொத்தம் 226 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதன் மூலம் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்களும், தொண்டு நிறுவனங்களும் கேரளாவுக்கு உதவ முன்வந்தனர். எனவே அவர்கள் அளித்த உதவிப் பொருட்களை வாங்கி 241 லாரிகளில் ஏற்றி அனுப்பிவைத்தோம். அவற்றின் மதிப்பு ரூ.17.51 கோடியாகும். அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 47 லாரிகள் சென்றன. தேனி மாவட்டத்தில் இருந்து 30 லாரிகள் சென்றன.

    அன்புடன் தமிழகம் என்ற ஒரு இணையதளத்தை இதற்காக தொடங்கியிருக்கிறோம். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதில் உள்ள தகவல்களின்படி உதவிகளை வழங்க முடியும்.

    கேரளாவில் உள்ள நிவாரண ஆணையர் குரியனிடம் பேசும்போது, உணவு அனுப்புவதைவிட போர்வைகள், உடைகள், உள்ளாடைகள், டைபர்கள், டார்ச்லைட், செருப்புகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவை தேவை என்று தெரிவித்தார். சிவகாசியில் இருந்து தீப்பெட்டி அனுப்பப்பட்டது.

    முதல்-அமைச்சர் அறிவித்த பொருட்களை அனுப்புவதோடு, தமிழக மக்கள் தரும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    கடும் மழை, வெள்ளத்தால் கேரளாவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சங்கத் தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் ஆதிமூலம், பொருளாளர் மாடசாமி, துணை செயலாளர் ஆறுமுகநயினார், அமைப்பாளர் தமிழ்மணி ஆகியோர் கேரள மக்களுக்கு 25 குவிண்டால் அரிசியை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரராஜன், ஊராட்சி செயலாளர்கள் தேசிங்கராஜன், முத்துக்குமார், தங்கச்செல்வம், வல்லாள மகாராஜன், நடராஜன், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாக உறுப்பினர்கள் நாராயணன், மாடசாமி, ஜெயராமன், சுப்பிரமணியன், வெற்றி கருப்பன், மாடசாமி, நாகராஜன், பிரபு, காளிமுத்து உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×