search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள நிவாரணத்துக்கு முகநூல் மூலம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது
    X

    வெள்ள நிவாரணத்துக்கு முகநூல் மூலம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேர் கைது

    கர்நாடக மாநிலத்தில் வெள்ள நிவாரணத்துக்கு முகநூல் மூலம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஜய்சர்மா என்பவர், குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில், ‘‘குடவா சமாஜம்” அமைப்பு மூலம் நிதி சேகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், குடவா சமாஜம் அமைப்பு இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அந்த அமைப்பின் செயலாளர் சுப்பையா, பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தார்.

    இதன் பேரில், விஜய் சர்மாவின் வங்கி கணக்கை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதில், பல்வேறு நபர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று விஜய் சர்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகியவற்றுக்கும் நிதி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

    பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது முகநூல் மூலமாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.75 லட்சம் நிதி வசூலித்தார். அதில் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் பேரில், லட்சுமியிடம் நடத்த விசாரணையில், அவர் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு யாரேனும் உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட அரசின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வெள்ள நிவாரண நிதியில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார் வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×