search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dindugal"

    திண்டுக்கல் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

    வேடசந்தூர்:

    குஜிலியம்பாறையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வெங்காயம் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் வந்தது. வேடசந்தூர் அருகே கிரியம்பட்டி பகுதியில் வந்தபோது வேனின் பின் பக்க டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தி வேறு டயர் மாற்றிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் வேன் முற்றிலும் சேதம் அடைந்தது.

    டயர் மாற்றிக் கொண்டிருந்த வேன் உரிமையாளர் குஜிலியம்பாறையை சேர்ந்த பாக்கியராஜ் (வயது35), டிரைவர் குமார் (38) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.

    லாரி டிரைவர் சேலம் ஓமலூரை சேர்ந்த அன்பரசன் என்பவர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவரும் பொன்மணி என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பொன்மணி சம்பவத்தன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பொன்மணியின் தாய் அமராவதி நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார். நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    திண்டுக்கல் அருகே நள்ளிரவில் ஆம்புலன்சை கடத்தி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னாளபட்டி:

    சின்னாளபட்டியில் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமாக ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. கொடைரோடு, சின்னாளபட்டி, அம்பாத்துரை ஆகிய 3 இடங்களில் இந்த ஆம்புலஸ்கள் இயங்கி வருகிறது.

    நேற்று இரவு சின்னாளபட்டி பிரிவில் ஒரு ஆம்புலன்சை நிறுத்தி விட்ட டிரைவர் அருகில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது.

    இது குறித்து தொண்டு நிறுவன நிர்வாகி பாஸ்கரன் அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்சை திருடிய நபர்களை தேடி வருகின்றனர். ஆம்புலன்சுக்குள் இறந்தவர்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பெட்டியும் இருந்தது. அதனையும் சேர்த்து கடத்தல் கும்பல் எடுத்து சென்றுள்ளனர்.

    திண்டுக்கல் அருகே 3 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டை கோகுல்நகரை சேர்ந்தவர் செந்தில்(வயது42). பன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், திவ்யா உள்பட 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வழக்கம்போல் செந்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குழந்தைகளுடன் மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கத்தி முனையில் டாக்டரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள சிறுமலைப்பிரிவு வாழைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் மீனாள் (வயது 65). இவர் அதே பகுதியில் தனியார் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    அவரது மகன் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இன்று காலை மீனாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தபோது ஒரு காரில் இருந்து 2 பேர் வந்தனர்.

    அவர்கள் மீனாளிடம் விலாசம் கேட்பது போல அருகில் வந்து திடீரென கத்தியை காட்டி வீட்டுக்குள் விரட்டினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்தருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டனர்.

    கத்தி முனையில் ஒரு கொள்ளையன் அவரை மிரட்டிக் கொண்டிருந்த போதே மற்றொருவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செழியன், வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. அக்கம் பக்கம் நடத்திய விசாரணையில் காரில் 4 பேர் வந்ததும் அதில் 2 பேர் காரில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் சென்று கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. #Rain

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. இதனால் குடிநீருக்கு கூட மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணைகளின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. எனவே தென்மேற்கு பருவமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்க வில்லை. கடந்த 16-ந் தேதி கஜாபுயல் வீசிய தினத்தன்று கடுமையான மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    கொடைக்கானலில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல பழனி, நத்தம், வத்தலக்குண்டு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. #Rain

    திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 வாலிபர்கள் உயிரிழந்தனர். #accident

    திண்டுக்கல்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் லக்ரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன்கள் ஹரிபாபு (வயது 26), ஹரீஷ் (24), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகேஷ் (28). நண்பர்களான இவர்கள் 3 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெறும் நண்பர் தினேஷ் என்பவரின் திருமணத்துக்காக நேற்று இரவு பெங்களூரில் இருந்து ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.

    காரை பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது மஞ்சுநாத் சற்று அயர்ந்து விட்டார்.

    அப்போது முன்னால் சென்ற ஒரு லாரி மீது பயங்கரமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த 4 பேரும் திடீரென நடந்தது அறியாமல் அலறினர்.

    இதில் காருக்குள்ளேயே நசுங்கி ஹரிபாபு, ஹரீஷ், லோகேஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மஞ்சுநாத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே அவரும் இறந்து விட்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அண்ணன்-தம்பி உள்பட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #accident

    திண்டுக்கல் அருகே காவலாளியை கட்டிப்போட்டு பள்ளியில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் சிலுக்குவார்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முருகன் (வயது40) என்பவர் காவலாளியாக உள்ளார்.

    நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் அவரிடம் விலாசம் கேட்பதுபோல வந்தனர். பின்னர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர்.

    மேலும் முருகனை பள்ளி கேட் முன்பு கட்டிப்போட்டு விட்டு உள்ளே புகுந்தனர். அலுவலக அறையில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளிச் சென்றனர்.

    இன்று காலையில் அவ்வழியே வந்த மக்கள் முருகனின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது அலுவலக அறையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.

    காயம் அடைந்த முருகனை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கொள்ளைபோன பொருட்களின் முழு விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் நகரில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பகுதியில் பொதுவாகவே வறட்சி அதிக அளவில் நிலவி வருகிறது. விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தால் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை திண்டுக்கல் நகரில் விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடைக்கானல், பழனி, நத்தம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் திண்டுக்கல் நகரில் 14.10 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானல் 2.8, பழனி 2, நத்தம் 21.5, சத்திரப்பட்டி 10, காமாட்சிபுரம் 0.7, கொடைக்கானல் போட் கிளப் 7.5.மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 58.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. சராசரியாக 5.88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமத்திற் குள்ளானார்கள். பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

    திண்டுக்கல் அருகே கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரெங்கநாதபுரம் மலைக் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கவே அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனைடுயத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை வைத்திருந்த ஆர்.எம்.காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (30), கண்ணன் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து மனைவி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது59). இவரது மனைவி கிருஷ்ணவேணி (49). இவர்கள் 2 பேரும் ஒரு காரில் விருதுநகரில் நடைபெறும் தங்களது உறவினர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.

    காரை கணேசன் ஓட்டி வந்தார். திண்டுக்கல் அருகில் உள்ள அகரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் வரும் வழியிலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியானார். #swineflu

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.

    பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சி என்பவர் பன்றிகாய்ச்சலால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அழகாபுரியை சேர்ந்த குமசேரன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் அருகே மருனூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுல்தான்பேகம் (வயது27). காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுல்தான் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். #swineflu

    ×