search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்கள் ரத்து.
    • 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

    எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த உதவி எண்கள் வருமாறு:-

    044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • தொடா் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை- 470 பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 365 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்க ளுக்கு நாளை 70 பஸ்களும், வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை 65 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கி ழமை ஆகிய நாள்களில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும், வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.
    • பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்படும்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

    இந்நிலையில், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் திட்டமிட்டு, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவில் நடை பயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

    மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயம்பேடு மார்க்கெட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    • கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.

    காஞ்சிபுரம்

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.

    இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.

    இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.

    • அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திக்க திட்டம்.
    • இன்று காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

    அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டதாக தெரிகிறது.

    மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    முதலமைச்சரின் வெளிநாடு பயணம் சுமார் 15 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில் மாநிலத்தில் முதல் அமைச்சர் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொடங்க உள்ள தொழில் திட்டங்களுக்கும் அனுமதிகள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தலைமை செயலக பகுதி சிவப்பு மண்டல பகுதியாக அறிவிப்பு.
    • டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் பறப்பதற்கு தடை.

    சென்னை:

    சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கவும் போலீசார் முடிவு செய் துள்ளனர்.

    சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி வரு கிறார்கள். இந்த சோத னையை இன்று இரவில் இருந்து வருகிற 15-ந் தேதி வரையில் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    சென்னை மாநகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணி களை தீவிரப்படுத்தி உள்ள னர். சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இப்போது இருக்கும் டிராபிக் சிக்னல் அமைப்பை வில்லியம் பாட்ஸ் 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார்.

    சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் டிராபிக் சிக்னல்களில் உள்ள விளக்குகள் ஹார்ட்டின் வடிவில் ஒளிரவிட பட்டுள்ளது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    110 வருடங்களுக்கு முன்பு 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகின் முதல் டிராபிக் சிக்னல் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது என்று நம்பப்படுகிறது.

    அதன் காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால் நாம் இப்போது பயன்படுத்தி வரும் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்திலான டிராபிக் சிக்னல் அமைப்பை டெட்ராய்ட் காவல்துறை அதிகாரியான வில்லியம் பாட்ஸ் என்பவர் 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும்
    • 1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அபாயம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆய்வு செய்தது.

    கடல் மட்டம் உயருவதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் ஆகிய 15 நகரங்கள் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சென்னையில் உள்ள அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், மைலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் நினைவு சின்னம், பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    2040 ஆம் ஆண்டில் சென்னையின் 7.29% பகுதி (86.6 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2060 ஆம் ஆண்டில் 9.65% பகுதி (114.31 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2100 ஆம் ஆண்டில் 16.9% (207.04 சதுர கிமீ) பகுதி கடலில் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரம் சென்னை ஆகும். மேலும், சென்னை உலகில் 35 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

    1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்னை நகரின் கடல் மட்டம் 0.66 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    2040 ஆம் ஆண்டுக்குள் தூத்துக்குடியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

    2100 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 74.7 செ.மீ வரை கடல்மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மும்பை நகரில் கடந்த 30 ஆண்டுகளில் கடல் மட்டம் 44.4 மி.மீ வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மும்பை நகரின் கடல் மட்டம் 3.1 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • சென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.
    • வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அங்குள்ள வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தனி பிரிவு அதிகாரிகள் சவுட்டுபல் பந்தாங்கி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் 3 பேர் இருந்தனர். காரின் ஹேண்ட் பிரேக் அடியில் ஒரு சிறிய பெட்டி அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை திறக்குமாறு கூறினர்.

    அப்போது காரில் வந்தவர்கள் அது சாதாரணமானது தான் என கூறி திறக்க மறுத்தனர். அதிகாரிகளின் கடுமையான விசாரணைக்கு பிறகு கிளைட்ச் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சுவிட்ச் மூலம் ஹேன்ட் பிரேக் அடியில் இருந்த சிறிய பெட்டியை திறந்தனர்.

    அதில் ரூ.2½ கோடி மதிப்பிலான 5 தங்க கட்டிகள் இருந்தன. இந்த தங்க கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா வழியாக கர்நாடக மாநிலம் பிதார் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    • காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பொதுவாக மற்ற இடங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. சென்னையில் நேற்றும் இன்றும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று பகலில் சுட்டெரித்த வெயில் தாக்கியது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    அதே போல இன்றும் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்குவதுபோல இன்று தாக்கியது. காலை 9 மணி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கோடை காலத்தில் உஷ்ணம் இருப்பது போல சென்னைவாசிகள் பகலில் வெயிலின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    "மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி மேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவை கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருப்பதற்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணமாகும்.மேகக்கூட்டங்கள் இல்லை. மேகக்கூட்டங்கள் உருவாகினால் மழைக்கான வாய்ப்பு ஏற்படும். மேகக்கூட்டங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது இந்த சீசனில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல" என்றார்.

    • 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம்.
    • 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    சென்னை:

    தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 32 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி கைதானார்கள்.

    இன்று 3-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். தூத்துக் குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு குழுவாக டி.பி.ஐ. நோக்கி வந்தனர்.

    அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகம் வரை ஆசிரியர்களை வர விடாமல் ஆங்காங்கே மறித்து கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

    இன்று நடந்த போராட்டத்திலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர். இதுபற்றி நிர்வாகிகள் கூறும்போது, 'ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது அரசுக்கு நல்லதல்ல.

    தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசி தீர்வு காண வேண்டும் என்றனர்.

    ×