search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"

    • அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி நல்லுறவு ஏற்படும்.
    • பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக அவதாரம் எடுத்தாள்.

    சில கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன் மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல் மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்தி கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    3 வகை பிரசாதம்

    மேல் மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும்.

    தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே "அங்காளி" என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி "அங்காள பரமேஸ்வரி" என்றானது.

    அங்காளம்மன் யாக குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

    தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன் அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

    அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு வாங்கி செல்வதை காணலாம்.

    மக்கள் கூட்டம்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் எத்தனையோ விழாக்கள் நடந்தாலும் மாதம் தோறும் வரும் அமாவாசை தின வழிபாடுதான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அமாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரியின் ஊஞ்சல் உற்சவத்தை நேரில் கண்டு வழிபட்டால் மன துயரங்கள் எல்லாம் மாயமாகி விடும் என்பது நம்பிக்கையாகும்.

    பக்தர்களிடையே இந்த நம்பிக்கை அதிகரித்து பரவி வருவதால் அமாவாசை நாட்களில் மேல் மலையனூருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அமாவாசைக்கு அமாவாசை அதிகரித்தப்படி உள்ளது.

    சாதாரண அமாவாசை நாட்களில் சராசரியாக 5 லட்சம் பேர் மேல்மலையனூர் வருவதாக கணித்துள்ளனர். ஆடி அமாவாசை தின வழிபாடு கூடுதல் பலன்கள் தர வல்லது என்பதால் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 7 லட்சம் பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள்.

    • துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை இங்கு பிரசித்தம்.
    • பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம்.

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவார திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18-வது சிவத்தலம்.

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    நாற்புறம் இருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவை காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை.

    அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூஜை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர்.

    அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு புத்திர பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வ பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரி காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    கோவில் அமைப்பு:

    மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது.

    கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் கோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடதுப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன.

    மேற்குபுறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன. துலாபாரப பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    கல்வெட்டுகள்

    திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் தனது தொகுபில் கூறி இருப்பதாவது:-

    திருக்கருகாவூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும்.

    இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907-953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், ராச ராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் ராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்சனின் சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பவுர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்தான் அதன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பவுர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்

    தேவேந்திர பிரியபாமினி

    விவாக பாக்யம் ஆரோக்யம்

    புத்ரலாபம்ச தேஹிமே

    பதிம் தேஹி சுதம் தேஹி

    சௌபாக்யம் தேஹிமே சுபே

    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்

    தேஹிமே கர்ப்பரஷகே

    காத்யாயிணி மஹாமாயே

    மஹாயோகின்யதீஸ்வரி

    நந்த கோப சுதம் தேவி

    பதிம் மே குருதே நம

    இன்னொரு ஸ்லோகம்

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி

    மன்னாத சாம்ப சசிசூட

    ஹரதிரிசூலின் சம்போஸ¨கபிரசவ க்ருத்பவமே

    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்ப ரக்-ஷாம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர்தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் தாயையும் காப்பவளான தேவியே, உன்னை துதிக்கும் எல்லா பக்தர்களையும் நீயே காக்கவேண்டும். உலகத்தை காப்பவளும், மங்களத்தை கொடுக்க கூடியவளும், அனைவருக்கும் தாயானவளுமான உன்னை பூஜிக்கிறேன்.

    ஆடி வெள்ளிக்கிழமையில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் அழகான பட்டாடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேவியே உன்னை வணங்குகிறேன். எங்களை காக்கவேண்டும்.

    வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தை காத்தவளே, குழந்தைகளால் எப்போதும் நமஸ்கரிக்கப்பட்டவளே, எங்கள் கர்ப்பத்தைக் காக்கவேண்டுமென்று உன்னை நமஸ்கரிக்கிறேன்.

    உலகத்திற்கு தாயுமானவளும், தேவர்களால் போற்றப்படுபவளும், வாத்யகோஷத்தில் ஆனந்தமடைபவளை நான் பூஜிக்கிறேன்.

    • பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
    • சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.

    தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.

    ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.

    அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.

    பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.

    அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.

    பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.

    வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?

    அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.

    வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.

    உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.

    குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.

    பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.

    காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).

    பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

    ``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''

    நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.

    அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.

    • திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
    • முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.

    சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்

    அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை

    தலமரம் : முல்லை

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.

    பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1

    பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.

    இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.

    சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.

    கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

    திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.

    அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.

    ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

    முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

    இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

    சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.

    மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.

    கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.

    இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.

    மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.

    திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.

    இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.

    பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

    • ஓம் கருகாவூர் தேவியே போற்றி ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    • ஓம் சக்தியின் வடிவமே போற்றி ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

    ஓம் கர்ப்பரட்சம்பிகையே போற்றி

    ஓம் கருகாவூர் தேவியே போற்றி

    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி

    ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி

    ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி

    ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி

    ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி

    ஓம் மாதர் மனம் மகிழச் செய்வாய் போற்றி

    ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி

    ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி

    ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி

    ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி

    ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி

    ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி

    ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி

    ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி

    ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி

    ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி

    ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி

    ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சார்ந்து நிற்போரை ரட்சப்பாய் போற்றி

    ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி

    ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி

    ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி

    ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி

    ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி

    ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி

    ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி

    ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி

    ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி

    ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாவாய் போற்றி

    ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி

    ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி

    ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி

    ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி

    ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி

    ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி

    ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்பாய் போற்றி

    ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி

    ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி

    ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    ஓம் கர்ப்பப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி

    ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி

    ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி

    ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி

    ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி

    ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி

    ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி

    ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி

    ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி

    ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி

    ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி

    ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி

    ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி

    ஓம் மறுமையிலும் உடனிருந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி

    ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி

    ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி

    ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி

    ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி

    ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி

    ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி

    ஓம் சத்ரு பயம் நீங்க சரணடைந்தேன் போற்றி

    ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி

    ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி

    ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி

    ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி

    ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி

    ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி

    ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி

    ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி

    ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவல் சிரிப்பழகி போற்றி

    ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி

    ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி

    ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி

    ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி

    ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி

    ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி

    ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி

    ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி

    ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணை செய்வாய் போற்றி

    ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கவுரியே போற்றி

    ஓம் நெஞ்சில் கவலைகள் நீக்குவாய் போற்றி

    ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி

    ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி

    ஓம் சக்தியின் வடிவமே போற்றி

    ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி

    ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி

    ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி

    ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி

    ஓம் மங்கையரின் கர்ப்பத்தை காக்கின்றாய் போற்றி

    ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி -100

    ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி

    ஓம் குலம் வாழ மகவருளும் மாதே போற்றி

    ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி

    ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி

    ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி

    ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி

    ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி

    ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி, போற்றி!

    • சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்
    • சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமி அன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது. அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் ரொம்ப விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதை தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் `ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம' என்று சொல்லிவிட்டு பயன்படுத்தினால் நம்மகிட்ட எப்பவும் பணம் இருந்துகிட்டேயிருக்கும்.

    ரொம்ப சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர். துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்தக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்கு சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் சென்றபோது சோமதேவர் வீட்டில் இல்லை வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் `பவதி பிசோந்தேஷி' என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூறு தர்மசீலைக்கு வருத்தமாக இருந்தது. வேறு வழியின்றி `கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் `அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றார்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை. எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது.

    அதைக் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.

    `அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். அவ்வாளவுதான்.

    வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையென கொட்டின. `கனகதாராவை பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று திருமகள் மறைந்தாள்.

    செல்வம் தரும் வலம்புரிச்சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரிச்சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம் புரிச்சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும் பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது. சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்து பால் பாயசம் செய்து பசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10 மணியில் இருந்து 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். இப்படிச்செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி, பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள் தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.

    சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பெ£ன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறைப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

    மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.

    அனைத்தும் தன்னிடம் நிரம்பி இருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

    தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.

    இவள் `ஈம்' என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை வணங்கு பவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள். தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

    மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.

    இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.

    இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பை தருபவள் கோமயத்தில் வாசம் செய்பவள்.

    சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

    மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்ப வரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.

    செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமை களையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப்பிரார்த்திக்க வேண்டும்.

    இரு யானைகளுடைய லட்சுமி

    யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம். முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது. ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும். வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்த கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

    • வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.

    வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.

    செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.

    ஹோம பலன்

    உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

    பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.

    விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    வடபழனி

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.

    • செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.
    • எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாய்க்கு, `அங்காரகன்' என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தை புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளை கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்கு சென்று அங்குத்தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி. தேவியைப்பிரிந்து யோகத்தில் இருந்த சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வியர்வை உண்டாகி பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு `பூமி புத்திரன்' என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரிய பதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும் பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும், அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும் பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    பழனி

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய்ப்பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும். பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும். பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனைத்தரிசிக்க வேண்டும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக்கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும். சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும். திருமண தோஷத்திற்கு மட்டும் கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மேலக்கடம்பூர்

    சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் மேலகடம்பூர் உள்ளது. கருவறையின் அடிப்பாகம் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    செவ்வாய் பகவான் வழிபட்டதோடு அவரது அதிதேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டுவில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும். எனவே இத்திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.

    திருச்சிறுகுடி

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதை யில் சென்று கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையை கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம். இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர்-மங்கள விநாயகர் என்றும், இறைவன்-மங்கள நாதர் என்றும், அம்பாள்-மங்கள நாயகி என்றும், தீர்த்தம்-மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள் விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்று செல்ல வேண்டும். முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும். மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித்தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    • வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.

    • ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை கட்டிக் கொண்டால் விரைவில் எண்ணம் கைகூடும்.
    • அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பானது.

    சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

    வலது கையில் அன்னம், உடுக்கையை பின்னிரு கைகள் தாங்கி நிற்க, முன்னிருகைகள் அபய ஹஸ்தமாகக் காட்சிதர, வருகின்ற பக்தர்களுக்கு கருணைக் கண்களோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    அம்மன் பீடத்துக்கு கீழே இரண்டு முக வடிவ விக்ரகம் காணப்படுகிறது. அதில் ஒன்று சுமார் ஆயிரம் வருடங்களாக முந்தையது என்கிறார்கள்.

    வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத வகையில் இத்தலத்தில் தென் கிழக்கில் அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும். இக்கோவிலில் நடைபெறும் தீமிதி விழாவில் அக்னியை மூட்டி இந்த அக்னிதேவன் சன்னதியில் வைத்து ஆராதித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் மிகச் சிறப்பான விழாவாக, ஆடி மாதம் நாலாவது வார ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தீமிதி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீமிதியில் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப் ேபறு வேண்டி நிற்பவர்கள் இத்தலத்து ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை வாங்கி கட்டிக் கொண்டால் வெகு விரைவிலேயே எண்ணம் கைகூடுகிறது.

    • நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள்.
    • காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவே ஆடிப்பெருக்கு

    நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யவில்லை. மாறாக இயற்கையை போற்றினார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் நதிகளுக்கு விழா எடுத்து நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை ஆதி தமிழர்கள் கடைபிடித்தனர்.

    ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள்.

    அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

    ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அந்த அளவுக்கு ஆடியில் பருவ மழை பெய்யோ பெய் என்று பெய்யும். அந்த காலத்தில் பருவ மழைகள் குறித்த காலத்தில் பெய்தது. (இந்த ஆண்டு இன்னும் வெயில் 100 டிகிரிக்கு முறையவில்லை).

    ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப் பெருக்கு.

    இந்த ஆடிப்பெருக்கை காவிரிக்கரையில் ஏன் கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் ஒரு கதை உள்ளது.

    கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்தது. தென் புலம் உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென் திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.

    சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக் காலில் தவம் இருந்த போது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிடம் வழங்கினார் அவள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார்.

    அவர் தென்னகம் நோக்கி வரும் போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று தான் வசித்தபொதிகை மலையில் கொண்டு விட... அது தாமிரபரணி ஆனது என்கிறது புராணக் கதை.

    ஆடிப் பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.

    வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரியபொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.

    வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள்.

    அப்படி செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு தருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமுமு ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரியும், பவானி ஆறும் சங்கமிக்கும் கூடுதுறை முதல்... பூம்புகாரில் வங்கக் கடலுடன் காவிரி கலக்கும் இடம் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப் பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில், காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவாகவே இந்த ஆடிப் பெருக்கு விழா அமைகிறது.

    • ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மாவிளக்கு போடுவார்கள்.
    • ஆடி மாதம் எள் தீபம் ஏற்றுங்கள் இது எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும்.

    1. திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    3. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.

    4. ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பிரியர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்கரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    5. ஆடி மாதம் வரும் ஏகாதசியை மகாராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இரு பக்கமும், பால் அல்லது தயிர் எடுத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடுநடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவு பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

    6. ஆடி மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுகிறார்கள்.

    7. அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம்தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

    8. அன்னையை பரா சக்தியாக கண்ட ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம். ஆகஸ்டு 15-ல் வருகிறது. ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவம் ஆடி மாதம் பிரமாதமாக நடக்கும்.

    9. உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகாதேவிக்கு, ஏழைகளான சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் உணவும் கொடுத்த நிகழ்ச்சி நடந்ததும் ஆடி மாதத்தில்தான். அதன் காரணமாகவே ஆடி மாதத்தில் வேப்பிலைச் சேலை கட்டி அம்மனை வலம் வருவதும், அவளுக்கு கஞ்சி, கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும் தென் மாவட்டங்களில் ஆடிச் செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோவில்களில் பெண்கள் அம்பாளுக்கு மாவிளக்கு போடுவார்கள். இல்லத்தரசிகள் குத்து விளக்கு பூஜை செய்வர். ஸ்ரீதுர்காதேவிக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவார்கள்.

    11. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    12. ஆடி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள்& சுந்தரமூர்த்தி நாயனார். கலிய நாயனார், புகழ்சோழர், மூர்த்தி நாயனார் ஆகியோர் ஆவர். ஆளவந்தார், புண்டரி காஷர், கந்தாடை தோழப்பர், பத்ரி நாராயணர் போன்ற ஆழ்வார்கள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.

    13. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடைபெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார். ஆடி சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும் புறப்பாடும் நடைபெறும்.

    14. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில், உதங்க முனிவருக்கு ஜவண்ணங்காட்டி அருளியதன் நினைவாக பஞ்சப் பிராகார விழா நடைபெறும்.

    15. கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப்பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மாவிளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்துவிட்டு வருவர்.

    சர்க்கரைக் காப்பு

    திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர மாலை உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த அம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட குணம் பெறலாம் என்கிறார்கள். சர்க்கரையுடன் நெய் சேர்த்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, முந்திரிப் பழங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

    எள் எண்ணை ஏற்றுங்கள்

    ஆடி மாதம் காற்று அதிகமாக வீசும். இது தொற்று நோய்களை பரவச் செய்து விடும். இதை தடுக்கும் ஆற்றல் எள் எண்ணை தீபத்துக்கு உண்டு. எள் எண்ணையில் இரும்புச்சத்து உள்ளது. எள் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் போது, அது சூடாகி பிராண சக்தியை அதிகப்படுத்தும். இந்த பிராண சக்தி தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும். எனவே ஆடி மாதம் அடிக்கடி எள் தீபம் ஏற்றுங்கள்.

    ×