search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    காவிரி பெண்ணுக்கு மண விழா
    X

    காவிரி பெண்ணுக்கு மண விழா

    • நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள்.
    • காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவே ஆடிப்பெருக்கு

    நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யவில்லை. மாறாக இயற்கையை போற்றினார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் நதிகளுக்கு விழா எடுத்து நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை ஆதி தமிழர்கள் கடைபிடித்தனர்.

    ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்பார்கள்.

    அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

    ஆடி மாதம் அன்று அந்த 18 படிகளும் மூழ்கி விடும் அளவுக்கு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அந்த அளவுக்கு ஆடியில் பருவ மழை பெய்யோ பெய் என்று பெய்யும். அந்த காலத்தில் பருவ மழைகள் குறித்த காலத்தில் பெய்தது. (இந்த ஆண்டு இன்னும் வெயில் 100 டிகிரிக்கு முறையவில்லை).

    ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப் பெருக்கு.

    இந்த ஆடிப்பெருக்கை காவிரிக்கரையில் ஏன் கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் ஒரு கதை உள்ளது.

    கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்தது. தென் புலம் உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென் திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.

    சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக் காலில் தவம் இருந்த போது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிடம் வழங்கினார் அவள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார்.

    அவர் தென்னகம் நோக்கி வரும் போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று தான் வசித்தபொதிகை மலையில் கொண்டு விட... அது தாமிரபரணி ஆனது என்கிறது புராணக் கதை.

    ஆடிப் பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.

    வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரியபொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.

    வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள்.

    அப்படி செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு தருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமுமு ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரியும், பவானி ஆறும் சங்கமிக்கும் கூடுதுறை முதல்... பூம்புகாரில் வங்கக் கடலுடன் காவிரி கலக்கும் இடம் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப் பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில், காவிரிப் பெண்ணுக்கு நடைபெறும் மண விழாவாகவே இந்த ஆடிப் பெருக்கு விழா அமைகிறது.

    Next Story
    ×