search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paddy"

    • கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.
    • நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஆண்டு தோறும் 10 மாதங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால் இரு போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோபி மற்றும் அதைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.

    நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும் நேரத்தில் வயலுக்குள் புகும் எலிகள் நெற்பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

    நெல் வயல்களில் எலிகளை அழிப்பதற்காக ரசாயண மருந்துகளை பயன்படுத்தினால் நெற்பயிர்களும், மண்ணின் தன்மையும் விஷமாக மாறும் அபாயம் இருப்பதால், எலிகளை பிடிப்பதற்கு ரசாயண மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிட்டி வைத்தல் என்ற முறையில் விவசாயிகள் எலிகளை பிடித்து நெற்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்பயிர்களை சேதபடுத்தி வரும் எலிகளை விவசாயிகள் கிட்டி அமைத்து பிடித்து வருகின்றனர்.

    • மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
    • இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இம்முறை காவிரியில் இருந்து போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல் தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா, தாளடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

    ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்தனர்.

    இது குறித்து மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

    மேலத் திருப்பூந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமத்தில் ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த பல ஏக்கரில் அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் சம்பா சாகுபடி செய்து வந்தோம். பம்ப்செட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பல ஏக்கரில் நிலங்களில் தண்ணீரின்றி காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு பயிர்களும் கருகி வருகின்றன. இதனால், வேறு வழியின்றி ஆடுகளை விட்டு பயிர்களை அழித்து வருகிறோம். இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    அருகிலுள்ள கருப்பூர், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
    • என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ.50 ஆயிரம் செலவு செய்தார். ஆனால் போதுமான நெல் விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் விவசாய நிலத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டார். அதன் பிறகு ஜெயராஜ் தனது வயலுக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயராஜிடம் உங்கள் வயலில் நெல் கதிர் விட்டு பயிர்கள் தலைசாய்ந்துள்ளது. இன்னும் ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது அங்கு நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

    இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த நிலையில் அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலை பார்க்க சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    நான் நெல் விதை விதைக்கவில்லை, நடவு நடவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை வீதம் 16 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை நெல்கதிர் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.

    இந்நிலையில் கதிர் அறுத்த பிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப்போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.

    • செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன.
    • டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    செஞ்சி:

    செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 30 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாமென கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன. தினமும் 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் மூட்டைகள் வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்றைய விற்பனைக்காக நேற்று மதியத்தில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரத்தொடங்கினர். நேற்று இரவு வரை சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இரவு 8.00 மணிக்கு மேல் வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாததால், விற்பனை கூடத்துக்கு வெளியே டிராக்டர் மற்றும் வாகனங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே ஆள்பற்றாக்குறையால் திணறும் கமிட்டி நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. தற்காலிகமாக கூடுதலான ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வந்துள்ள முப்பதாயிரம் மூட்டைகள் விற்பனையாவதற்கு 2 நாட்களுக்கு மேலாகும். இதனால் விவசாயிகள் 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் எனவும், நாளை மறுநாள் புதன்கிழமை அன்று நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதும் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடை பெற்றது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை அலுவ லகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.கூட்டத்தில் வானூர் வட்டார பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றியை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் பருவம் ஆரம்பிக்கும் முன் வழங்க வேண்டும். பூச்சிகொல்லி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் நெல் விதையில் அதிக அளவு கலப்பு இருப்பதாகவும் கிளியனூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    தோட்டக்கலை துறை மூலம் சாமந்தி மல்லிகை பூஞ்செடிகள் உரிய பருவத்திற்கு நடவு தரமான விதைகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். புதுகுப்பம் பகுதியில் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மருந்தினை பரிந்துரை செய்ய கேட்டுக்கொண்டனர். திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் மூலம் மானியம் வழங்க வேண்டும் .நெல் கொள்முதல் நிலையங்களை ஜனவரி முதல் வாரத்தில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். முந்திரி கன்றுகள் நடவு செய்ய தரமான கன்றுகளை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.திண்டிவனம் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நாராயண திங்கள், தோட்டக்கலை துறை அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்து திட்டங்கள் குறித்து பேசினர். இதில்தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளான புதுக் குப்பம் ஏழுமலை, கொஞ்சிமங்கலம் கனகராஜ், வானூர் செந்தி ல்குமார், இடையன்சாவடி அய்யப்பன், சேமங்கலம் பழனி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவா,நாகம்மாள் வேலு நைனார்பாளையம் நாராயணசாமி உள்பட விவசாயிகள் கொண்டனர்.இதில் உதவி வேளா ண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, தங்கம், பஞ்சநாதன்,வாச மூர்த்தி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இறுதியாக வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.

    • நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
    • சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.

    இது தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • புதுக்கோட்டை மாவட்டம் நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,  

    தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக தழைச்சத்து யூரியா உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

    இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளை புல், புண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.

    விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்புச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

    இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னர், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரிகயிறு மூலம் வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும்.

    இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும்.

    இதனால் இப்புழுக்கள் கீழே விழுந்து மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து இறந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவர்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித்துண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் பயிர்சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால்

    உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி டுமாறு வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    • நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
    • ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
    • ஈரப்பதத்துடன் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு காலத்தோடு திறந்துவிடப்பட்ட காவிரி நீர் காரணமாக மகிழ்ச்சியோடு சாகுபடி தொடங்கிய விவசாயிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே துயரம் காத்திருந்தது.

    மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை சீராக வந்து சேராத காரணத்தால் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்க தொடங்கியது.

    தண்ணீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்திய நிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து அவர்கள் டீசல் இன்ஜின் வாடகைக்கு எடுத்து கூடுதல் செலவு செய்து குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குறுவைப் பயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை வரை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 முட்டை வரையே தண்ணீர் இல்லாத காரணத்தால் அறுவடையில் கிடைத்ததாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

    ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கடந்த 10 கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஒரத்தூர், வேர்க்குடி, அகர ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரம் மூட்டை குருவை நெல்கள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு ஈரப்பதத்துடன் குருவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×