search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் விளைச்சல்"

    • நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
    • என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ.50 ஆயிரம் செலவு செய்தார். ஆனால் போதுமான நெல் விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் விவசாய நிலத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டார். அதன் பிறகு ஜெயராஜ் தனது வயலுக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயராஜிடம் உங்கள் வயலில் நெல் கதிர் விட்டு பயிர்கள் தலைசாய்ந்துள்ளது. இன்னும் ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது அங்கு நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

    இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த நிலையில் அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலை பார்க்க சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    நான் நெல் விதை விதைக்கவில்லை, நடவு நடவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை வீதம் 16 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை நெல்கதிர் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.

    இந்நிலையில் கதிர் அறுத்த பிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப்போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.

    ×