search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Assembly Elections"

    • பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டினர்

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி 86 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த தோல்வி பா.ஜனதா தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கான காரணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 40 சதவீத கமிஷன் விவகாரம், எம்.எல்.ஏ.க்களை ஓரங்கட்டிவிட்டு புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெற வைத்தது உள்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

    இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்வி பற்றி கர்நாடக பா.ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

    அப்போது அந்த மூத்த நிர்வாகி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்விக்கான காரணம் பற்றி பிரதமரிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

    அதாவது, தேர்தலில் டிக்கெட் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. மாநிலத்தில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை முறையாக வழிநடத்தவில்லை. அவர்களை புறக்கணித்துள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் உற்சாகமாக ஈடுபடவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.

    அதுபோல் கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டினர். இதனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, பா.ஜனதா தலைவர்கள் சரியான பதிலடி கொடுக்காததும் தோல்விக்கு மற்றொரு காரணம்.

    மேலும் நீங்கள் மட்டும் பிரசாரத்திற்கு வராமல் இருந்திருந்தால் பா.ஜனதா 35 இடங்களை கூட பெற்றிருக்காது என்றும் அந்த மூத்த நிர்வாகி, பிரதமர் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், கர்நாடகத்தில் அதிக இடங்களை கைப்பற்ற பிரதமர் மோடி தற்போதே திட்டமிட்டு வருவதாகவும், இதனால் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது.
    • பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள்.

    இது எதுவுமே இல்லாததால்தான் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேர்தல் முடிவு வெளியானதும் கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீத கமிஷன், தி கேரளா ஸ்டோரி, பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய்மை ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.
    • அடுத்த 2024 பொதுத் தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

    கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.

    பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.
    • ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.

    இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, அமைச்சரவை குறித்து இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

    பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லஷ்மன் சவதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனவும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

    கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பண பலத்தால் ஆட்சியை பிடிக்க முயன்ற பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர்.

    20 முறை பிரதமர் மோடி இங்கு வந்து பிரசாரம் செய்தும் தோல்வியடைந்துள்ளனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றி என்று கூறிய சித்தராமையா, பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம்.
    • வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்.

    காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம். காங்கிரசின் உழைப்பிற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

    முந்தைய அரசு எந்தளவுக்கு திறமையற்றதாக இருந்தது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்.

    எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பற்றி வேட்பாளர்களுக்கு விளக்குவோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்" என்று உருக்கமாக பேசினார்.

    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
    • முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.

    அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள்.

    எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.

    அதன்படி முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. பின்பு சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

    • நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும்.

    நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும்.

    கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகள் சிதறியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறப்போவது யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சுமார் 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

    மேலும் பிரமாண்டமான சாலை ஊர்வலமும் மேற்கொண்டார். இது கர்நாடக அரசியலில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தினத்தன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது எதிரொலித்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளியானது. தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவார்கள் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக மாறுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு இருப்பதுபோல தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எத்தகைய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஓசையின்றி நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்காக அவர்கள் பேரம் பேசுவதிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது. அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தேவேகவுடாவிடம் பேசியதாக தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை வலைபோட்டு மடக்க முயல்வதை அறிந்ததும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். என்றாலும் வெளிநாட்டிலும் அவரை தொடர்பு கொண்டு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் நாளை அவர் பெங்களூரு திரும்ப உள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவரான தன்வீர் அகமது தெரிவித்தார்.

    என்றாலும் குமாரசாமி இந்த விவகாரத்தில் இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன், மத சார்பற்ற ஜனதா தளம் ரகசிய உடன்பாடும், ஒப்பந்தமும் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குமாரசாமி ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதை பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஷோபா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதிய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும்' என்று கூறினார்.

    அதுபோல காங்கிரஸ் கட்சியினரும், நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம். யார் தயவும் தேவை இல்லை என்று கூறியுள்ளனர்.

    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

    தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 0.31 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது .

    வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் இருப்பார். ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.

    வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கபப்பட்டு உள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன.

    பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 4 மையங்களில் நடக்கிறது.

    தேர்தல் முடிவுகளை ஆன்லைனில் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான eci.gov.in-ல் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த இணைய தளத்தில் ஏப்ரல் 2023 சட்டமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல்' என்பதைக் கிளிக் செய்தால் முடிவுகள் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக ஜனதா தளம் கடசி ஆட்சியை பிடித்தது. 1978 வரை நடந்த 6 சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்தது.

    ஆனால் 1983-ல் வென்ற ஜனதாதளம்,1985-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியமைத்தது. அதன்பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஜனதா தளம் வென்று ஆட்சியமைத்தது.

    1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்த நிலையில், 2004-ம் ஆண்டு முதல் முறையாக ஜே.டி.எஸ்., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.

    2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வென்று கர்நாடகாவில் முழுமையாக ஆட்சி பொறுப்பேற்றது. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைத்தது. 2018-ல் பா.ஜ.க., காங்கிரஸ், இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜ.க. 104 இடங்களில் வென்றும் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தடலாடியாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்ததால் குமரசாமி முதல்வராக பதவியேற்றார். ஆனால் ஆட்சி ஒரு வருடம் கூட நீடிக்கவிலலை.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சியில் இருந்து சில அதிருபதி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பா.ஜ.க.விற்கு மெஜாரிட்டி கிடைத்தது, அத்துடன் அங்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. வென்றதால் ஆட்சியை பா.ஜ.க. தக்கவைத்தது. முதலில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றார். அதன்பிறகு பசவராஜ் பொம்மை அங்கு முதல்-மந்திரி ஆனார்.

    இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பெரும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்தமுறை 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க.வும், எப்படியாவது வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் இருக்கிறன.

    இவர்களில் யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக குமாரசாமியின் ஜே.டி.எஸ் கட்சியும் இருக்கிறது. என்றாலும் கர்நாடகா மக்கள் யாரை ஆட்சியில் அமர வைக்க போகிறார்கள் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

    • முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
    • கொரோனா தொற்று காலத்தில் கூட பா.ஜனதா ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு கிடைத்தது.

    புதுடெல்லி:

    224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 38 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் இலக்குடன் அந்த கட்சி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு திறந்த மனதுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் கனவும் எனது கனவாகும். கர்நாடகாவின் பிரகாசமான எதிர்காலமே எனது வேண்டுகோளாகும்.

    இது உங்கள் குடும்பத்தின் எதிர்காலமாகும். குறிப்பாக இன்றைய தலைமுறையின் எதிர்காலத்திற்காக வேண்டுகிறேன்.

    உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இதனை முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வரும் அடுத்த இலக்கை கொண்டுள்ளோம்.

    கர்நாடகாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.

    முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன்.

    நீங்கள் எப்போதும் என் மீது அன்பை பொழிந்து இருக்கிறீர்கள். இதை தெய்வீக ஆசீர்வாதமாக உணர்கிறேன். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் நான் பெற்ற பாசம் இணையற்றது.

    உங்களின் உறுதியே எனது உறுதி. நாம் ஒன்றுபட்டு ஒரு இலக்கை நோக்கி மனதை அமைக்கும்போது உலகில் உள்ள எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது.

    கொரோனா தொற்று காலத்தில் கூட பா.ஜனதா ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு கிடைத்தது. இது இளைஞர்களுக்கான பா.ஜனதாவின் அர்ப்பணிப்பாகும்.

    முந்தைய அரசின்போது கர்நாடகாவில் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு மட்டுமே கிடைத்தது.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி 19 பொதுக்கூட்டங்களில் பேசினார். மேலும் 6 ரோடு ஷோவும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×