search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி: அடுத்தடுத்து தலைவர்கள் பேச்சுவார்த்தை
    X

    காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி: அடுத்தடுத்து தலைவர்கள் பேச்சுவார்த்தை

    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
    • முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.

    அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள்.

    எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.

    அதன்படி முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. பின்பு சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×