search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka elections 2023"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்.
    • அடுத்த 2024 பொதுத் தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

    கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.

    பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.
    • ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கையில் சில இடங்களில் வெற்றியும், சில இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது.

    இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, அமைச்சரவை குறித்து இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

    பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லஷ்மன் சவதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனவும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

    கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பண பலத்தால் ஆட்சியை பிடிக்க முயன்ற பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர்.

    20 முறை பிரதமர் மோடி இங்கு வந்து பிரசாரம் செய்தும் தோல்வியடைந்துள்ளனர்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றி என்று கூறிய சித்தராமையா, பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம்.
    • வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்.

    காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம். காங்கிரசின் உழைப்பிற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

    முந்தைய அரசு எந்தளவுக்கு திறமையற்றதாக இருந்தது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்.

    எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பற்றி வேட்பாளர்களுக்கு விளக்குவோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்" என்று உருக்கமாக பேசினார்.

    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.
    • முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.

    அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவேகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள்.

    எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது.

    அதன்படி முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் யார் இருப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்கள். பெங்களூருவில் உள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்தது. அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைத்தால் யாருக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பது என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் கூறியதாகவும் தெரிகிறது. பின்பு சித்தராமையா வீட்டுக்கு, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

    • நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும்.

    நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும்.

    கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகள் சிதறியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறப்போவது யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சுமார் 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

    மேலும் பிரமாண்டமான சாலை ஊர்வலமும் மேற்கொண்டார். இது கர்நாடக அரசியலில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தினத்தன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இது எதிரொலித்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளியானது. தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவார்கள் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக மாறுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு இருப்பதுபோல தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எத்தகைய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஓசையின்றி நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்காக அவர்கள் பேரம் பேசுவதிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது. அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தேவேகவுடாவிடம் பேசியதாக தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை வலைபோட்டு மடக்க முயல்வதை அறிந்ததும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். என்றாலும் வெளிநாட்டிலும் அவரை தொடர்பு கொண்டு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் நாளை அவர் பெங்களூரு திரும்ப உள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவரான தன்வீர் அகமது தெரிவித்தார்.

    என்றாலும் குமாரசாமி இந்த விவகாரத்தில் இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன், மத சார்பற்ற ஜனதா தளம் ரகசிய உடன்பாடும், ஒப்பந்தமும் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குமாரசாமி ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதை பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஷோபா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதிய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும்' என்று கூறினார்.

    அதுபோல காங்கிரஸ் கட்சியினரும், நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம். யார் தயவும் தேவை இல்லை என்று கூறியுள்ளனர்.

    • மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.

    பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

    பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலுக்காக மாநிலம்‌ முழுவதும்‌ 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள்‌ அமைக்கப்பட்டிருந்தன.
    • வாக்குச்சாவடிகளில்‌ சி.சி.டி.வி. கேமராக்கள்‌ பொருத்தப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி அறிவித்தது.

    அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 13-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.

    தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53, பெண்கள் 2 கோடியே 64 லட்சத்து 74, மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 927, மாற்றுத்திறனாளிகள் 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 அடங்குவர். 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 புதிய வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.

    தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். மேலும் தேர்தலையொட்டி 1 லட்சத்து 65 ஆயிரத்து 389 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.

    வாக்குப்பதிவிற்கு 76 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை நேற்று முன்தினமே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. விவிபேட் எனப்படும் வாக்காளர்கள் அளித்த வாக்கை சரிபார்த்துக்கொள்ளும் 76,202 கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பெண்களுக்கான வாக்குச்சாவடிகள், மாற்றுத்திறனாளிகள், இளம் வாக்காளர்கள், மலைவாழ் மக்களுக்கான வாக்குச்சாவடிகள் பல்வேறு வகையான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் அந்த வாக்குச்சாவடிகள் இணைய (வெப்) கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    அதிகாலை முதலே வாக்களிக்க ஓட்டுச்சாவடிகள் முன்பு ஏராளமானோர் திரண்டனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலையில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள்.

    காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு விஜய் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா 7 முறை வெற்றிபெற்ற தொகுதி, ஷிகாரிபுரா. இத்தொகுதியை அவரது மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு பா.ஜ.க. தற்போது ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், ஷிகாரிபுரா பகுதியில் உள்ள ராகேவந்திர சுவாமி கோவிலில் எடியூரப்பா, விஜயேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு எடியூரப்பா அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்பு அவர் கூறும்போது, அருதிப் பெரும்பான்மை பெற்று கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

    பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள வாக்குச் சாவடியில் கன்னட நடிகை அமுல்யாவும் அவரது கணவரும் வாக்களித்தனர். கர்நாடக மந்திரி சி.என். அஸ்வத் நாராயண் பெங்களூரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான கே.சுதாகர் சிக்கபள்ளாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    • கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி.
    • வரும் 9ம் தேதி கர்நாடகம் முழுதும் ஜெய் பாரத் யாத்திரை தொடங்க உள்ளார்.

    புதுடெல்லி:

    மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வியூகம் வகுத்திட திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரும் 9-ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×