search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? பா.ஜ.க.- காங். கடும் போட்டி... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

    • மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.

    பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

    பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×