என் மலர்tooltip icon

    உலகம்

    • நாங்கள் மக்கள் முன் வெட்கப்படுகிறோம்
    • போராட்டங்களினால் சுமார் 3000 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய போராட்டம், பின்னர் அந்நாட்டு ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால் அரசுக்கும் - மக்களுக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவியது. இதனால் போராட்டக்காரர்கள் மீது அரசு தாக்குதலையும் தொடுத்தது.

    போராட்டக்காரர்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு நாடு தழுவிய அளவில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. தற்போதுவரை இந்த போராட்டங்களினால் சுமார் 3000 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். ஈரானின் 47-வது புரட்சி தின விழாவில் உரையாற்றிய அவர், போராட்டங்களின்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், நடந்த சம்பவங்களுக்காக தாங்கள் "வெட்கப்படுவதாகவும்" குறிப்பிட்டார்.

    "நாங்கள் மக்கள் முன் வெட்கப்படுகிறோம், இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,நாங்கள் மக்களுடன் மோதலை விரும்பவில்லை." என்று தெரிவித்தார். 

     

    • ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    • இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    2025 மே மாதம் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தனது வரி அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுடன் 80-வது முறையாக தெரிவித்துள்ளார்.

    பாக்ஸ் பிசினஸ்ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது மிக அதிக வரி விதிக்கப்படும் என்று இரு நாடுகளையும் அச்சுறுத்தியே அமைதி ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முழுமையான அணுஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த மோதலின் போது இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    ஏப்ரல் 22, 2025 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    மே 7 ஆம் தேதி இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்குப் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    மோதலைத் தணிக்க எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 

    • ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு
    • அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம்.

    அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் கடந்த கால உறவை பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய ஆசிப், அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் டாய்லட் டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக சாடினார்.

    முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்று விமர்சித்தார்.

    இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என்றும் ஆசிப் தெரிவித்தார்.

    கடந்த பிப்ரவரி 6 அன்று, இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் பெஷாவரைச் சேர்ந்த யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதன்போதே அமைச்சர் ஆசிப், அமெரிக்காவை விமர்சித்து பேசியுள்ளார். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்று கவாஜா ஆசிப் வலியுறுத்தினார்.     

    • பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.

    காசா அமைதி வாரியத்தின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

    பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் வாஷிங்டனில் பிப்ரவரி 19 அன்று நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    காசாவின் மறுசீரமைப்பு, போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்து இதில் விவாதிக்கப்படும்.

    கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இந்த வாரியத்தில் இணைந்தது.

    இதற்கிடையே கசாவை மேற்பார்வையிட டிரம்ப் தலைமையில் ஒரு வாரியம் அமைக்கப்படுவது, நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.  

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஷெபாஸ் ஷெரீப் அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
    • 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

    உலகளவில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்த Corruption Perceptions Index - CPI குறியீடு 2025 அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

    இந்த ஆய்வில், அதிக மதிப்பெண் பெற்றால் அரசு நிர்வாகத்தில் ஊழல் குறைந்து பட்டியலில் முன்னேறி இருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் பெற்றால் ஊழல் மலிந்த நாடுகளாக பின்தங்கி இருப்பதாவும் வரையறுக்கப்படுகிறது.

    மொத்தம் 182 நாடுகளின் பட்டியலில் உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக டென்மார்க் 100-க்கு 89 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 84 மதிப்பெண்ணுடன் 3வது இடத்தில் உள்ளது.

    பட்டியலில் இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் முன்னேறி 91-வது இடத்திற்கு வந்துள்ளது.

    இந்த ஆண்டு இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

    ஊழல் குறித்த இந்தப் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.

    உலகளாவிய சராசரி மதிப்பெண் 42 ஆகவும், ஆசிய-பசிபிக் பிராந்திய சராசரி 45 ஆகவும் உள்ளது.

    இந்தியாவின் 39 மதிப்பெண் இந்த இரண்டு சராசரிகளை விடவும் குறைவாகவே உள்ளது.

    பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலவும் ஊழல், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    பலவீனமான சட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் மற்றும் அரசியல் நிதியுதவியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் நல்லாட்சியை பலவீனப்படுத்துகின்றன" என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆசிய பசிபிக் ஆலோசகர் இல்ஹாம் முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.   

    • ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வங்காள தேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து வங்காள தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்காள தேசத்தில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    மேலும், அரசின் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் 'ஜூலை சாசனம்' என்ற சீர்திருத்தத் தொகுப்பு குறித்த பொது வாக்கெடுப்பும் நடக்கிறது.

    350 இடங்களை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார முறையில் தேர்வு செய்யப்படும்.

    தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டும், சீர்திருத்தங்கள் குறித்த வாக்கெடுப்பிற்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன.

    இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்காளதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

    தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நாளை காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் சுமார் 6,900 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளது.

    குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்குக் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக பேசியிருந்தார். மேலும் ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை பிரிவு சென்றுகொண்டிருப்பதாக கூறினார். ஆனால் அதன் பின் ஈரான் - அமெரிக்கா அரசுகள் இடையே சமரசம் ஏற்பட்டது.

    ஒருபுறம் போராட்டக்காரர்களைக் கொடூரமாக ஒடுக்கி வரும் ஈரான், மறுபுறம் அமெரிக்காவுடன் ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இரு நாடுகள் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஈரானின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷெஹ்ரை சேர்ந்த பூரியா ஹமிதி என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனது தற்கொலைக்கு முன்னதாக பூரியா ஹமிதி, 10 நிமிடம் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார்.

    அதில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் மதவாத அரசுடன் எந்தவித இராஜதந்திர ஒப்பந்தத்தையும் செய்யக் கூடாது. இந்த அரசுடன் ஒப்பந்தம் செய்வது, போராட்டங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செய்யும் துரோகம்.

    ஈரானில் நடக்கும் போராட்டங்களில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்களை விடப் பெரிய இனப்படுகொலை.

    இந்த ஆயுதம் ஏந்திய அரசை எங்களால் தனியாக எதிர்கொள்ள முடியாது. அமெரிக்கா ஈரானைத் தாக்குவது மட்டுமே எங்களது கடைசி நம்பிக்கை. ஈரான் நீடூழி வாழ்க" என்று பேசியுள்ளார்.  

    • தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர்.
    • லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.

    இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே பள்ளியில் பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய 2 மாணவர்களைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினான்.

    தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர். அவனிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கத்திக்குத்துக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.    

    • பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
    • தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இங்கு 7 முதல் 12-ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.

    இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. 25 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துகிடந்தார். அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட வில்லை.

    அதேவேளையில் தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிசூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. 

    • குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

    மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 6,000 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜலிஸ்கோவில் பதிவாகின. இருப்பினும் இப்போது மெக்சிகோவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு எல்லைகள் வரை நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    அடுத்த 30 நாட்களுக்கு ஏழு குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள குவாடலஜாரா பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்  என்று ஜலிஸ்கோ சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    • இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சிட்னி:

    இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போண்டாய்க் கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

    காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு சிட்னி நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

    அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலகலப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. அவர்களை அமைதி காக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, 27 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    அமைதியான முறையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

    • ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்
    • தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.

    ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    "123 ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் உபகரணங்களை அர்மீனியாவிற்கு சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மீனியாவிற்கு சுமார் $5 பில்லியன் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக $4 பில்லியன் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் "நாங்கள் ஆர்மீனியாவிற்கு அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை; ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்," என்றும் தெரிவித்துள்ளார். 

    தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை ரஷ்யா மற்றும் ஈரானை சார்ந்திருந்த ஆர்மீனியா, தற்போது ஒரு புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளைப் பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் மெட்சாமரில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும். 

    ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சாராமல், பல்வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாக முக்கியமானது என ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பங்களை விடத் தங்களது திட்டமே சிறந்தது என ரஷ்யா வாதிடுகிறது.

    ×