என் மலர்tooltip icon

    உலகம்

    • வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார்.
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டி யிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் 2-வது முறையாக அதிபராகி உள்ளார்.

    தற்போது தனது அரசாங்கத்தில் இடம் பெற உள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் டிரம்ப் தனது கடந்த அரசாங்க மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த நிக்கி ஹாலே, மைக் பாம்பியோ ஆகியோருக்கு பதவி வழங்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் தூதர் நிக்கி ஹாலே, முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்க மாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதை நான் பாராட்டினேன்.

    நமது நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குங்கள். தற்போது மந்திரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார். இது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற பதவியாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே போட்டியிட்டார்.

    பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருக்கு பதவி வழங்கப்பட வில்லை.

    • டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சி.
    • பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க பெண்கள் மத்தியில்4B என்ற இயக்கம் பிரபலமாகி உள்ளது. இந்த இயக்கதில் இணைவோர் உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தைகள் வேண்டாம் என்று வாதிடுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

    தென் கொரியாவில் கடந்த சில காலமாக பிரபலமாக இருந்து வரும் 4B இயக்கம், தற்போது அமெரிக்க பெண்களையும் ஈர்த்துள்ளது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சியைக் கண்டது.

    டொனல்டு டிரம்பின் வெற்றி- ஆண் வாக்காளர்களால் சாத்தியமாகி இருப்பதாகவும், சில இளம் அமெரிக்க பெண்கள் ஆண்களைப் புறக்கணிப்பதைப் பற்றி பேச துவங்கியுள்ளனர். இந்த விவகாரம் டிக்டாக் மற்றும் ஆன்லைனில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது. 4B இயக்கம் ஆண்களை பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.

    4B எனப்படும் தென் கொரிய இயக்கமானது ஆண்களை புறக்கணிக்கும் ஒருவகை சத்தியம் செய்வதாகும். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, 4பி இயக்கத்தில் இணைவதாக பல அமெரிக்க பெண்கள் சத்தியம் செய்து வருகின்றனர். 4 எண்கள் (bi என்றால் கொரிய மொழியில் "இல்லை"). இது ஆண்களுடன் டேட்டிங் செய்ய மறுப்பது, ஆண்களுடனான பாலியல் உறவுகள், வேற்று பாலின திருமணம் மற்றும் பிரசவம் ஆகியவற்றை மறுப்பது ஆகும்.

    • ஒரே இரவில் இஸ்ரேல் கடுமையாக குண்டுவீசி தாக்கியது.
    • உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை செய்யப்பட இருக்கிறது.

    லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளை ஒரே இரவில் இஸ்ரேல் கடுமையாக குண்டுவீசி தாக்கியது.

    கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து கடலோர நகரமான டயரில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த நகரில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் சார்பில் எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை.

    உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் இடம்பெற்றுள்ளதாக லெபனான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட மற்ற உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை செய்யப்பட இருக்கிறது.

    நேற்று (சனிக்கிழமை) மற்ற நகரங்களில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் அடங்குவர். இதே போல் வரலாற்று நகரமான பால்பெக்கைச் சுற்றியுள்ள கிழக்கு சமவெளிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

    லெபனானில் கடந்த ஆண்டு இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 3 ஆயிரத்து 136 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 ஆயிரத்து 979 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 619 பேர் பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர்.

    • எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது.
    • இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அரங்கேறியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

    20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.
    • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் வரும் புதன்கிழமை (13-ம் தேதி) சந்தித்துப் பேச உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
    • ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை.

    1999 ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. உக்ரைனுடன் நடந்து வரும் போரினால் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது அந்நாட்டில் மக்கள்தொகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ரஷியாவில் மக்கள்தொகை சரிந்து வரும் நிலையில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாக, பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தம்பதிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வசதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையம் மற்றும் மின்சாரத்தை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    • இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
    • இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்துள்ளது.

    கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.

    மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் Direct Stream Program (SDS) என்ற திட்டத்தை திடீரென கனடா அரசு ரத்து செய்துள்ளது.

    இந்தியா, சீனா உட்பட 14 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான விசா செயல்முறையை எளிதாக்கும் SDS திட்டம், 2018 ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    SDS திட்டத்தின் மூலம், குறைந்தது 2 வாரங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவே சாதாரண முறையில் விசா பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 வாரங்கள் வரை ஆகும். இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும்.

    • தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானம் கிளம்பியது
    • எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு மிரட்டியுள்ளார்.

    தென் கொரிய விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளே இருந்த பயணி எக்சிட் கதவை திறக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் இருந்து தென் கொரிய தலைநகர் சியோல் நகருக்கு கொரியன் ஏர் விமானமே KE658 பயணிகளுடன் கிளம்பியது.

    அப்போது பயணி ஒருவர் எக்சிட் கதவுக்கு அருகே ஊழியர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அங்கிருந்து எழுந்து அவர் புக் செய்த சீட்டுக்கு போக விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஆனால் அங்கிருந்த செல்ல மறுத்த அந்த நபர் திடீரென எக்சிட் கதவை நெருங்கி அதை திறக்கப்போவதாக கத்தி கூச்சல்போட்டு ஊழியர்களையும், சக பயணிகளையும் மிரட்டியுள்ளார்.

    அனால் தரையிறங்கும்வரை நிலைமையை சமாளித்த ஊழியர்கள், விமானம் சியோலில் பாதுகாப்பாக தரையிறங்கியவுடன் இன்சியான் சர்வதேச விமான பாதுகாப்பு படையினரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். பயணி விமானத்தில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன
    • சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளது

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

    அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்து ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தொற்று அபாயம் போன்றவற்றுக்கு மத்தியில் சொந்த நாட்டில் அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

     

     ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக கிழம்பிய இஸ்ரேல் ராணுவம், முகாம்கள், மருத்துவமனைகள் என வகை தொகை இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களும், பாலஸ்தீனத்துக்கு ஆறுதலும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் வேட்டை என்ற போர்வையில் பாலஸ்தீனத்தில் இன அழித்தொழிப்பு நடந்து வருவதாகச் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வருகிறது.

     

    போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில் நடப்பது இன அழித்தொழிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐநா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உயிரிழந்த 43,500 பாலஸ்தீனர்களில் 70 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கொல்லப்பட்டவர்களில் சுமார் 30450 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளே. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ( IHL ) அடிப்படை கொள்கைகளை இஸ்ரேல் திட்டமிட்டு மீறியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

     0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர். அவர்களில் 44 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 26 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    5 முதல் 9 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 10-14 வயது குழந்தைகளும், அதற்கடுத்து 0 முதல் 4 வயது குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர். பலியான 43 ஆயிரம் பேரில் பிறந்த 1 நாள் ஆன குழந்தை மிகவும் குறைந்த வயது பலியாகவும், 97 வயது மூதாட்டி மிகவும் அதிக வயது பலியாகவும் உள்ளனர்.

     

    • 114 அடி உயரத்தில் இந்த கோழி வடிவ ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.
    • புயல் மற்றும் சூறாவளியை தாங்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கபட்டுள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த கோழி வடிவ ஓட்டல் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரமும் 12.127 மீட்டர் (39 அடி 9 அங்குலம் ) அகலமும் 28.172 மீட்டர் (92 அடி 5 அங்குலம்) நீளமும் கொண்டது. வந்த ஓட்டலில் 15 அறைகள் உள்ளன.

    2023 ஜூன் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு 2024 செப்டம்பர் 8 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட இந்த ஓட்டல் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

    கடுமையான புயல் மற்றும் சூறாவளியை தாங்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசளித்துள்ளார்.
    • குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர்.

    பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். ஆனால் தான் மிகவும் பணம் படைத்த குடும்பத்தை சேர்த்தவர் என்று ஏமாற்றி  ஜியாஜியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி ஜியாஜுவுக்கு பரிசளித்து ஏமாற்றியுள்ளார். ஜியாஜியா கர்ப்பமான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆனால் ஜியாஜுன் பணக்காரர் இல்லை என்று சில காலங்களிலேயே மனைவிக்கு தெரியவந்தது. ஆனால் கணவனை விவகாரத்து செய்யாமல் குழந்தையை தானே வளர்க்க மனைவி முடிவெடுத்துள்ளார். கணவனையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தொடர்ந்து ஜியாஜுன் ஆன்லைன் மூலம் ஜியாஜாங் என்று மற்றொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

    அவரிடம் இருந்து பணம் பெற்று தனது மனைவி வாழும் வீடு உள்ள காம்பவுண்டிலேயே வீடு ஒன்றை எடுத்து அங்கு ஜியாஜாங் உடன் இருந்துள்ளார். மேலும் இதுமட்டுமின்றி பல்கலைக் கழக மாணவிகள் ஜியாமின், ஜியாசின் மற்றும் நர்ஸ் வேலை பார்க்கும் ஜியாலான் ஆகிய மூவரையும்  காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அனைவரிடமிருந்தும் அவ்வப்போது பணம் பறித்தும் வந்துள்ளார்.

     

    மொத்தமாக சுமார் 247 லட்சம் வரை அவர்களிடம் இருந்து ஜியாஜுன் கரந்துள்ளார் . இவர்கள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள கட்டடங்களில் உள்ள வீட்டில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    ஆக மனைவி மற்றும் 4 காதலிகளை ஒரே காம்பவுண்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஜியாஜுன் கடந்த 4 வருடமாக மெயின்டேன் செய்து வந்துள்ளார். கடைசியில் ஜியாஜுன் காதலிகளில் ஒருவர் அவர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஜியாஜுன் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    • நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனவே நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மமேலும் லாகூர் உலகின் மிகுவும் மாசுபட்ட நகரமாக மாறி உள்ளது.

     

    ஒரு கன மீட்டருக்கு ஐந்து மைக்ரோகிராம்களுக்கு மேல் உள்ள எதையும் அபாயகரமானது என்று உலக சுகாதர அமைப்பு வரையறுக்கிறது. ஆனால் இங்குள்ள நகரங்களில் காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 947 மைக்ரோகிராம்கள் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு அபாயம் என்று வரையறுத்ததை விட 189.4 மடங்கு அதிகமாகும்.

    ×