என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்: இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.

    இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.

    • ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
    • ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே.

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, வீராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட் டுமே விளையாட முடிவு செய்துள்ளனர்.

    இருவரையும் ஒருநாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம் பெறுவதில் தேர்வு குழு விருப்பத்துடன் இல்லை என்று கடந்த காலங்களில் தகவல் வெளியானது.

    ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தேர்வு பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.

    ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் பதவியை பறித்ததால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீராட் கோலிக்கு இதே நிலைதான்.

    2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே. அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இதற்கிடையே ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனுபவம் வாய்ந்த இருவரும் 2027 உலக கோப்பை அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வாரியத்தில் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பலர் 2027 உலக கோப்பைக்கு சுப்மன்கில் தலைமையிலான இளம் அணியை தயார்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தனர். இதனால் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    38 வயதான ரோகித் சர்மா 273 ஒருநாள் போட்டி யில் 11,168 ரன் எடுத்து உள்ளார். 32 சதமும், 58 அரை சதமும் அடித்து உள்ளார்.

    36 வயதான விராட் கோலி 302 ஒருநாள் போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 51 சதமும், 74 அரை சதமும் இதில் அடங்கும்.

    • ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது.

    அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார்.

    அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    • ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
    • மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?

    கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.

    எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

    • வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள்.
    • பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.

    ஒவ்வொரு பண்டிகையின் போது விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு விளக்குகளை பார்க்கும் பெண்களுக்கு நம் வீட்டில் எவ்வளவுதான் விளக்குகள் இருந்தாலும் அதனை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

    அதன்படி, புதிய விளக்குகளை வாங்கி பூஜை அறையில் வைத்து ஏற்றி வழிபடுவார்கள். இவ்வாறாக செய்வதால் நிறைய விளக்குகள் வீட்டில் இருக்கும். அந்த விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.

    வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள். இதனால் வீட்டில் இருக்கும் பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு...

    நம் வீட்டில் இருக்கும் பழைய விளக்கைக் கொண்டு வழிபடுவது எவ்வளவு மங்களகரமானது என்பது தெரியுமா?. பழைய விளக்கை கொண்டு வழிபடுவதால் உங்கள் வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.



    பழைய விளக்கை கொண்டு மீண்டும் மீண்டும் நாம் பிரார்த்தனை செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தி படிப்படியாக குறைந்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். பழைய விளக்கை கொண்டு உங்கள் பூஜை அறையில் தினமும் பசுந்நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உங்கள் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது படும். இதனால் அனைத்து காரியங்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. 

    • 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
    • சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.

    பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

    வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    • தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.

    பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.

    இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.

    இதே போல நேற்று மாலை பெய்த மழையால் ஜி.எஸ்.டி. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



    விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    • இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஜனார்தன் ராவ், கோட்டராஜு, ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்ற செயல்களில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார். 

    • சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

    சென்னை:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.

    புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

    சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,

    அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

    இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்தது.
    • விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பாய்ந்தது. இந்தநிலையில், முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.

    விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்தது.

    இந்த நிலையில், கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து விஜய் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்றும் விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் வெறும் கண் கண்ணாடியுடன் 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்றார்.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இணையத்தில் யூசுப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், துருக்கி வீரர் யூசுப் டிகெக், இஸ்தான்புல்லில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் அணியும் எந்த வித உபகரணங்களும் அணியாமல் அசால்டாக குறி பார்த்து சுட்டு உலகம் முழுக்க வைரலான யூசுப், இந்தப் போட்டியிலும் அதே போல் பங்கேற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

    • இன்று காலை ராமதாசிற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • பரிசோதனையில் இதய குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று காலை அன்புமணி ராமதாஸை சந்திக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அங்கு ராமதாசின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறுகையில், ராமதாஸ் உடல்நிலை சீராக உள்ளதாக இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    * இன்னும் 6 மணி நேரம் ICU- வில் ராமதாசிற்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    * ICU- வில் இருப்பதால் ராமதாஸை சந்திக்க முடியவில்லை.

    * இன்று காலை ராமதாசிற்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    * பரிசோதனையில் இதய குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது என கூறினார்.

    ×