search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FAKE LIQUOR"

    • போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி ஜனனி பிரியா தலைமையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு போலி மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படும் எரி சாராயம் உள்பட அனைத்து உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வீட்டில் இருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தனது நண்பரான அனில்குமார் (50) என்பவருடன் சேர்ந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை வந்தார்.

    பின்னர் காரமடை அருகே உள்ள செந்தூர் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அடிக்கடி இவர்கள் வெளியில் சென்று விடுவதால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அவர் அவர்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் கேரளாவில் வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கு சென்று விடுவோம் என தெரிவித்துள்ளனர். அவரும் அதனை நம்பி விட்டார்.

    இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளனர்.

    மதுபானம் தயாரித்த பின்னர் அந்த பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஓட்டி, மதுக்கடைகளில் பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்று, பெட்டிகளை வாங்கி அதில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கேரளாவுக்கு அனுப்பி விற்பனை செய்ததும், இவர்களுக்கு சந்தோஷ் உதவியாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், வீட்டில் இருந்த 1600 போலி மதுபான பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் இருந்த 175 லிட்டர் எரிசாராயம், மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இதில் தொடர்புடைய அனில்குமார் என்பவரை தேடி வந்தனர். அப்போது, அவர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது.

    மேலும் விடுதலையான பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான், காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்த தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடைபெற்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 474 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளி சத்யராஜ் என்பவருக்கு இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுவதற்கான ரூ.5080 முன்வைப்பு தொகைக்கான காசோலையை வழங்கினார்.

    முன்னதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாரிமுத்து 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
    • ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 26). இவர் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் மாரிமுத்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×