என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
    • காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    02-10-2025- ஒரு கிராம் ரூ.164

    01-10-2025- ஒரு கிராம் ரூ.161

    • நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரபு தனது மனைவி புனிதாவுடன் வந்தார். அவர்கள் கோவிலில் விநாயகர், சாமி, அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அவருடன் சிவாஜி மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சீனி, கவுன்சிலர் முகேஷ் குமார், கோவில் பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்பட சூட்டிங் கீழக்கரையில் நடக்கிறது. அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரம் வந்துள்ளேன். இத்திரைப்பட இயக்குனரும் ராமேசுவரத்தை சேர்ந்தவர்தான். ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் இன்று நடக்க உள்ளது.
    • அதிபர் ட்ரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.

    ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.

    இந்நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. 

    • பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
    • 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது. மேலும், 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

    உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன.

    திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன.

    உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

    திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.

    மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதைகளை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த 'அகோரி' கலையரசன் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.

    காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக அவர் கூறுகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த சண்டை இணையத்தில் பேசுபொருளான நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் கலையரசன் நுழைந்துள்ளார்.

    • மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அவர் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று டாக்டர் செங்குட்டுவேல், ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாசை பார்க்க அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ராமதாசுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பல்லாவரம்: துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

    திருமுல்லைவாயல்: சிடிஎச் சாலை, சோளம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், கலைஞர் நகர்.

    மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களான பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, லாயிட்ஸ் லேன்.

    பூந்தமல்லி: பை-பாஸ் சாலை மற்றும் பரிவாக்கம் சாலை

    ஆவடி: பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

    • சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
    • கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.

    சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.

    விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.

    யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.

    கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.

    கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×