search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aghori Kalaiyarasan"

    • பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை.
    • வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார்.

    மேலசொக்கநாதபுரம்:

    யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான அகோரி சாமியார் தற்போது தேனி மாவட்டம் போடியில் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவதுடன் தான் இங்கேயே ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்திரா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி தற்போது அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.

    காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக கூறும் இவர் கடந்த சில மாதமாக கோவையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சமூக வலைதளங்களில் பிரபலமான அகோரி கலையரசன் சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்பு அங்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சித்திரை திருவிழாவுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன்.

    நான் போடியில் பிறந்து வளர்ந்த காலத்தில் இறைவனின் அருள் எனக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காளி தேவியின் அருளால் அகோரியாக மாறி என்னை பிரகனப்படுத்திக் கொண்டபிறகு பல்வேறு ஊர்களில் இருந்து என்னைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர்.


    அகோரியாக மாறிய நான் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிபாடு செய்தது ஏன்? என கேட்கிறார்கள். விஜயகாந்த் இறப்பது எனக்கு முன்பே தெரியும். அவர் இறந்த சமயத்தில் நான் காசியில் இருந்தேன். இதனால் அப்போது அவரை பார்க்க வரமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை அது சமாதி கிடையாது. கோவில். மக்களுக்காக வாழ்ந்த மனிதக்கடவுள்.

    எனவே அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும். எனக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் ஈட்டுவதற்காக நான் வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவில்லை. என்னை யார் வேண்டுமானாலும் இழிவாக பேசட்டும். எனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை காண்பதற்காக காசியில் இருந்து வந்தேன். நான் பிரேமானந்தாவோ, நித்யானந்தாவோ கிடையாது. மக்களுக்கு என்னால் ஆன நல்ல காரியங்களை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

    எனது இறுதி காலம் போடியில்தான் இருக்க வேண்டும். எனக்கு இங்கே ஜீவசமாதி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான இடத்தையும் பக்தர்களை தேர்வு செய்ய கூறியுள்ளேன். சமீப காலமாக ஆன்மீகத்துக்கு எதிராக பலர் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை கொடுப்பார். தமிழகத்தில் ஆன்மீகத்துக்கு எதிராக பேசும் நபர்களால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும். வருகிற தேர்தலில் மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் ஆவார். மோடி சித்தர் வடிவானவர். அதனால்தான் அவருக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அதனை திறப்பு விழா நடத்தும் பாக்கியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகோரி கலையரசன் போடிக்கு வந்திருப்பதை அறிந்ததும் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அவரை காணக் குவிந்தனர். அவர்களுக்கு அருளாசி வழங்கியபடி அவர் மற்ற கோவில்களில் தரிசனம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார்.

    ×