என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை - விஜயை விமர்சித்த பிரேமலதா
    X

    விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை - விஜயை விமர்சித்த பிரேமலதா

    • சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
    • கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.

    சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.

    விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.

    யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.

    கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.

    கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×