என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
    X

    பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

    • 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
    • சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.

    பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

    வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×