என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்துப்போகவில்லை. பார் உரிமங்கள் பெறுவதற்கான டெண்டரில் GST, PAN நம்பர் இல்லை.
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.
பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாட்டிலுக்கு எம்ஆர்பி தொகையைவிட ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களை குடோனுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மது ஆலை நிறுவனங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ரூ.1000 கோடி முறைகேட்டில் மதுவுக்கான பாட்டில்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு முக்கிய பங்கு.
ஏலத்தில் காலக்கெடு முடிவதற்குள் டிடி வழங்காமலே சலுகை வழங்கியதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை ஊதிப்பெருக்கி காண்பித்து, ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
- ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.
- நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெண்டுர்தி எனும் பகுதியை சந்திர நாராயணன். இவரது வீட்டில் உள்ள ஏசியில் பாம்பு இருப்பதாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அனுப்பினர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஏசிக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்தார். பின்னர் அந்த பாம்புகளை பத்திரமாக மீட்டு பைக்குள் போட்டு எடுத்து சென்றனர். நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏசியின் மேல் இருக்கும் மூடியை ஒருவர் கழற்றி அதிலிருந்து கயிறு போன்ற ஏதோ ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் உற்று பார்த்த பிறகுதான் தெரிகிறது அது பாம்பு என்று. ஒரு பாம்பு அல்ல, கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.
இதை பார்த்த பலர் தங்கள் வீடுகளிலும் ஏசி இருப்பதாகவும், இனி அதை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் ஏசி வைத்திருக்கும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.
- நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
சென்னை:
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 121 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சிறிய தொகுதி என்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய தொகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அவர்களை வரவழைத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்ததற்கான சான்றிதழை விஜய் நேரில் வழங்கியதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தயாரித்து வந்தார். அந்த மாவட்ட செயலாளர்களின் விவரங்கள், கட்சியில் அவர் எப்படி செயல்பட்டு வருகிறார், மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்தார்.
பின்னர் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை கட்சி தலைவர் விஜய்யிடம் வழங்கினார். பின்னர் விஜய்யும், புஸ்சி ஆனந்தும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் பின்னணியை மீண்டும் சரி பார்த்தனர். எவ்வளவு நாள் தங்களுடன் உள்ளனர். மாவட்டத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி பரிசீலனை செய்தனர்.
இதையடுத்து அவர்களில் 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன், அவர்களை தனித்தனியே நேரில் அழைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பதவிக்கான நியமன சான்றிதழை அவர்களிடம் வழங்கி கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
'நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க செல்வந்தர்கள் பலரும் முயன்றனர். ஆனால் உங்களின் உழைப்பை நம்பி உங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன்.
எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக இந்த பதவியை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பண பேரம் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் பெரிய தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறிய தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன், சேப்பாக்கம் தொகுதிக்கு திலீப்குமார், பல்லாவரம் தொகுதிக்கு குமார், தாம்பரம் தொகுதிக்கு சரத்குமார், திரு.வி.க.நகர் தொகுதிக்கு பல்லவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேலு, மாதவரம் தொகுதிக்கு எம்.எல்.பிரபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லவி பெண் மாவட்ட செயலாளர் ஆவார். பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் மன்மதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட உள்ளனர்.
- தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?.
- அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவிரைவு இணைய சேவை வழங்கி வருகிறது. நகரம் மற்றும் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களில் கூட ஸ்டார்லிங்கால் இணைய சேவை வழங்க முடியும்.
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் நெட்வொர்க் சேவையில் முன்னணியாக திகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் அதிகவேக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் உடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்த உடன் ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால்பதிக்கும்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நல்லெண்ணத்தை பெற பிரதமர் மோடியால் கூட்டாண்மை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் விமரம்சித்துள்ளது.
ஸ்டார்லிங்கின் உரிமையாளர் எலான் மஸ்க் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நல்லெண்ணத்தை பெற இந்த கூட்டாண்மைகள் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் உள்ளன. ஒருவேளை மிக முக்கியமான ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?. அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பு வழங்கும் மற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படுமா?. அப்படி என்றால் எந்த அடிப்படையில்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
ஸ்வீட்ஹார்ட்
யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் ஒரு ரொமாண்டிக் காதல் திரைப்படமாக அமைந்துள்ளது.
பெருசு
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அடல்ட் காமெடி திரைப்படமாக அமைந்துள்ளது.
ராபர்
எஸ்.எம் பாண்டி இயக்கத்தில் மெட்ரோ சத்யா, டானியல் ,தீபா சங்கர் மற்றும் ஜெய பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ராபர்.
வருணன்
இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேபிரியல்லா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் வருணன். ராதா ரவி மற்றும் சரண் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜெய வேல்முருகு இயக்கியுள்ளார்.
டெக்ஸ்டர்
சூர்யன் ஜி இயக்கத்தில் ராஜீவ் கோவிந்தா பிள்ளை மற்றும் அபிஷேக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டெக்ஸ்டர்.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
ரங்கராஜ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பூஜிதா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.
ஆபிசர் ஆன் டியூட்டி
குஞ்சாக்கோ போபன் மற்றும் பிரியாமணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ஜித்து ஆஸ்ரஃப் இயக்கத்தில் கடந்த மாதம் மலையாளத்தில் வெளியானது ஆபிசர் ஆன் டியூட்டி திரைப்படம்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தை தற்பொழுது படக்குழு தமிழில் நாளை வெளியிடவுள்ளது.
மாடன் கோடை விழா
தங்கபாண்டி இயக்கத்தில் கோகுல் கவுதம் ,ஷருமிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாடன் கோடை விழா. இப்படத்தின் இசையை விபின் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் நாளை வெளியாகிறது.
இது தவிர்த்து வீரத்தின் மகன் மற்றும் குற்றம் குறை திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளது.
மேலும் M. Kumaran Son Of Mahalakshmi மற்றும் ரஜினி முருகன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
- விமான நிலைய பாதுகாப்பு குறைபாடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
தங்கம் கடத்தில் வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடகா, பின்னர் அதை திரும்பப் பெற்றது. திரும்ப பெற எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில நடிகை ரன்யா ராவ் துபாயில் இருநது கேம்பேகவுடா சர்வதேச நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அவரிடம் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டிஜபி ரேங்கில் உள்ள உயர் அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா உத்தரவிட்டார்.
இதற்கிடையே ரன்யா ராவின் தந்தை கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதில் பங்கு உள்ளதா? என விசாரணை நடத்த கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் சிஐடி விசாரணை உத்தரவை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற்றுள்ளார். சிஐடி விசாரணையை திரும்பப் பெற எந்த நெருக்கடியும் இல்லை என அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-
முதலமைச்சர் சித்தராமையா, கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நாங்கள் எங்களுடைய போலீஸ் துறையின் விசாரணையை (சிஐடி) திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் உத்தரவிட்ட விசாரணை நடைபெறும்.
இரண்டு தனிப்பட்ட விசாரணை நடைபெறக் கூடாது. இதனால் நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். சிஐடி விசாரணை நடத்த எந்த நெருக்கடியும் இல்லை. விசாரணை நடத்த வேண்டும் என்றோ அல்லது, சிஐடி விசாரணையை திரும்பப்பெற வேண்டும் என்றோ யாரும் கேட்கவில்லை. நடந்தது அதுதான். எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
ரன்யா ராவ் திருமண விழாவில் பரமேஷ்வரா, முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்ட படத்தை பாஜக பகிர்ந்துள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கா திருமணங்களுக்கு நாங்கள் போகிறோம்" எனப் பதில் அளித்தார்.
தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
- அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.
இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம்.
- நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?
எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.
திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி. முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?
கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
- கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.
ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.
நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?
144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.
மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"
- சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
- திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும்.
திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.






