என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
    • அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.

    இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

    வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம்.
    • நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?

    எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி. முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?

    கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கும்பமேளாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார்.
    • கும்பமேளாவில் படகோட்டிக்கு எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார்.

    ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

    லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமடைந்துள்ளது. பாஜக சமூகத்தை பலவீனப்படுத்தி பிளவை உருவாக்குகிறது. பாஜக நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது.

    நமது முதல்வர் 30 என்ற எண்ணை நேசிப்பதால் இதைச் சொல்கிறேன். (கும்பமேளாவில்) எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கேட்டால் 30 பேர் என்று சொல்கிறார். (கும்பமேளாவில் படகோட்டிக்கு) எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கேட்டால் 30 கோடி என்கிறார். இந்த வகையான கணக்கை எங்கள் முதல்வரைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று இளைஞர்கள் பணம் சம்பாதித்தது தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், "அலகாபாத்தில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக முதல்வர் கூறுகிறார். தனியார் வாகனங்களை வணிக வாகனங்களாகப் பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் எப்போது முடிவு செய்தது என்று யாராவது எனக்கு விளக்கவும்?

    144 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?" என்று மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்ற உ.பி. அரசின் கூற்றை கேலி செய்தார்.

    மேலும் பேசிய அவர், "இப்போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்பதை நான் அனைத்து மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். இனிமேல் எதிர்காலத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை பரப்புவார்கள். 2027 இல் சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வரும்"

    • சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும்.

    திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

    • சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது 2 கே லவ் ஸ்டோரி திரைப்படம்.
    • நவீன் சந்திரா நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ராமம் ராகவம்.

    திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது.

    அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    2 கே லவ் ஸ்டோரி

    சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது 2 கே லவ் ஸ்டோரி திரைப்படம். இப்படம் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். காதல் மற்றும் நட்பை முன்னிலையில் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

    ஃபயர்

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். ஃபயர் திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    காதல் என்பது பொதுவுடைமை

    ஓரினசேர்க்கையாளர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, வீட்டில் அவர்களை எம்மாதிரி நடத்துகின்றனர். அவர்கள் படும் கஷ்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகிணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

    ராமம் ராகவம்

    நவீன் சந்திரா நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ராமம் ராகவம். இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி நடித்தார். அப்பா மற்றும் மகனின் உறவுமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பொன்மேன்

    பேசில் ஜோசஃப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன் மற்றும் தீபக் பரம்பொல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Ponman திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    சீசா

    சீசா, ஜனவரி 3 2025 அன்று வெளியான திரில்லர் திரைப்படம். இதன் தீவிரமான கதை மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் நாளை ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு திடீரென ரஷியா எல்லைக்குள் புகுந்த உக்ரைன் ராணுவம் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல இடங்களை பிடித்தது.
    • உக்ரைன் பிடித்த இடங்களை மீட்க ரஷிய ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்திற்குள் உக்ரைன் ராணுவம் புகுந்தது. குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களை உக்ரைன் பிடித்தது.

    இது படையெடுப்பு அல்ல. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், ரஷியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கும் உதவியாக இருக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த புதின், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கைவசப்படுத்திய இடங்களை மீட்க ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்திற்கு எதிராக ரஷியா கடுமையாக போரிட்டு வந்தது. உக்ரைனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பகுதியை மீட்டு வருதாக ரஷியா தெரிவித்தது.

    இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா என்ற மிகப்பெரிய நகரை உக்ரைன் ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளோம் என ரஷியா தெரிவித்துள்ளது.

    குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் பிடித்துள்ள கடைசி இடத்தில் இருந்தும் அவர்களை விரட்டுவதற்காக ரஷியா ராணுவம் நெருங்கி வருகிறது என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவலை ரஷியா வெளியிட்டுள்ளது.

    ரஷிய அதிபர் புதின் புதன்கிழமை (நேற்று) இந்த குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ தலைமையகம் சென்றிருந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.

    • 150cc திறன் கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது

    யமஹா நிறுவனம் FZ-S Fi ஹைப்ரிட் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    நாட்டில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ள 150cc திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ₹1.45 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    யமஹா FZ-S Fi ஹைப்ரிட் பைக் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்த மோட்டார் சைக்கிள் 149cc ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் என்ஜின் 7,250 ஆர்.பி.எம். இல் 12.2 குதிரைத்திறனையும் 5,500 ஆர்.பி.எம். இல் 13.3 Nm டார்க் விசையையும் வெளிப்படுத்தும்.

    • சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.

    மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
    • சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
    • பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.

    இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.

    ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.

    • விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
    • இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர்.

    ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்டது. இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி, கிரண், திவ்யா துரைசாமி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    டிரெய்லர் காட்சிகளில் விமல் ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை எடுத்துள்ளார். விமல் ஒரு எம்.எல்.ஏ வை கொன்றுவிடுகிறார். இதனால் எம்.எல் ஏ க்கு நெருக்கமாக இருக்கும் 4 நபர்கள் விமலை கொல்ல வேண்டும் என தேடிவருகின்றனர். இதனால் விமல் வனதேசம் என்ற ஊருக்கு செல்கிறார். இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. தொடரைக்குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இத்தொடரும் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
    • எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.

    சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.

    ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.

    உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

    பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.

    சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ×