என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
- பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.
ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.
- விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
- இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். அதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார் மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விமல் அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடருக்கு ஓம் காளி ஜெய் காளி என தலைப்பிட்டுள்ளனர்.
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு வெப் தொடருக்கு பின் விமல் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் சமீபத்தில் வெளியிட்டது. இத்தொடரில் குவீன்ஸி, புகழ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி, கிரண், திவ்யா துரைசாமி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தொடரின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டிரெய்லர் காட்சிகளில் விமல் ஒரு ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தை எடுத்துள்ளார். விமல் ஒரு எம்.எல்.ஏ வை கொன்றுவிடுகிறார். இதனால் எம்.எல் ஏ க்கு நெருக்கமாக இருக்கும் 4 நபர்கள் விமலை கொல்ல வேண்டும் என தேடிவருகின்றனர். இதனால் விமல் வனதேசம் என்ற ஊருக்கு செல்கிறார். இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. தொடரைக்குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விலங்கு வெப் தொடரை தொடர்ந்து இத்தொடரும் வெற்றி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
- எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.
ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
- தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் இன்று (13-ந் தேதி) இரவு முதல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.
அதன்படி நிறைகொழுப்பு பால் 500 மிலி 38 ரூபாயில் இருந்து 40.00ரூபாயாகவும், ஒரு லிட்டர் 71.00ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும், மற்றொரு வகை ஒரு லிட்டர் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், தயிர் 400 கிராம் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் உயர்கிறது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்கள் அனைத்தும் ஹட்சன் போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களின் பாலினை பயன்படுத்தி வருவதால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.
இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் கோடை காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி சற்றே சரிவடையத் தொடங்கி இருந்தாலும் கூட பால் கொள்முதல் விலையிலோ அல்லது மூலப்பொருட்கள் விலையிலோ எந்தவிதமான உயர்வோ அல்லது மாற்றங்களோ இல்லாத இந்த காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
- முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* தமிழக அரசு பட்ஜெட்டுக்கான லோகோவில் ரூபாய்க்கான குறியீடை நீக்கி விட்டு, ரூ என வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
* ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
* உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது மு.க.ஸ்டாலின் அவர்களே?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
- மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.
மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- நாட்டில் நடக்கும் கொலைகளை தனிப்பட்ட பிரச்சனைகள் என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.
- விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,
அன்றே இந்த விடியா திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?
அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..
"வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் முதலமைச்சர் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது,
சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது,
விடியா ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
- காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
- எனக்கு தனுஷையும் பிடிக்கும்.
தமிழ் திரையுலகில் "ஓ மை கடவுளே" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
அதன்படி, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. மேலும், இவர் அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51-வது திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனின் ரசிகரான அஷ்வத் தனது மூன்றாவது திரைப்படத்தில் அவரையே இயக்குகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, "நான் நடிகர் சிலம்பரன் ரசிகர் தான். ஆனால் எனக்கு நடிகர் தனுஷையும் பிடிக்கும். மேலும், நான் அவரிடம் கதை ஒன்றையும் கூறியிருக்கிறேன். அது காதல், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையை கொண்ட படம் ஆகும்," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
- தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. அரசு தலைமை கொறடா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
- அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து பரிமாற்றம் கடுமையாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். எனினும் அவரை கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று (மார்ச் 12) தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை" என்று பேசியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
- தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






