ஒருவனுக்கு ஒருத்தி தமிழன் நாகரீகம்.. வடநாட்டவன் 5 பேர் இருந்தாலும்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை

தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார்.
ஒருவனுக்கு ஒருத்தி தமிழன் நாகரீகம்.. வடநாட்டவன் 5 பேர் இருந்தாலும்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை
Published on

தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்து பரிமாற்றம் கடுமையாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். எனினும் அவரை கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று (மார்ச் 12) தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்டமாக கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை" என்று பேசியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com