search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu budget"

    தமிழக பட்ஜெட் நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. #TamilNaduBudget
    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து 3-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெற்றது. 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

    இந்த நிலையில், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.



    இது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார். அதன் அடிப்படையில், நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று தெரிகிறது. இதற்காக சட்டசபையில் அவரது இருக்கையில் தனி மேடை அமைக்கப்பட இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல், அதிகமான அளவுக்கு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பு தமிழக பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. அதேபோல், புதிய அறிவிப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அனேகமாக, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) எதிர்க்கட்சியினர் முக்கிய பிரச்சினைகளை எழுப்புவார்கள்.

    அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். இந்த விவாதம் முடிந்ததும், 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக பதில் அளித்துப் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும்.

    பொதுவாக, பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ.3½ லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசுச் செலவு (ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய்) போன்ற செலவுகளினால், தமிழக அரசின் நிதிச்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    தமிழக அரசின் கடுமையான நிதிச்சுமை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. அதேபோல், வறட்சி பாதிப்பு, கோடநாடு கொலை விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ - ஜியோ போராட்டம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. #TamilNaduBudget 
    ×