என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

    இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

    படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    • அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
    • பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.

    குழு புகைப்படத்தின் போது, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic சிஇஓ டேரியோ அமோடி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் அருகருகே நின்று கொண்டிருந்தனர். 

    மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். ஆனால், பக்கத்து பக்கத்தில் நின்ற சாம் ஆல்ட்மேனும் டேரியோ அமோடியும் மட்டும் கைகளைக் கோர்க்கவோ, கைகுலுக்கவோ செய்யாமல் தவிர்த்தனர்.

    இந்த இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கடுமையான தொழில் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

    டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் முன்பு 'OpenAI' நிறுவனத்திலேயே துணைத் தலைவர்களாக பணியாற்றினர். அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.

    சாம் ஆல்ட்மேன் AI பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டி, டேரியோ மற்றும் டேனியலா, 2021ல் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.

    வெளியேறிய பிறகு, அவர்கள் 'Anthropic' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இது தற்போது OpenAI-க்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

    இந்தத் தொழில்முறைப் பகைதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் உலகமே கவனிக்கும் மாநாட்டின் மேடையிலும் வெளிப்பட்டது. 

    • தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
    • அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-

    கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா தி.மு.க.வுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது.

    ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.

    அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.

    காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரைதேறாது என்றார். 

    • தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.

    • தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
    • அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.

    எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.

    தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.

    கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துபே 31 பந்தில் 66 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு எம்.எஸ். தோனி அளித்த அறிவுரையே காரணம் என்று ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மஹி பாய் என்னிடம் சொன்னது. ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரி அடிக்கலாம் அல்லது ஒரு ரன் எடுக்கலாம் என்று தோனி எனக்குக் கூறினார். இது எனது பேட்டிங்கில் தெளிவை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆரம்பத்தில் வரும்போது அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும்.

    தோனியின் வழிகாட்டுதல் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இக்கட்டான சூழலில் இந்திய அணியை மீட்க அது உதவியது என துபே கூறினார்.

    • மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.
    • ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மலைப் பிரதேசங்களிலும், பனிப் பிரதேசங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை கடற்கரை பகுதியில் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?

    பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த செயல் இருக்கும் இயற்கையான புகழ்வாய்ந்த மெரினா கடற்கரையில் நெய்தல் நிலப்பரப்பை சீர்குலைக்கும் செயலாகும்.

    கார்ப்பரேட் நிறுவனம் லாபம் சம்பாதிக்க மெரினா கடற்கரையை விற்க நினைப்பது வரலாற்று அபத்தம் மட்டுமல்ல, சென்னை வாழ் மக்களுக்கும், மீனவர்களுக்கும் இழைக்கும் பெரும் அநீதியாகும்.

    ஏற்கனவே மெரினா கடற்கரையில் நீலக்கொடி பிரதேச திட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    நீலக்கொடி பிரதேச திட்டத்தை மெரினா கடற்கரையில் அமல்படுத்தக் கூடாது என அனைத்து மீனவ கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பகுதியில் ரோப் கார் திட்டத்தை கொண்டு வருவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இந்த திட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.

    • விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
    • மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.

    திருச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் எண்ணத்துக்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இது மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

    ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த பிரயோசனமான அறிவிப்பும் இல்லை.

    மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில் தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூட சுயாட்சியை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை. த.மா.கா. குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனமும், செயல்பாடும் உள்ளது.

    ராஜ்ய சபை உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.க.வை பொருத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் எம்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு குறித்து சிந்திக்கவில்லை.

    லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா.தான். தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால், மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க. அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.

    காங்கிரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான். சுக்குநூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்குநுறாக தான் போகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிடமாட்டோம்.
    • எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு புதிய இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

    எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். சாதி சமயம் மதத்தை தவிர்த்து புதிய சமுதாயத்தை அமைப்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.

    திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த இயக்கம் செயல்படும்.

    சமத்துவம் சம வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு அறநிலை அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடமாட்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம். மக்களைத் தொடர்ந்து சந்திப்போம். சுற்றுப்பயணம் செய்வோம். விஜய்க்கு கூட்டம் கூடுவது அவரது உழைப்பும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான்.

    ஆனால் அவர் எம்.ஜி.ஆர். போல வர முடியுமா செயல்பட முடியுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. வருகின்ற 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் புதிய கட்சி தொடக்க விழா நடைபெறும் என்றார்.

    பேட்டியின் போது பொதுச்செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், பிரேமலதா ரஞ்சித் குமார், ஜோதி ராமன், ஜோதி அம்மாள் உடன் இருந்தனர்.

    • ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
    • சாம் பிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. டைட்டில் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'அண்டர் 18' (UNDER 18) என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த வேறு எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

    நடிகர் விக்ராந்த் LBW, மதராசி, மார்க் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியானது. அதனை தொடர்ந்து, கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்தரகாண்டா, ஓ.! சுகுமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 



    • ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும்.
    • உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டம் கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அளவில் வளர்ச்சி சதவீதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    குறுக்கு வழியில் மட்டுமே ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜவிற்கு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்.

    அதனால் தான் கடந்த தேர்தலில் துரோகத்திற்கும், குறுக்கு வழிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்ற ஒற்றை கருத்தோடு தி.மு.க.வை வெற்றி பெற வைத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பொறுப்பேற்க வைத்தீர்கள்.

    இன்று புதியதாக வந்த ஒருவர்(விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். அம்மாக்கள் சொன்னால் தான் அவர்கள் கேட்பார்கள். படத்தை பார்க்க சொல்லுங்கள், விசிலை அடிக்க சொல்லுங்கள். ஆனால் வாக்குகளை தி.மு.க.விற்கு போட சொல்லுங்கள்.

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், ஆயிரம் ரூபாயை தடுக்க பார்த்தவர்களுக்கு சவுக்கடியாக 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக கொடுத்தவர் தான் தமிழக முதலமைச்சர். அதை அடுத்த முறை ஆட்சி பொறுப்பேற்றதும் 2,000 ரூபாயாக தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி 16,000 ரூபாயாக உள்ள நிலையில் அதை இந்திய அளவில் இலவசமாக கொடுத்து வருபவர் நம் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் இல்லை.

    தேவைப்பட்டால் நாங்கள் கற்றுக் கொள்கிறோம். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். ஒரு மொழியை அழித்தால் அந்த மாநில கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திரம் கிடைத்தபோது அவர்கள் மொழியை 97 சதவீதம் பேர் பேசி வந்தனர். ஆனால் இன்று 3 சதவீதம் பேர் தான் அவர்கள் தாய் மொழியை பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தி திணிப்பால் ஒரு மொழியே அழிந்து வருகிறது.

    உங்கள் கையில் உள்ள ஒரு வாக்கை அளித்து மீண்டும் திமுக ஆட்சி மலர வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.

    தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.

    இந்த நிலையில், 'தடயம்' தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கூர்மையான புத்திசாலித்தானம் கொண்ட காவல் அதிகாரியான சமுத்திரகனி, குற்றவாளிகளையும், கொலைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் கண்டறிகிறார். அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள திகில் நிறைந்த 'தடயம்' தொடரை வருகிற 27-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். 



    ×