என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை
    • ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

    மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரிய மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில், காற்று சுத்திகரிப்பு கருவிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அதிகாரத்தை இது பயனற்றதாக்கி விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்
    • புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்"

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது. கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார் .

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர். 

    மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை  பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

    அமலாக்கத்துறையின் இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார். அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள். சோதனையின்போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பினார். 

    மேலும் பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் அவர் சாடினார்.  மேலும் "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல
    • முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது

    பீகார் மாநிலம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் ஹிஜாப், புர்கா, நிகாப், முகமூடிகள் (Masks), ஸ்கார்ஃப் அல்லது ஹெல்மெட் அணிந்து முகம் மறைக்கப்பட்ட நிலையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்ற புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதை தெரிவிக்கும் வகையில், பீகாரின் பல பகுதிகளில் உள்ள நகைக் கடைகளின் வாசலில் "முகத்தை மறைத்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை"என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பு அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நகைக் கடைகளில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டது என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், முகம் மறைத்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்றும் AIJGF பீகார் தலைவர் அசோக் குமார் வர்மா தெரிவித்துள்ளார். இந்த முடிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று விமர்சித்துள்ளன

    • அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல.
    • சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா?

    இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம். ஆனால் கடந்த மாதம் இந்தூரின் பாகிரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிலர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

     இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காண்டுவா தொகுதியில் ஏதேனும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என பாஜக எம்.பி. ஞானேஸ்வர் பாட்டீலிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    "காண்ட்வாவாக இருந்தாலும் சரி, நகராட்சி மன்றமாக இருந்தாலும் சரி, கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, அனைவரும் இந்தூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல. பொதுமக்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. தண்ணீர் தொட்டிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

    சுத்தமான தண்ணீர் என்பது நமது பிரதமர் மோடியின் உறுதி, ஒவ்வொரு வீட்டிலும் குழாய்கள் வழங்கப்படுகின்றன. குறைபாடுகள் இருந்தால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க வேண்டும்" என தெரிவித்தார். 

    அதற்கு தொடர்ந்து தண்ணீரின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை தகவல் அறிவித்தும், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பதிலளித்ததற்கு, முதலமைச்சர் "துரதிர்ஷ்டவசமான" சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாட்டீல் கூறினார். 

    ஞானேஸ்வர பாட்டீலின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா, 

    சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா என்பதை ஞானேஷ்வர் பாட்டீல் தெளிவுபடுத்த வேண்டும். குடிநீரை சுத்தம் செய்வது கூட பொதுமக்களின் பொறுப்பு என்றால், அரசாங்கம் நமது வரிப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அரசு ஏன் வரி வசூலிக்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும் பாட்டீல் தனது கருத்தை தெளிவுப்படுத்தாவிட்டால், காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
    • பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளரும், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியவருமான மாதவ் காட்கில் காலமானார். அவருக்கு வயது 83.

    வயது மூப்பு காரணமாக அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் புனேவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு இயற்கை எய்தினார்.  

    2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் தலைவராக காட்கில் இருந்தார். இது 'காட்கில் கமிஷன்' எனப்படுகிறது.

    இவர் தாக்கல் செய்த 'காட்கில் அறிக்கை' மேற்குத் தொடர்ச்சி மலையின் 75% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியது. அங்குச் சுரங்கப் பணிகள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரியது.

    காட்கில் அறிக்கை, இன்றுவரை சூழலியல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

    1986-ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பயோஷ்பியர் ரிசர்வ் ஆன நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.

    வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    இந்தியாவின் 'உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்' உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐநா-வின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்'  உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 

    பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நீண்ட காலம் பேராசிரியராக காட்கில் பணியாற்றினார் .

    சுமார் 215 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 6 முக்கியப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

    அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    • தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.
    • திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    * அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினேன்.

    * தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவாக கூட்டணி அமைத்துள்ளோம்.

    * தி.மு.க. வை வீழ்த்தி 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது.

    * மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துகின்றனர்.

    * தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை.

    * பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது.

    * திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது.

    * திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.

    * அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

    * ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கு இடமில்லை.

    * சசிகலா, ஓபிஎஸ் இல்லாமலே அதிமுக வலுவாக உள்ளது.

    * அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக ஒரு போதும் தலையிடாது.

    * அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இணைந்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.

    * தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி.

    * தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றமில்லை.

    * யாருடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க முடியாது.

    * பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றார். 



    • இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித் மற்றும் மாணவி நட்சத்திரா. இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை மோகிலாவிலிருந்து ஐதராபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    மிர்ஜ குடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீ நிகில், ரோகித் ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    நட்சத்திரா படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நட்சத்திராவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    • அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்

    வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49) காலமானார்.

    சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார்.

    இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

    தனது மகனின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று என் வாழ்வின் இருண்ட நாள். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    ஒரு மகன் தனது தந்தைக்கு முன்பே செல்வது இயற்கை அல்ல. அவர் வெறும் என் மகன் மட்டுமல்ல, என் நண்பன் மற்றும் பெருமையும் கூட" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

    நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்போம் என்று அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன்.

    இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அக்னிவேஷின் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

    • அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அமர்த்தியா சென்னின் வாக்காளர் விவரங்களில் வயது உள்ளிட்டவற்றில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி பீர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமர்த்தியா சென் போன்ற புகழ்பெற்ற ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று சாடியுள்ளது.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

    பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமர்த்தியா சென் நிலைப்பாடு:

    பாஜகவின் கொள்கை 'இந்து ராஷிடிரா' இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதாகவும் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது நாட்டின் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்

    விசாரணையின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையை நினைவூட்டுகிறது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அரசு தலையிட்டு இந்துத்துவா சித்தாந்தத்தைத் திணிக்கிறது, பாஜக அரசு வணிகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை, ஏழை மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்திற்குத் தருவதில்லை எனவும் அமர்த்தியா சென் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்திருந்தார். 

    .

    • மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
    • மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது.

    அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

    இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

    அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், '2027-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், வீடு வீடாக சென்று வீடு பட்டியலிடும் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு, சுய கணக்கெடுப்பு பணிகள் 15 நாட்கள் நடத்தப்படும் என்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

    வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் அடங்கிய முதல்கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்தவுடன் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.

    அதன்படி லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களை தவிர, மீதி பகுதிகளில், 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். லடாக் யூனியன் பிரதேசம், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இடங்களில், வருகிற செப்டம்பர் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும். செல்போன் செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

    • மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
    • அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

    இதில், தமிழகத்தில் மட்டும், 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இதில் பெரும்பாலும் இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஆனால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    ×