என் மலர்tooltip icon

    இந்தியா

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார். 

    • திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.
    • 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர்

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.

    இந்தியா சார்பில் உரையாற்றிய பி. வில்சன் கூறியதாவது:-

    மாண்புமிகு தலைவர் அவர்களே, வணக்கம்.

    1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதி நிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

    பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.

    3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது.

    4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

    5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.

    6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.

    7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது.

    8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    • மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
    • திடீரென கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார்.

    இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

    PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
    • அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

    பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.

    ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.

    இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.

    • போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.

    குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாட ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

    அவர்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிற்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி ஆர்டர் செய்து இஷ்டம் போல சாப்பிட்டார்கள்.

    சாப்பிட்ட உணவிற்கான பில்லை பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ரூ.10 ஆயிரத்து 900-த்திற்கான பில்லை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணம் செலுத்தாமல் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தனர்.

    கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக ஓட்டலிலிருந்து வெளியேறி காரில் தப்பி சென்றனர். அவர்கள் அங்கிருந்து செல்வதை கண்ட ஓட்டல் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது. அப்போது போலீசார் காரை சுற்றி வளைத்து அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை வசூல் செய்தனர். அவர்களை கைது செய்து இதேபோல் வேறு எங்காவது மோசடி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • டூமாஸ் கடற்கரையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அளிப்பதாகக் கூறினர்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தள பயன்பாடு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் வீடியோக்கள் அதிக லைக்குகள், ஷேர்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக விதவிதமாக யோசித்து பதிவிடுகின்றனர். அப்படி பதிவிட அபாயத்தை உணராமல் எடுக்கப்படும் வீடியோக்களால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலையில், சாகச நிகழ்வை பதிவு செய்வதற்காக கடற்கரையில் சொகுசு காரை கொண்டு சென்றபோது அது கடலில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் டூமாஸ் கடற்கரையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை மீறி டூமாஸ் கடற்கரையில் ஸ்டண்ட் டிரைவ் செய்வதற்காக 18 வயது வாலிபர் ஒருவர் சொகுசு காரான மெர்சிடிஸ் சி220 காருடன் சென்றுள்ளார். அப்போது அவரது நண்பரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு டிரைவ் செய்து கொண்டிருந்த போது கார் கடலில் சிக்கிக்கொண்டது.

    இதனால் செய்வதறியாது தவித்தவர்கள் கிரேன் வாகனத்தை வரவழைத்து காரை கடலில் இருந்து மீட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், காரை ஓட்டிய 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் காரின் உரிமையாளரையும் கைது செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திடம் புகார் அளிப்பதாகக் கூறினர்.



    • ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் லிவ்-இன் பார்ட்னராக வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    வடக்கு டெல்லி திமார்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம்கேஷ் மீனா (வயது32). இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த 6-ந்தேதி அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் ராம்கேஷ் மீனா இறந்து கிடந்தார். அவரது பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அங்குள்ள அறையில் சோதனை செய்த போது அவரது ஹார்ட்டிஸ்க்கில் 15 பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ராம்கேஷ்மீனா தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்றதற்கான முக்கிய தடயம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் லிவ்-இன் பார்ட்னராக வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் அவரது நண்பர் சந்தீப்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம்கேஷ்மீனாவை கொன்று விபத்து போல் காட்ட தீவைத்ததாக கூறினார்.

    மேலும் ராம்கேஷ்மீனா வைத்திருந்த ஹார்ட்டிஸ்க்கில் அம்ரிதா சவுகானின் நிர்வாண படங்களும் மேலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்தது.

    அம்ரிதா சவுகான் அவளது படங்களை அழிக்க வற்புறுத்தியும் ராம்கேஷ் மீனா அழிக்காததால் அவனை கொன்றதாக கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ராம்கேஷ்மீனா பெண்களின் நிர்வாண படங்களை ஹார்ட்டிஸ்க்கில் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார். இதுவே கொலைக்கு காரணமாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை கண்காட்சிக்கு வந்துள்ளது.

    ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.

    கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று தொடங்கும் நிலையில் முன்கூட்டியே நாடு முழுவதும் இருந்து பலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர். இதனை பார்க்க கூட்டம் கூடி வருகிறது.

    இதில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்துள்ளது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் உள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த மாட்டின் விலையை கேட்டால் அசந்து போவீர்கள். ஆமாம் ரூ.23 கோடி.

    இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.

    இதேபோல் ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையும் கண்காட்சிக்கு வந்துள்ளது. உஜ்ஜைன் பகுதியில் இருந்து 600 கிலோ எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எருமை மாடும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்ல உயரம் குறைந்த பசு மாடும் இந்த கண்காட்சிக்கு வந்துள்ளது.

    • ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
    • ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் 'எல்.வி.எம்-3' ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட 'ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் 'சி.எம்.எஸ்-03' என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்டப்பணியான 'கவுண்ட்டவுன்' வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்
    • அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனகோண்டா பாம்பு என்று விமர்சித்துள்ளார்.

    மும்பையில் புதிதாக பாஜக அலுவகம் அமைக்க சட்டவிரோதமாக நிலம் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் மும்பையின் வோர்லியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய தாக்கரே, "புதிய பாஜக அலுவலகம் அமைக்க மின்னல் வேகத்தில் நிலத்தைக் கைப்பற்றப்பட்டது.

    அனகோண்டா தன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்குவது போல, இவர்கள் மும்பையையும் முழுமையாக விழுங்க நினைக்கிறார்கள்" என்று அமித் ஷாவையும், பாஜகவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் பாஜக தலைவர்களை ஆப்கானியப் படையெடுப்பாளரான அஹமது ஷா அப்தாலியுடன் ஒப்பிட்ட தாக்கரே, "உண்மையான அப்தாலிகள் மீண்டும் வந்துள்ளனர்.

    இந்த முறை அவர்கள் டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்" என்று எச்சரித்தார்.

    அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.  

    • வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது.
    • பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது.

    வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் புயல் கரையை கடந்தது.  

    இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கோனசீமா பகுதியில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுனரும் 1 சிறுவனும் படுகாயமடைந்தனர்.

    அல்லூரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் மீட்டனர். ஸ்ரீகாகுளத்தில் சிவன் சிலை வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

    பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்கிடையே இன்று ஆந்திராவில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது.
    • சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

    வடக்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதி தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

    ஓவியர் ஜிதேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் இஷான் மற்றும் அர்மான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஆசிட் வீச்சு உண்மையில் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்டதாகக் கூறும் இளம் பெண், பழைய பகை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரை சிக்க வைக்க தனது குடும்பத்தினருடன் இந்த நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது

    சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சம்பவம் நடந்தபோது குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அந்த இடத்தில் இல்லை என்பது தெளிவாகியது. பெண்ணின் தந்தை அகில் கானுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தொடர்பாக பழைய தகராறு இருந்தது.

    இந்தச் சூழலில், அந்தப் பெண், அவரது தந்தை, சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் இணைந்து ஒரு பொய்யான வழக்கில் ஓவியர் மற்றும் உதவியாளர்களை சிக்க வைக்க இந்த சதித்திட்டத்தை தீட்டினர்.

    விசாரணையின் போது மற்றொரு முக்கிய விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிட் வீச்சு சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜிதேந்தரின் மனைவி, பெண்ணின் தந்தை அகில் கான் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

    இதற்கு பழிவாங்க ஆசிட் வீச்சு நாடகம் நடத்தப்பட்டதாக நம்புகிறோம். சதியில் ஈடுபட்ட அகில் கானை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.

    தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக நம்ப வைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டி, தனது கைகளில் கழிப்பறை கிளீனரை ஊற்றியதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.  

    ×